மலையக தோட்டத் தொழிலாளர்களும் பொருளாதார நெருக்கடியும்
வாழ்க்கைச் செலவு உயர்ந்துவிட்டது. போதிய வருமானம் இல்லாததால் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.உடனடி நிவாரணம் தேவை.சம்பள உயர்வு தேவை. இவ்வாறான குரல்களும்,கோரிக்கைகளும் தினமும் கேட்கக் கூடியதாகவுள்ளது.மாதவருமானம் அதாவது மாதாந்தம் ஏதோ ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளம் பெறுவோர் பற்றியே பேசப்படுகின்றது.
இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வழங்கும் தினக்கூலிக்கு தொழில் செய்யும் பெருந்தோட்டத் தொழிலாளரின் நிலைபற்றி எவரும் எடுத்துக் கூறுவதாயில்லை. குரல்கொடுத்து நிவாரணம் பெறமுயற்சிப்பதாயுமில்லை.இதுவே இன்றைய உண்மை நிலையாகவுள்ளது. பெருந்தோட்டங்களென்று கூறப்படும் தேயிலை,இறப்பர் தோட்டங்களில் நாளாந்த கூலிக்கு வேலை செய்யும் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை நிலை எவ்வாறுள்ளது? அவர்கள் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றனரா? அவர்கள் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் எவை என்பதை பொறுப்புடன் எவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள் கூட மௌனமாயிருப்பதைக் காணமுடிகின்றது.இன்று தோட்டத்தொழிலாளரை வைத்து அரசியல் நடத்தும் போக்கே வெளிப்படுகின்றதேயன்றி அவர்களது பிச்சினைகள், தேவைகள் தொடர்பில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தொழிற்சங்கங்களோ அரசியல் அமைப்புகளோ அக்கறை செலுத்துவதைக் காணக்கூடியதாயில்லை.தோட்டத்தொழிலாளர்களுக்கும் பசிவரும் என்பது புரிந்து கொள்ளப்படாமலுள்ளது. வெறுமனே தோட்டத்தொழிலாளரின் நிலை பரிதாபமாகவுள்ளது என்று கூறிக்கொண்டிருப்பதால் அவர்கள் பசியாறப்போவதில்லை.ஒருதோட்டத் தொழிலாளியின் நாட்சம்பளம் எவ்வளவு மாதாந்தம் அத்தொழிலாளி பெற்றுக்கொள்ளக்கூடிய வருமானம் எவ்வளவு என்பதைக் கூட சரியாகக் கணித்துத் தெரிந்து கொள்ளாத பலர் இன்று மேற்படி தோட்டத் தொழிலாளர் மத்தியிலே சந்தா வசூலித்து தொழிற்சங்கம் நடத்துகின்றனர்.
அத்தொழிற்சங்க வருமானத்தைக் கொண்டு அரசியலும் நடத்துகின்றனர்.இது வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானதும் கூட.தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட தொழிலாளர் ஒருவரின் தினக்கூலி ரூபா 405 என்று கூறப்படுகின்றது.இந்த நானூற்றைந்து ரூபா எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஊழியர் சேமலாபநிதி,ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ஆகியவற்றிற்கு உதவுதொகை செலுத்த வேண்டியது குறிப்பிட்ட நானூற்றைந்து ரூபாவில் 285 ரூபாவுக்கு மட்டுமே. அதாவது ஒரு தோட்டத் தொழிலாளியின் அடிப்படை நாளாந்த சம்பளம் 285 ரூபா மட்டுமே.
ஞாயிறு மற்றும் போயா தினம்,பகிரங்க விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய வேலை வழங்கப்படும் நாட்களில் 75மூ வீதமான நாட்களோ அதற்கும் மேற்பட்ட நாட்களோ வேலை செய்தால் மட்டுமே வரவுக்குரிய ஊக்குவிப்பாக நாளொன்றிற்கு ரூபா 90 வழங்கப்படும்.வேலை வழங்கப்பட்ட நாட்களில் 75மூ த்திற்கும் குறைவான நாட்கள் வேலை செய்பவர் நாளொன்றுக்கு 90 ரூபா இழப்பை சந்திக்க வேண்டும். நாளாந்த உற்பத்தி ஊக்குவிப்பாக 30 ரூபாவும் வழங்கப்படுகின்றது.அதாவது 75மூ க்குக் குறைவான வரவுநாட்கள் கொண்டவர் ஒருநாள் வேலைக்காகப்பெற்றுக் கொள்ளும் வருமானம் ரூபா 315 மட்டுமே. மேலோட்டமாக ஒரு தோட்டத்தொழிலாளியின் நாளாந்த சம்பளம் நானூற்றி ஐந்து ரூபா என்று கூறப்பட்டாலும் அதனை எல்லாத் தொழிலாளரும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் வேலைவழங்கப்பட்ட நாட்கள் 25 ஆக அமையும்போது அதாவது ஞாயிறு, போயா மற்றும் பகிரங்க விடுமுறை தினங்கள் நீங்கலாக குறிப்பிட்ட 25 நாட்களும் வேலை செய்த தொழிலாளி மாதச் சம்பளமாக ரூபா 10,125 ஐப் பெறமுடியும்.அதேதொழிலாளி வேலை வழங்கப்பட்ட நாட்களில் 75மூ த்தைப் பூர்த்தி செய்யக்கூடியதாகப் பத்தொன்பது நாட்கள் வேலை செய்தால் குறிப்பிட்ட மாதத்தில் ரூபா 7695 பெறுவார்.
ஒருநாள் குறைவாக அதாவது 18 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் பெற்றுக்கொள்ளும் மாத வருமானம் ரூபா 5670 மட்டுமே.
ஒருநாள் குறைவதால் வருமானத்தில் 2025 ரூபா இழப்பு ஏற்படுகின்றது.
மாதமொன்றின் இருபதுநாட்கள் வேலை வழங்கப்படும்போது குறிப்பிட்ட இருபது நாட்களும் வேலை செய்பவர் 8100 ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, 75மூ வரவு நாட்களான பதினைந்து நாட்கள் வேலை செய்பவர் ரூபா 6070 ஐச் சம்பளமாகப் பெற ஒருநாள் குறைவாக அதாவது 14 நாட்கள் வேலை செய்பவர் 4410 ரூபாவையே வருமானமாகப் பெறுகின்றார். ஒருநாள் குறைவடைவதால் மாத வருமானத்தில் 1665 ரூபா இழப்பு ஏற்படுகின்றது.
இலங்கையின் தனிநபர் வருமானம் இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களை எட்டிவிட்டதாகப் பெருமை பேசப்படுகின்றது.தோட்டத் தொழிலாளரும் இலங்கைக்குள் தான் வாழ்கிறார்கள்.தொழில் செய்கிறார்கள். அவர்களது வருமானம் எந்த அளவிலுள்ளது.சிலவேளை அவர்களை வழிநடத்துவதாகக் கூறிக் கொள்பவர்களின் வருமானம் அதற்கும் மேல் பலமடங்கு இருக்கலாம். அதனால் சாதாரண தோட்டத்தொழிலாளியின் வருமானம் புரியாமலுமிருக்கலாம்.
குறிப்பிட்ட சம்பளத்தொகை முழுமையாகத் தொழிலாளர் கைகளுக்குக் கிட்டுவதில்லை.தொழிற்சங்க சந்தா,ஊழியர் சேமலாப நிதி உதவி தொகை,கடன்கள் எனப்பல அறவீடுகளுக்குப் பின்பு எஞ்சியது மட்டுமே கிடைக்கின்றது. தோட்ட நிர்வாகத்திடம் பெற்றுக்கொண்ட கடன்கள் அறவிடப்பட்டு மிகுதியாக வழங்கப்படும் தொகையானது உணவுப்பொருட்கள் போன்றவை கடனாகப் பெற்றதற்கு செலுத்தும்போது மிகச்சிறு தொகையே சிலவேளைகளில் மிஞ்சும்.
வசதியற்ற இருப்பிடம்,சுகாதாரச் சீர்கேடு,குடிநீர்,மின்சாரம்,போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றமுடியாத அங்கலாய்ப்பு.பிள்ளைகளின் கல்விக்காக செலவிடப்பணமின்மை மருத்துவ வசதியின்மை.இவ்வாறு பல்வேறு இடர்பாடுகளுக்கு தினமும் முகம் கொடுக்கும் நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர்.
பாடசாலைகளுக்குச் செல்லமுடியாது இடைநடுவில் கல்வியைக் கைவிட்டு பல்வேறு தொழில்கள் செய்யும் நிலைக்கு மலையக பெருந்தோட்ட தமிழ்த்தொழிலாளரின் பிள்ளைகள் தள்ளப்பட்டுள்ளனர்.பாடசாலைக்கல்வியை இடைநடுவில் விட்டுவிட்டு தொழில்தேடி நகர்ப்புறங்களை நாடுவோர் எண்ணிக்கை ஆயிரமாயிரம்.பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்ற பலர் குடும்ப பாரத்தைச் சுமக்கவேண்டிய இக்கட்டான நிலையில் கடைச்சிப்பந்திகளாகவும் வீட்டுப்பணிப்பெண்களாகவும் இருப்பதைக் காணமுடிகின்றது.மலையகத்திற்குப் பல்கலைக்கழகம் கேட்கும் புத்திஜீவிகளுக்கும் இது புரியாமலிருப்பது பெரும் புதிராகும்.
இந்த நாட்டின் சுரண்டிப் பிழைக்கும் சமூகமல்ல பெருந்தோட்டத்துறை தமிழ்த் தொழிலாளர் சமூகம் என்பது எந்த மட்டத்திலும் புரிந்து கொள்ளப்படுவதாயில்லை.புரியவைப்பவர்கள் எவருமில்லை.
மலையக பெருந்தோட்டத்துறை தமிழ்த் தொழிலாளர் மத்தியிலே திட்டமிட்ட முறையில் கருத்தடை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது.அது தொடர்பில் மனிதாபிமான மனித உரிமை அமைப்புகளோ, மகளிர் அமைப்புகளோ வாய்திறந்ததாகவும் வரலாறு இல்லை.அதுமட்டுமல்ல அத்தொழிலாளர் சமுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அங்கும் இங்கும் பாய்வதில் காலத்தை ஓட்டும் தொழிற்சங்கவாதிகளோ,அரசியல்வாதிகளோ கூட தம்மை நம்பிய மக்களுக்காக குரல் கொடுக்க முன்வராதநிலைமையுள்ளது.
அண்மையிலே வந்த செய்தி இந்த நாட்டில் மனச்சாட்சி செத்துவிட்டதா மனிதப் பண்புகள் மாண்டுவிட்டனவா என்ற கேள்வியை எழுப்புவதாயுள்ளது. இருபெண் தோட்டத் தொழிலாளிகள் கருத்தரித்தமையைக் காரணம் காட்டி தோட்ட நிர்வாகம் வேலை வழங்க மறுத்துள்ளதாம்.கருத்தரிப்பது குற்றம்.கருத்தரிக்கும் உரிமை தோட்டத்தமிழ்ப் பெண் தொழிலாளருக்கு இல்லையென்று எங்காவது சட்டம் உள்ளதா? இது தோட்ட நிர்வாகங்களும் தொழிற்சங்கங்களும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஒரு சரத்தாகவுள்ளதோ தெரியவில்லை.
இது தொடர்பில் மௌனம் சாதித்தால் தோட்டத் தொழிலாளியொருவருக்கு திருமணம் செய்து கொள்ளும் உரிமையும் மறுக்கப்பட்டலாம். திருமணம் செய்து கொண்டால் தொழில்வழங்கப்படமாட்டாது என்று தோட்ட நிர்வாகங்கள் தீர்மானித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பொருளாதார ரீதியிலும் சமூக அடிப்படைத் தேவைகள் இழந்த நிலையிலும் மனித உரிமைகளைப் பறிக்கும் நிலையிலும் வாழும் பெருந்தோட்டத் துறைத் தமிழ் மக்களுக்காகக் கருணையுள்ளவர்களால் கண்ணீர்விட மட்டுமே முடியும்.
நன்றி- தினக்குரல்