Tuesday, June 26, 2018


சுகாதாரத் துறை தேசிய மயமாக வேண்டும்

பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டுமெனின், பெருந்தோட்டப்பகுதி கல்வி முறை தேசிய மயமாக்கப்பட்டதைப் போன்று, சுகாதாரத்துறையும் தேசிய மயமாக்கப்பட வேண்டுமென கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.பி.சிவபிரகாசம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, பெருந்தோட்டத் துறையின் தரக்குறைவான சுகாதார நிலை, காலனித்துவ யுகம் தொடக்கம், தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டது வரை முன்னேற்றகரமில்லாத  நிலைமையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக, பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை, பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.

தேசிய மயமாக்கப்பட்ட பெருந்தோட்டக் கல்வித் துறையைப் போன்று, பெருந்தோட்டத் துறையின் மருத்துவ சுகாதாரத்துறையையும் தேசிய நீரோட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு, நீண்ட காலமாக சுகாதாரத் துறையில் புறம் தள்ளப்பட்டுள்ள பெருந்தோட்டச் சமூகத்தினர்  எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படல் வேண்டும். 

நாட்டில் தேசிய சுகாதார சேவையிலிருந்து புறம் தள்ளப்பட்டுள்ள இச்சமூகம் இதுவரை காலமும் தோட்டப்பகுதிகளை நிர்வகிக்கும் கம்பனிகள, தனியார் தோட்ட நிறுவனங்கள், அரச தோட்ட நிர்வாகிகள், அபிவிருத்திச் சபை போன்றவற்றின்  ஊடாக முன்னெடுக்கப்படும் சுகாதாரத்துறை தரம் குறைவானவை. 

கடந்த கால அரசாங்கங்கள் பெருந்தோட்டச் சமூகத்தினரின் அடிப்படை வசதிகளை உயர்த்துவதற்காக முயற்சிகளை கொண்டிருந்தாலும், அது முழுமையடையவில்லை.