தீக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்றியவர், சம்பள உயர்வுக்குப் பின்னரும் தொழிலாளர்களை திசைதிருப்ப முயல்கிறார். தமது பதவிகளையும் பட்டங்களையும் பாதுகாத்து, சுகபோகங்களை அனுபவிக்க நினைக்கும் அரசியல் பினாமிகளுக்கு, மலையகம் மிக விரைவில் பாடம் கற்றுத்தரும்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.
இது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இ.தொ.காவின் உப தலைவர்களில் ஒருவருமான ஏ.பிலிப்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஒளிவு மறைவின்றி, விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாதவாறு தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு இ.தொ.கா வழிவகுத்தது. 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை, இ.தொ.கா முன்னெடுத்திருந்தது. மற்றவர்கள் நினைப்பதைப் போன்று, இது விடயத்தில் இ.தொ.கா நாடகமாடவில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வானது, சமூகநய வஞ்சகர்களுக்குப் பேரிடியைக் கொடுத்திருக்கின்றது. முதலாளிமார் சம்மேளனத்திடம் பேரம் பேசுவதனூடாக, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, 1,000 ரூபாய் சம்பள உயர்வை இ.தொ.கா கோரியிருந்தது.
இதனை, மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக, இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இவ்விடயத்தில் மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்திருப்பது வேடிக்கையாகும்.
அச்சங்கத்தின் பொதுச் செயலாளர், மக்களைத் திசைதிருப்பும் நோக்கில், ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் முட்டுக்கட்டையாக இருந்தார்.
இடைக்காலக் கொடுப்பனவை மக்களுக்கு வழங்கும் நோக்கில், ஒரு நகைச்சுவைக் கூத்தை இரண்டு மாதங்கள் ஓட்டிமுடித்த அவர், எம்மீது குற்றம் சுமத்துவது எவ்விதத்தில் நியாயமாகும்?
இழுத்தடிப்புக்கும் இழுபறிக்கும் காரணமாக அமைந்த பொதுச் செயலாளர், எம்மை பொறுப்புக்கூற வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றார். முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் பழக்கம், இ.தொ.காவிடம் இல்லை.
ஒரு விடயத்தை இ.தொ.கா எடுத்துக்கொண்டால், அதை நிறைவேற்றியே தீரும். நிலுவைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கையை இ.தொ.கா எடுக்கும். குறித்த தொழிற்சங்கமொன்று, இதனைக் குழப்பியடிக்காமல் இருந்திருந்தால், நிலுவைக் கொடுப்பனவையும் பெற்றுக் கொடுத்திருக்கலாம்.
மலையக அரசியல் பாரம்பரியங்களுக்கு அப்பால் செயற்படும் நடவடிக்கைகளாலும் வெறும்வாய்ச் சவாடல்களாலும் பூச்சாண்டி காட்டுவதாலும், மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை காண முடியாது.
கூட்டுப்பேரம் பேசும் தன்மையை புரிந்து கொள்ளாதவர்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள்? இந்த 1,000 ரூபாயிலிருந்து 730 ரூபாய் கிடைக்கப்பெற்றது வரவேற்கக்கூடிய விடயமே. அதை விடுத்து, அதனை வியாக்கியானப்படுத்துவதோ அல்லது கொச்சைப்படுத்தி பேசுவதோ, தொழிலாளர் வர்க்கத்தை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமானதாகும்.
இது இவ்வாறிருக்க, கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு ஓர் அங்கமாக, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்வாங்கப்பட்டிருந்தபோதும், அதனையும் தாண்டி அவர் பேசியிருப்பது, தொழிற்சங்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மீறி இருப்பதுதான் உண்மை. இதுவிடயத்தில் அத்தொழிற்சங்கம், சட்ட நடவடிக்கையில் ஏன் ஈடுபடக் கூடாது என, இ.தொ.கா கேள்வி எழுப்புகின்றது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி- தமிழ் மிரர்