Friday, May 13, 2016

ரூ.2,500 இம்முறையும் இல்லை

அரசாங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம், 2,500 ரூபாயை பெற்றுத்தருவதாகவும் அது இம்மாத சம்பளத்துடன் இணைத்துகொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டப்போதிலும் அத்தொகையானது இம்மாத சம்பள பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

விலைவாசி அதிகரிப்பு மற்றும் வரிச்சுமை காரணமாக தாம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்கள்,   'ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியில்; அங்கம்வகிக்கும் மலையக தலைவர்கள் 2,500 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் இதற்கு தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண இணக்கம் தெரிவித்ததாகவும் கூறினர். அவர்கள் இதனைக் கூறி இன்று 5 மாதங்களாகிவிட்டன. ஆனால், தொழிலாளர்களின் சம்பளப் பட்டியலில் அந்த 2,500 ரூபாய் இதுவரை சேர்கப்படவில்லை' என மேலும் கூறினர். '

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது பங்குக்கு 1,000 ரூபாயை பெற்று கொடுப்பதாக கூறியது. அந்த 1,000 ரூபாயும் இதுவரை கிடைக்கவில்லை. உலக சந்தையில் தேயிலையின் விலை குறைந்ததால்தான் சம்பள பேச்சு இழுத்தடிக்கப்படுவதாக ஒருசாரார் கூறுகின்றனர். இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒவ்வொருதரப்பினரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருகின்றனர். ஊடகங்களில் அறிக்கை விடுகின்றனர். எனவே, மலையக தலைமைகள்  அறிக்கை அரசியலை விடுத்து  தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுகொடுக்க முன்வர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் 

மலையகத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்


ஜனாதிபதி மதுபான நிவாரணப் பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மது பாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம், கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தி அவர்களூடாக மக்களுக்கு அறிவுறுத்தும் செயற்திட்டம் 11-05-2016 கொத்மலை நகர மைதானத்தில் நடைபெற்றது. 

இதற்கு ஜனாதிபதி செயலகத்தின் மதுபான நிவாரணப் பிரிவின் அதிகாரிகள், கொத்மலை பிரதேச செயலாளர், மதுவரி திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, பொலிஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள், கல்வி அதிகாரிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். 

மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அதிதிகளின் உரையும் வீதி நாடகமும் நடைபெற்றது. 

தொடர்ந்து அரச ஊழியர்களினால் கொத்மலை சந்தைத் தொகுதி வர்த்தக நிலையங்களில் மது ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. 

இந்த ஊர்வலம் கொத்மலை நகரில் ஆரம்பித்து தவலந்தன்ன நகரம் வரை சென்றது. 

இச் செயற்திட்டம் போதை தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக மக்கள் தொடர்பு அதிகாரி நளின் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. 

சம்பளத்தை அதிகரிக்க கோரி ஹட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை


பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி ஹட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளது. 

இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு விரைவில் தீர்மானமொன்றை பெற்றுத் தருமாறு கோரியே இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் பெரியசாமி பிரதீபன் தலைமையில் எதிர்வரும் 15ம் திகதி காலை 10.00 மணிக்கு ஹட்டன் பஸ் நிலையத்தில் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. 

இதேவேளை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கூட்டு உடன்படிக்கை நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரையில் தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரிக்கும் நோக்குடன் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலார்களிடம் இருந்து கையொப்பங்களை சேகரிக்குமுகமாக இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.