தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன. ஆனாலும் தொழிற்சங்கங்களின் அணுகுமுறைகள் முரண்பட்டதாகக் காணப்படுகின்றன. அதிகாரப்போட்டி, மாறுபட்ட கொள்கைத் திட்டம், மலையகத் தலைமைகளிடத்தில் இருந்து வருகின்ற வரட்டு கௌரவங்கள் ஆகியவற்றின் காரணமாக பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் மாத்திரமின்றி அப்பாவித் தொழிலாளர்களும் ஏமாற்றப்பட்டு, தோல்வியடைந்து, சோர்ந்து போகின்றனர் என்று ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயமாக அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே, தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன. ஆனாலும் அத் தொழிற்சங்கங்களின் அணுகுமுறைகள் முரண்பட்ட வகையிலேயே அமைந்துள்ளன. தமக்கே அனைத்து ஆக்கற் சக்திகளும் இருப்பதாக நினைத்தே தற்போது மலையகத் தலைமைகள் செயற்பட்டு வருவதைக் காண முடிகிறது. அதிகாரப்போட்டி, மாறுபட்ட கொள்கைத் திட்டம், மலையகத் தலைமைகளிடத்தில் இருந்துவருகின்ற வரட்டு கௌரவங்கள் ஆகியவற்றின் காரணமாக பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் மாத்திரமின்றி அப்பாவித் தொழிலாளர்களும் ஏமாற்றப்பட்டு, தோல்வியடைந்து, சோர்ந்து போகின்றனர்.
தோட்டத் தொழிலாளர் சமூகம் என்ற ரீதியில் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து அனைத்து மலையக சிறிய, பெரிய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வினை முன்னிலைப்படுத்தி ஒன்றிணைந்த போராட்டங்களையும் ஒன்றிணைந்த ஆக்கற் காரியங்களையும் முன்னெடுக்க வேண்டும். இப்போராட்டங்கள் அரசையும், தோட்டங்களை பொறுப்பேற்றிருக்கும் முதலாளிமார் சம்மேளனத்தையும் வலியுறுத்தி, அழுத்தங்களைக் கொடுக்கக்கூடியதாகவே அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் மாத்திரமே பிரதிபலனைக் காணக்கூடியதாக இருக்கும்.
மலையக தொழிற்சங்கங்கள் தனித்தனியாக பிரிந்து நின்று போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் போராட்டம் பலவீனமடையவே செய்யும். அனைத்து தொழிற்சங்கங்களின் இலக்கு சம்பள உயர்வு விடயத்தில் ஒன்றானதாக இருக்கும் போது அத்தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதன் பயனை தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்க கூடியதாக இருக்கும். அரசாங்கத்தினால் தனியார் துறையினருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் கிடைக்காமை அடிப்படை உரிமை மீறலாகும். இதனை அனைவரும் புரிந்துகொண்டு செயற்படல் வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டுமென்று அடிக்கடி கூறி வந்த போதிலும் அக்கூற்று இதுவரையில் போலித்தனமானதான அமைந்து விட்டமை வேதனைக்குரியதாகும்.
தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்வினை தோட்டத் தொழிலாளர்களினால் எதிர்கொள்ள முடியாது அவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாமையினால் அவர்கள் தோட்டத் தொழில் துறையிலிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலை தொடரும் பட்சத்தில் தொழிலாளர்கள் இன்றி தோட்டத் தொழில் துறையினையே மூடவேண்டிய அவலம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற சம்பளமின்மை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தும் நீடிக்க அனுமதிக்க முடியாது. இந்நிலை நீடித்து பெருந்தோட்டங்கள் மூட வேண்டிய சூழல் ஏற்படுமேயானால் அத் தோட்டங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் சாபங்களுக்கு அனைத்து மலையக தலைமைகளும் உட்படவேண்டிவரும் என்றார்.
|
Friday, May 27, 2016
தோட்டத்திற்கு எக்காரணம் கொண்டும் செல்ல மாட்டோம் வேறு எங்காவது வீடுகளை அமைத்து தாருங்கள்
மண்சரிவு ஏற்பட்டு 16 உயிர்களை காவு கொண்ட புளத்கொஹுபிட்டிய களுபான தோட்டத்திற்கு இனிமேல் எக் காரணம் கொண்டும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்களுக்கு வேறு எங்காவது வீடுகளை அமைத்து தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மன்றாட்டமாக கோருகின்றோம் என்று புளத்கோஹுபிட்டிய மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். தயவு செய்து களுபான தோட்டத்திற்கு செல்லுமாறு எங்களை வற்புறுத்த வேண்டாம். அதனை ஒரு பாவப்பட்ட இடமாகவே பார்க்கின்றோம். எங்களால் இனிமேல் புளத்கோஹுபிட்டிய களுப்பான தோட்டத்தில் நிம்மதியாக வாழவே முடியாது என்றும் அந்த மக்கள் குமுறுகின்றனர்.
புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவையடுத்து, அங்கிருந்து இடம்பெயர்ந்து யக்கல மகாவித்தியாலயத்தில் 57 குடும்பங்கள் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள அந்த மக்கள் இந்த உருக்கமான கோரிக்கையை முன்வைத்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் துயரத்தை வெளியிடுகையில்,
உங்களிடம் ஒருவிடயத்தை மன்றாடிக் கோருகின்றோம். நாங்கள் கோருகின்ற இந்த விடயத்தை தயவு செய்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறுங்கள். புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டத்தில் நாம் இதுவரை காலமும் வசித்தோம். ஆனால் அங்கு ஏற்பட்ட மண்சரிவினால் எமது உறவுகள் 16 பேரை இழந்துவிட்டோம். அந்த 16 பேரும் மண்னோடு மண்ணாக புதைந்து போகினர்.
அந்த வகையில் பார்க்கும்போது புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டம் வாழ்வதற்கு ஆபத்தான இடமென்பது நிருபனமாகிவிட்டது. எனவே எக்காரணம் கொண்டும் இதன்பின்னர் புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டத்திற்கு நாங்கள் செல்லவே மாட்டோம். அங்கு சென்று எம்மால் ஒருபோதும் நிம்மியாக வாழ முடியாது.இதனை புரிந்து கொள்ளுங்கள். எமது நிலைமையை உணருங்கள். எமது 16 உறவுகளை பரித்தேடுத்த அந்த தோட்டத்தில் எம்மால் இனி வாழ முடியாது.
எனவே எமக்கு வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து தாருங்கள் நாங்கள் அங்கிருந்து கொண்டு வேண்டுமானால் களுபான தோட்டத்திற்கு தொழிலுக்காக சென்று வரமுடியும். ஆனால் களுபான தோட்டத்தில் வாழ மாட்டோம்.
மண்சரிவு ஏற்பட்டதன் பின்னர் எமது பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் திகாம்பரம் புதிய வீடுகளை அமைத்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் களுபான தோட்டத்தில் எமக்கு வீடுகளை அமைக்க வேண்டாம். மாறாக வேறு ஓர் இடத்தில் எமக்கு வீடுகளை அமைத்து தர வேண்டுமென அமைச்சர் திகாம்பரத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசனும் எமக்கு ஆதரவு வழங்குவார் என நம்புகிறோம். தயவு செய்து எம்மை கைவிட்டு விட வேண்டாம். இந்த விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்து செல்லுங்கள் என்றனர்.
Subscribe to:
Posts (Atom)