அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்பட்ட 2500 ரூபா தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குனருமான எம்.வேங்குருசாமி இ.தொ.கா தலைமை காரியமான சௌமியபவனில் இடம்பெற்ற தோட்டத் தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மலையக சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்ற மலையக தொழிற்சங்கங்களோ, அல்லது இதர சமூக அமைப்புக்களோ எதுவாக இருந்தாலும் மலையக சமூகத்திற்காக பொறுப்பு கூறும் கடையிலிருந்து தவறு விடுவார்களேயானால் வரலாற்றில் மேலும் தவறிழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
மலையக சமூகம் நேற்று இன்றல்ல இரண்டு நூற்றாண்டுகளை கொண்ட சமூகமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. 2,500 ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என மார்தட்டிக் கொள்பவர்களின் அறிக்கை போர்களும் செய்தியாளர்களின் மாநாடுமே திருப்தியை கண்டதே தவிர வேறொன்றுமில்லை.
15,16 நாட்கள் வேலை செய்தாலே போதும் 2,500 ரூபா தொழிலாளர்களுக்கு கிடைத்துவிடும் என்று வாய் கூசாமல் கூறி வருபவர்கள் வேலை செய்த நாட்களுக்கு மாத்திரமே நாளொன்றுக்கு 100 ரூபா வழங்கப்படுகிறது. அதுவும் அரசாங்கத் தோட்டங்களில் இத்தொகை வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற இக் கொடுப்பனவானது பெருந்தோட்ட மக்களை மேலும் ஏமாற்றி அவர்களை கடனாளிகளாக கையேந்தும் நிலைமையை உருவாக்கியுள்ளது.
இ.தொ.கா தனது இலட்சியத்திலிருந்து விலகிச்செல்லாது தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரமாக விளங்கிய அமரர் எஸ்.தொண்டமானின் கொள்கைப்படி தொழிலாளர்களை நட்டத்தில் வீழ்த்தாமல் அவர்களது வருமானத்துக்கு தடையில்லாதவாறு சாத்வீக போராட்டங்கள் மூலமாக பிரச்சினைகளை வென்றெடுக்கும். 1984ம் ஆண்டு தொட்டமானின் அணுகுமுறைப்படி பிரார்த்தனை இயக்கம் முழு மலையக தோட்டங்கள் அனைத்திலும் தோன்றியது. மூன்று நாட்களுக்குப் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை விடயத்தில் அமரர் தொண்டமான் வெற்றி கண்டார்.
கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும். பிரச்சினை என்றிருந்தால் அதற்கான தீர்வு கட்டாயம் உண்டு. 2,500 ரூபா விடயத்தில் அவர்கள் கூறியபடி தொடர்ந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.