Sunday, February 28, 2010

தொடரும் வீட்டு வேலைக்கு சிறுவரை அனுப்பும் அவலம்: பெற்றோர் விழிப்பு பெறுவது எப்போது?

பாடசாலை செல்லும் வயதில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படும் சிறுமியரின் எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியா கவே இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறான செயல்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதும் சில காலத்தின் பின்னர் மறந்து விடுவதாகவே போக்குகள் அமைந்துள்ளன.

கடந்தாண்டு செப்டம்பரில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள கழிவுநீர்க் கால்வாய் ஒன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட மஸ்கெலியா முள்ளுகாமம் மேற்பிரிவைச் சேர்ந்த சுமதி ஜீவராணி ஆகிய இருவரினது மரணத்துடன் சிறுமியரை வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவே நாம் கருதினோம்.

அப்போது அவர்களின் மரணம் பெருந்தோட்டப் பகுதி மக்களை அந்தளவிற்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருந்தது. தம் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்பிய பல பெற்றோருக்கு ஒரு படிப்பினையை தந்த அவ்விடயம் அப்போது எல்லோராலும் மறக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கிறது. அந்த சம்பவத்துடன் கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இனி கொழும்புக்கு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற உறுதிமொழியையும் வழங்கினார்கள். தொழிற்சங்கவாதிகள் மற்றும் சமூக நல அமைப்புக்கள் வீட்டு வேலைகளுக்கு அனுப்பும் பிள்ளைகளின் பெற்றோருக்கு அவர்களின் எதிர்காலம் தொடர்பாகவும் கல்வி கற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்ற உறுதிமொழியையும் தந்தனர்.

அது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மலையகம் முழுவதும் பல தொண்டர் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. வீட்டு வேலைகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இப்போது நிலைமை மீண்டும் பழைய பூஜ்ஜியத்துக்கே மாறியிருப்பதாக தோன்றுகிறது. பெற்றோர் தம் பிள்ளைகளை கொழும்பு நகர்ப்புறங்களுக்கு வீட்டு வேலைகளுக்கு அனுப்பவது இப்போதும் தொடர்கிறது.

குடும்ப வறுமை, பொருளாதார பிரச்சினை காரணமாக பிள்ளைகளை படிக்க வைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகக் நொண்டிச்சாட்டுக்களைக் கூறி ஒருசில பெற்றோர் மிகவும் இரகசியமாக தம் பிள்ளைகளை தரகர்களின் உதவியுடன் மீண்டும் வேலைக்கு அனுப்பி வைப்பதாக தெரியவந்துள்ளது.

மர்மமான முறையில் மரணமான சுமதி, ஜீவராணி ஆகிய சிறுமிகளின் விடயத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜரான சட்டத்தரணிகள் இலவசமாகவே பெற்றோர் தரப்பில் வாதாடினர்.

பெற்றோர் தரப்பில் தவறுகள் இருந்தும் இவ்வாறான அவல நிலை வேறெந்த பெற்றோருக்கும் வந்துவிடக்கூடாது எனக் கருதிய பல தொண்டர் அமைப்புகள் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்தன.

வேள்ட்விஷன் அமைப்பு 19 இலட்ச ரூபா செலவில் பாலர் பாடசாலையை அத்தோட்டத்தில் கட்டிக்கொடுத்திருக்கிறது. தற்போது அதில் 24ற்கு மேற்பட்ட சிறுவர்கள் அப்பாடசாலையில் கற்று வருகிறார்கள்.

முதலாம் தரத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு அந்நிறுவனம் தேவையான பாடப் புத்தகங்கள், உடைகள், பாதணி உட்பட பல பாடசாலை உபகரணங்களை கொடுத்து உதவி வருகிறது.

இவ்வாறு பல உதவிகள் செய்து கொடுத்த போதிலும் பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதாகத் தெரியவில்லை. பாடசாலை செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

அத்தோட்டத்திலுள்ள இளமொட்டு இளைஞர் கழகத்தின் செயலாளர் என்.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், சிவனொளிபாத மலைக்கு அண்மித்ததாக உள்ள மலைப்பகுதியில் இத்தோட்டம் அமைந்துள்ளது. 6000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் இருக்கும் இத்தோட்டத்தில் மாணவர்கள் கற்பதற்கான எந்தவிதமான வசதிகளோ? சூழலோ இல்லையென்றே கூறுகிறார்.

சிறுவர்களை தரம் ஒன்றில் சேர்க்க வேண்டுமானால் மூன்றரை கி.மீ. தொலைவிலுள்ள நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலயத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது. இந்நிலையில் அச்சிறார்கள் காலை உணவை சரியாக உட்கொள்ளாது பகல் வேளையில் வீடு திரும்பும் வழியில் பாதியில் மயக்கமுற்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

சிறுவர்கள் மூன்றரை கிலோ மீற்றர் தூரம் மலையேறி தினமும் செல்வதென்பது இயலாத காரியமாகும். இந்த சிறார்களுக்கு போஷாக்கான உணவை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் பகல் உணவு வழங்கப் படுகிறது. அவ்வாறான ஒரு திட்டத்தை மலையகத்திலுள்ள மிகவும் பின்தங்கிய தோட்டப்பகுதிகளுக்கு வழங்கினால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.

இளைஞர் கழகத் தலைவர் எம்.ரஞ்சன்குமார் கருத்து தெரிவிக்கையில், என்னதான் தொண்டு நிறுவனங்கள் உதவிகளைச் செய்தாலும் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பு இல்லாமல் பிள்ளைகளை வளர்த்தெடுக்க முடியாது என்றார். இத் தோட்டத்தில் சுமார் 50ற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரையும் எப்படியாவது பாடசாலைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும்.

குறைந்த காலத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த 60 பேருக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருக்கின்றனர்.

அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளின் கடமையாகும் என்கிறார் ரஞ்சன்குமார்.

தோட்டத்தில் சரியாக வேலை கொடுப்பதில்லை. வேலை நாள் 21 நாள் என்றால் சம்பளமும் குறைவாக கிடைக்கும். பல்வேறு சிரமங்களின் மத்தியிலேயே குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

தற்போது கடுமையான குளிரும் வெப்பமும் நிலவுவதால் தோட்ட நிர்வாகம் கேட்கும் கிலோ கொழுந்தை பறிக்க முடியாதிருக்கிறது. மழைக்காலங்களில் அட்டை எமது இரத்தத்தை உறிஞ்சுகிறது. அட்டை இரத்தத்தை உறிஞ்சினால் பரவாயில்லை.

ஆனால் அதனால் சரும நோய்க்கு ஆளாகிறோம். இந்நிலையில் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை எப்படி வரும் என கேள்வியெழுப்புகிறார் தொழிலாளியொருவர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் இயங்கும் சமூக நல நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த போதிலும் அதனை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெற்றோரின் பங்களிப்பில்லாமல் எதனையும் செய்ய முடியாதென்பதற்கு மஸ்கெலியா முள்ளுகாமம் மேற்பிரிவு சிறந்த உதாரணமாகும். எனவே மிகவும் பின்தங்கிய பெருந்தோட்டப் பகுதிகள் மீது மலையகத் தொழிற்சங்கத் தலைமைகள் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். எதிர்காலச் சந்ததியினர் ஒரு கல்வியறிவுள்ள சமுதாயமாக மாற வேண்டுமானால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


மஸ்கெலிய - தி. சரண்யா

கூட்டு ஒப்பந்தம் அவசியமானாலும் சரத்துக்களில் மாற்றம் தேவை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அவர்களின் சேமநலன்கள் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டு அமைப்புக்குமிடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

இரு தரப்பிற்குமிடையே பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்று இறுதி முடிவை எட்டுவதற்குள் பல மாதங்கள் சென்று விடுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும், ஏனைய தொழிற்சங்கங்களும் கூட கடந்த காலங்களில் ஒப்பந்த காலத்தில் மட்டும் பேசுவதும் பின்னர் அது பற்றி எவரும் பேசுவது கிடையாது.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமான வேளையிலும், அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரும், பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே பல்வேறு விதமான சலசலப்புக்கள், ஒப்பந்த கைச்சாத்திடலுக்குப் பின்னர் இனிபேசி என்ன பயன் என்ற நிலையில் படிப்படியாக அனைத்து தரப்பினரும் மறந்து விடுகின்றனர்.

கூட்டு ஒப்பந்தம் சரியோ, பிழையோ தோட்டத் தொழிலாளர்களுக்கான அதிகரித்த சம்பளம் நிலுவைக் கொடுப்பனவு என்பன வழங்கப்பட்டதால் பெருந்தொகைப் பணம் கையில் கிடைத்த மகிழ்ச்சிப் பிரவாகத்தில் திளைத்திருந்தனர்.

ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினால் போல் விடுமுறைக் கொடுப்பனவு வழங்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதே மீண்டும் சலசலப்பும் முணுமுணுப்பும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

தோட்டத்திற்குத் தோட்டம், மாவட்டத்திற்கு மாவட்டம், கம்பனிக்கு கம்பனி மாறுபட்ட நிர்வாக முறைகள் காணப்படுகின்றன. முறையற்ற கொடுப்பனவினை எதிர்த்து ஆங்காங்கே தொழிலாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பும் போராட்ட நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

துரை நல்லவர், பிரம்பு பொல்லாதது என்பது போல் கூட்டு ஒப்பந்தம் நல்லதாகக் கணிக்கப்பட்டாலும் அதன் சரத்துக்கள் தொழிலாளர்களை பல்வேறு வகையில் பாதிப்படையச் செய்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த தொழிற் சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிலாளர் நல அமைப்புக்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இதற்கமைவாக பெருந்தோட்டத் துறை சமூக மாமன்றம் சில கால தாமதத்திற்குப் பின்னர் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றினை கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் மண்டபத்தில் நடாத்தியது. இச்செயலமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் எழுந்துள்ள நிலைமைகள் பற்றி ஆராயப்பட்டது.

இலங்கை செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓ. ஏ. இராமையா தலைமையில் தொழிற்சங்க பிரமுகர்களான எஸ். முருகையா, ஐயாத்துரை, ஆ. முத்துலிங்கம், ஆர். எம். கிருஷ்ணசாமி, அரச சார்பற்ற நிறுவனங்களின் சார்பாக ஏ. சி. ஆர். ஜோன், கே. சந்திரசேகரன், கே. யோகேஸ்வரி, வி. அந்தனிஸ், கே. அன்ன லெட்சுமி ஆகியோர் பங்கு கொண்ட னர். பெருமளவிலான தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட இவ்அமர்வில் வளப்பகிர்வாளராக ஹட்டன் தொழிற் திணைக்கள சிரேஷ்ட தொழில் அதிகாரி வி. மருதடியான் கூட்டு ஒப்பந்தத்தின் தன்மைகள் விடுமுறைக் கொடுப்பனவு போன்ற பல்வேறு விடயங்கள் சார்ந்த விளக்கங்களை அளித்ததோடு பங்குபற்றுனரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.


சிரேஷ்ட தொழில் அதிகாரி

வி. மருதடியான்

கூட்டு ஒப்பந்தமென்பது சட்டமுறையான ஒரு சாசனமாகும். இதில் கிடைக்கப் பெறும் அதிகூடிய நன்மையை தடுக்க முடியாது. இதனூடான பயனாளிகள் கூடுதலாக இருந்தால் தான் அதனை தொழில் ஆணையாளர் அனுமதிப்பார். சுமார். 500 வருடங்க ளுக்கு முன்பதாகவே கூட்டு ஒப்பந்த முறைமை கைத்தொழில் புரட்சியினூ டாக அமுலுக்கு வந்தது.

ஊழியர் சேமலாப நிதித் திட்டமும் கூட்டு ஒப்பந்த முறைமையின் வெளிப்பாடாக 1958 இல் நடைமுறைக்கு வந்தது எனலாம். கூட்டு ஒப்பந்தத்தை விமர்சிப்பதைவிட அதன் சரத்துக்களையே விமர்சிக்க முடியும். அதன் அபிலாஷைகள் ஒருவரால் மீறப்படலாம்.

அப்படி மீறுமிடத்து தொழில் ஆணையாளரால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். சம்பள நிர்ணய சபையின் மூலமாகத் தான் முன்னர் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபையில் 42க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இச்சபை ஆகக் கூடுதலாக 6000ஃ- ரூபாய் வரை சம்பளமாக நிர்ணயம் செய்ய தகுதி பெற்றுள்ளது.

கூட்டு ஒப்பந்தமானது இதற்கும் மேலான தொகையை பெற்றுக் கொடுக்க வாய்ப்பளிக்கிறது. எனினும் இதன் நடைமுறைகளின் போது பல்வேறு மீறல்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் சரியான முறையில் எமது திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.

விடுமுறை சம்பளக் கொடுப்பனவானது தனியான சட்டவரைவுகளை கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பிரச்சினைகள் எழுமாயின் தொழிற் திணைக்களத்திற்கு முறையிட முடியும்.

விடுமுறை தினங்களில் வேலை செய்யுமிடத்து வழமை போலவே வேலை செய்தாலும் தொழிலாளளிக்கு ஒன்றரை பெயர் வழங்கப்பட வேண்டும். விடுமுறைத் தினம் என்பதால் கூடுதல் வேலைவாங்க முடியாது என்றார்.


தொழிலாளர் விடுதலை

முன்னணியின் தலைவர்

ரி. ஐயாத்துரை

கூட்டு ஒப்பந்தத்தை நியாயமானது என பேசுவோர் அதனை எதிர்ப்போர், அதனைப் பற்றி பேசி பயனடையும் அரசியல் வாதிகள் என மூன்று வகையில் பார்க்க வேண்டும்.

1987 இல் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இ. தொ. கா.விற்கும் கூட்டு ஒப்பந்தம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் மாதாமாதம் சேவையடிப்படையில் பென்சன் வழங்கப்பட்டது.

இலவச வீடு, மருத்துவம் கிடைத்தது. பின்னர் மாத பென்சன் மாறி 35 வருடம் சேவை செய்த 60 வயதுடைய ஆண்களுக்கு 900ஃ- ரூபாவும் பெண்களுக்கு 750ஃ-, இந்தியா போவோருக்கு 1500ஃ- ரூபாவும் வழங்கப்பட்டு அதில் ஈ.பி.எப். உம் கழிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பல பேச்சுக்கள் நடைபெற்று நீதியான தீர்ப்பும் கிட்டியது.

முன்னர் 12 இறாத்தல் கொழுந்து பறித்த நிலையில் இப்பொழுது அது 23 இறாத்தலாக கூடியுள்ளது. 1942 இல் பொகவந்தலாவை எட்டியாகல தொழிலாளர்கள் 12 இறாத்தலே எடுக்க முடியுமென போராடினர்.

அதில் வெற்றியும் கண்டனர். கொட்டியாகல தோட்டத்தின் 8 டிவிசன்களும் இன்றும் 12 கிலோ தான் எடுக்கின்றன. ஆகவே, விமர்சனத்திற்கு உள்ளாகிய கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் மீளாய்வு செய்யப்படல் வேண்டும் என்றார்.


ஆ. முத்துலிங்கம்,

பொதுச் செயலாளர், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்,

கூட்டு ஒப்பந்தம் பல நன்மைகளை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக முன்னர் தோட்ட வைத்தியசாலையில் பிரசவம் நடந்தால் அதற்கான வைத்திய செலவுத் தொகை கழிக்கப்படும். கூட்டு ஒப்பந்தம் அதைத் தடுத்துள்ளது. ஆரம்பத்தில் இ. தொ. கா. மாத்திரம் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது.

பின்னர் இ. தே. தோ. தொ. ச. சேர்ந்து கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் அமரர் எஸ். நடேசன் அவர்களினது பெரும் முயற்சியால் உருவான கூட்டுக் கமிட்டியும் ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் வாய்ப்பை பெற்று நன்மை தரக் கூடிய விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி ஆலோசனை களை முன்வைத்தது.

2 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்டுள்ள இலங்கையில் 80 இலட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் 22மூ தோட்டத் தொழிலாளர்கள். புதிய சங்கங்களின் அதிகரிப்பும் பழைய சங்கங்களின் மறைவும் அரசியலுக்காக வருகின்ற தொழிற்சங்கங்களும் அதிகரிப்பதாலேயே பிரச்சினைகள் தீராமலிருக்கின்றன.

தொழிற்சங்கம் பலமாக இருந்தால்தான் பிரச்சினைகள் தீருமேயொழிய அது பலவீனப்பட்டால் ஒற்றுமை பறிபோகும். வங்கித் தொழிலாளர்க்கு ஒரு சங்கமென்றால் நம்மில் ஏன் பல சங்கம் உருவாக வேண்டும்? சீர்தூக்கி பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


ஆர். எம். கிருஷ்ணசாமி

- தலைவர் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்,

கூட்டு ஒப்பந்தமானது பெருந்தோட்ட மக்கள் மத்தியில் பல்வேறு விதமான சலசலப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுத் தொழிற் சங்கமானது சம்பள உயர்வு தொடர்பாக அன்று பல்வேறு விதத்தில் கூடிப்பேசி ஆராய்ந்து வந்தது.

எனினும் காலப் போக்கில் அதன் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எமை அதிலிருந்து ஒதுங்கியிருக்கத் தூண்டியது. இச்சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே..வேலாயுதம் சகல தொழிற்சங்கங்களையும் கூட்டி ஆராய்ந்தார்.

எனினும் சிலர் எடுத்த தனிப்பட்ட தீர்மானங்களால் அதன் பின்விளைவுகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. மடுல்சீமை ஊவாகலை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போனஸ் கொடுப்பனவு பழைய கொடுப்பனவு முறையிலேயே கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தொழிலாளர்களிடையே அமைதியற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தோட்டத்திற்கு தோட்டம் நடைமுறைகள் மாறியுள்ளன. ஊழியர் சேமலாப நிதியினை பிணையாக வைத்து கடன் வாங்கியவர்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். புரோக்கர்கள் நன்மையடைகின்றனர். எனவே, இச்சம்பள விடயமானது மீளாய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

பல சம்பளத் துண்டுகளை காட்டியும் அவரால் விளக்கமளிக்கப்பட்டது என்றார்.


கே. யோகேஸ்வரி

- சமூக அபிவிருத்தி நிறுவனம் கண்டி,

1992 ஆம் ஆண்டிற்கு பின்னர் பெருந்தோட்டங்களில் ஆண் தொழிலாளர்களின் விகிதாசாரம் குறைக்கப்படுகிறது. அதிகமான பெண் தொழிலாளர்களே நிரந்தர வதிவிடத் தொழிலாளர்களாக உள்ளனர்.

ஆண்கள் தட்டிக் கேட்பார்கள் என்ற பயத்தில் பெண் தொழிலாளர்களை மௌனிகளாக்கி இலாபம் தீட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தோட்டக் கமிட்டிகள் தற்போது இயங்குவதில்லை.

மினிட் புத்தகம் சமர்ப்பிக்கப்படுவதுமில்லை. இது நிர்வாகத்தி ற்கு வாய்ப்பாக அமைகிறது. கூட்டு ஒப்பந்தம் குறைபாடு களை கொண்டிருக்கிறது. கூட்டு ஒப்பந்தத்தை எதிர்க்க கூட்டு முயற்சி தேவை.

கே. சந்திரசேகரன் -

இணைப்பாளர், பிரிடோ.

மக்களுக்கு தெளிவில்லாத கூட்டு ஒப்பந்தம் அவர்களை சுரண்டி சுகங்காணுகிறது.

10ஃ- விலை உயர்த்தி மறுபக்கத்தில் 21 கிலோ அதிக கொழுந்தை உயர்த்தியுள்ளனர்.

மக்களின் உடல் உழைப்பு சுரண்டப்படுகிறது. வைத்தியசாலை செலவு அதிகரிக்கப்படுகிறது.

முண்டியடித்துக் கொண்டு கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள தவறிவிட்டனர்.

வரட்சிக் காலத்தில் பெயருக்காக வரண்ட தேயிலை நிலங்களில் அதிகம் கொழுந்து பறிக்க முனைவதால் இளம் பெண் தொழிலாளர்கள் தமது அழகை இழந்து வருகின்றனர்.

தொழிலாளர்களுக்குரிய நல்ல விடயங்களை கொள்ளாத இவ்வொப்பந்தம் மொத்தத்தில் அடிமைச் சுரண்டலுக்கு அத்திவாரமிடுகிறது எனலாம். கைச்சாத்திட்டவர்கள் தமது கடமையை மறந்து விட்டார்கள் எனத் தெரிவித்தார்.


வி. அந்தனிஸ்

- ஊவா தொழிலாளர் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர்

கருத்துத் தெரிவிக்கையில்,

கூட்டு ஒப்பந்தம் ஒரு தொழில் ஒப்பந்தம். சமூக நிலை சார்ந்து செயற்பட வேண்டிய தொழிற்சங்கங்கள் சுயநலத்துடன் செயற்படுகின்றன.

தொழில் பாதுகாப்பு இதில் உறுதிப்படுத்தப்படவில்லை. தகவலின்றி பேசுகின்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் தம்மை மீளாய்வு செய்ய வேண்டும்.

ஓ. ஏ. இராமையா, இணைப்பாளர், எஸ். முருகையா ஆகியோர் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தையா வேலாயுதம்

நன்றி-தினகரன் வாரமஞ்சரி