Friday, January 10, 2014

பெருந்தோட்ட நிர்வாக நிலங்கள் யாவும் அரசுடமை தொழிலாளர்கள் சொந்தம் பாராட்ட முடியாது

பெருந்தோட்டத்துறை நிர்வாகத்திலுள்ள விவசாய மற்றும் தரிசு நிலங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள், தோட்டப்பணியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சொந்தம் பாராட்டுவதோ, விவசாய பணிகளில் ஈடுபடுவதோ நீதிக்கு புறம்பானது என நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜித குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாவலப்பிட்டி பிரதேசம் போஹில், கிறீன்வூட், ருவன்புர, வெரலபத்தன சார்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தாங்கள் சார்ந்த தொழிற்சங்க பிரமுகர்கள் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், எம். மோகன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.எம். கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர் கெஹல்தெனிய ) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திந்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இவர்கள் இங்கு தெரிவிக்கையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தரிசு நிலம் காணியில் எங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் பற்றாக்குறைக்குமே இந்த தரிசு நிலத்தில் மா, பலா, தேயிலைச்செடி, கால்நடை வளர்ப்பு முதலியவற்றை பெரும்பான்மை இனத்தவர்களுடன் சேர்ந்து மேற்கொண்டு வருகிறோம். 2012ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தரிசு நிலத்தில் விவசாயம் செய்வோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
;. 
இதே­வேளை, மாதத்தில் 15 நாட்கள்    கூட தோட்டங்களில் தொழில் வழங்கப்படுவதில் நாளாந்த வாழ்வில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே இதனை செய்து வருகிறோம். சுpறிய ரக விவசாயிகளுக்கு சார்பாக மக்கள் நலன் காப்பதாக வெற்றி ஆரவாரம் ஏட்டளவிலேயே உள்ளது. அது பேரினப் பொருளாதாரக் கொள்கையாகவே காணப்படுகிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 
தேர்தல் காலங்களில் உறுதியளித்த எந்தவொரு திட்டமும் இன்றுவரை செயல்முறைப்படுத்தப்படவில்லை. கொள்கைப் பொதிகளை கட்டவிழ்த்து சூறையாடப்படுகின்றதே தவிர எங்களைப் போன்ற தொழிலாளர் வர்க்கத்தினருக்கு பாரபட்சமே எஞ்சியுள்ளது என பலரும் தெரிவிக்கின்றனர்

மலையக தமிழர்களின் நலனுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - பி.பி. தேவராஜ்

இலங்கைத் தமிழர்கள் என்றாலே அது வடக்கு மாகாணத் தமிழர்கள் என்ற கோணத்தில் நோக்கும் இந்திய அரசியல் கட்சிகளின் இந்த இந்த அணுகுமுறை மாற வேண்டும். மத்திய மாகாணத்தில் இலட்சக்கணக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காகவும் இந்தியா குரல் கொடுக்க வேண்டுமென இலங்கை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் பி.பி.தேவராஜ் டில்லியில் இடம்பெற்ற “பிரவாசி பாரதிய திவஸ்” மாநாட்டில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாங்கள் அனைவரும் மத்திய மாகாணத்தில் வசிப்பவர்கள். வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்கள் சுயாட்சி உரிமை கோருகின்றனர். அதேபோல, மத்திய மாகாணத்தில் உள்ள எங்களுக்கும் போதுமான மாகாண பிரதிநிதித்துவம், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனக்கோரி வருகிறோம். 

மலைவாழ் தமிழர்களின் மக்கள்தொகை, இலங்கைத் தமிழர்களுக்கு இணையானதாகும். நாங்கள் சிங்களர்கள், தமிழர்கள் எனப் பிரிவினை பார்க்காமல் ஒற்றுமையுடன் வாழ்கிறோம். 
இலங்கைத் தமிழர்கள் என்றாலே அது வடக்கு மாகாணத் தமிழர்கள் என்ற கோணத்தில் இந்திய அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. இந்த அணுகுமுறை மாற வேண்டும். மத்திய மாகாணத்தில் இந்திய வம்சாவளி இந்தியர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களின் நலன்களுக்காகவும் இந்தியா குரல் கொடுக்க வேண்டும். 

தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகுந்த கொந்தளிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால், இலங்கைத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய வம்சாவளி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் உணர வேண்டும். 

இலங்கை குடிமக்கள் என்ற முறையில் ஒரே நாட்டில் வசிக்கும் சிங்களர்களுடன் நல்லுறவு பேணுவது அவசியம். இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி திரும்ப வேண்டும். 

இந்தியர்களின் ஆதரவும் அன்பும் எப்போதும் எங்களுக்குத் தொடர வேண்டும். அது இன, மத அடிப்படையில் அல்லாது, நட்புறவு, சகோதரத்துவம் அடிப்படையில் இருக்க வேண்டும். 

இதற்குத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்திய அரசும் ஒத்துழைக்க வேண்டும்´ என்று கேட்டுக் கொண்டார் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ்.