Saturday, October 17, 2015

பண்டாரவளையில் பாரிய மண்சரிவு : 240 பேர் இடம்பெயர்வு

பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக  பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரவளை, தியகலை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 240 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தியகலை பகுதியில் குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப் பகுதியில் வசித்து வந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த  240 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்ட்ட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிடுகின்றார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 8 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தவிர சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பரவலாக மழை பெய்துவருகின்றமையால் மண்மேடுகள் மற்றும் உயர் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கேட்டுள்ளார்.
-News1st-

குளவி தாக்குதலில் 51 பேர் பாதிப்பு; 11 பேர் வைத்தியசாலையில்

புல்லாவ ஸ்டெலன்பேர்க் தோட்டம், வீடன் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களை குளவி தாக்கியதில் 51 பேர் பாதிப்புக்குள்ளாகினர். 

இவர்களில் பெண்கள் 50 பேரும், தோட்டக் கணக்குப்பிள்ளை ஒருவரும் அடங்குவர். 

இவர்களில் 11 பேர் பாரிய பாதிப்புக்குள்ளாகி 7 பேர் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

3 பேர் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் நேற்று (16-10-2015) பகல் வேலையில் இடம் பெற்றுள்ளது. 

குறித்த பெண்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பிரதேசத்தில் கழுகு ஒன்று பாம்பு ஒன்றை இறைக்காக பெற்றுக் கொள்ள முயற்சித்த போது கழுகின் சிறகு அருகில் இருந்த குளவி கூட்டில் பட்டதால் குளவுக் கூடு கலைந்ததாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.