இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிப்போர் தமது பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட தெரிவு செய்யும் ஒரு விடயம் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. மத்தியதர வர்க்கத்தினரின் தெரிவும் அதுவாகவே உள்ளது. இலங்கையை பொறுத்தவரை இது சற்று அதிகம். காரணம் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் மூன்றாவது இடத்தில் இதை அடக்குமளவிற்கு இதன் ஆதிக்கம் உள்ளது.
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்ற செல்வோரின் தொகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்லும் பெருந்தோட்ட பகுதி வாழ் பெண்களின் நிலையோ மிகவும் கவலைக்குரியது.
தமது சம்பள விகிதங்கள் வேலை நேரங்கள் பற்றிய போதிய விளக்கங்களின்றி தமது குடும்ப சூழ்நிலையை மட்டும் கருத்திற்கொண்டு வெளிநாடு செல்லும் இவர்கள் அங்கு சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.
பல இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் உயிர் பிழைத்து நாடு திரும:புவதே பெரிய விடயமாகிவிட்டது. கடந்த வருடத்தில் மட்டும் பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வெளிநாடு சென்ற பெண்களில் பலர் தாம் கடமையாற்றிய வீடுகளில் இனந்தெரியாத முறையில் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும் அவர்களின் உடல்கள் கூட இரண்டு மாதங்கள் கழித்தே சொந்தங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வெளிநாடு செல்லும் பெண்களுக்குரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் எந்த முகவர் நிலையம் மூலம் செல்கின்றனர். அது பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து பரிசீலித்து பார்க்கவும் எவரும் முன்வருவதில்லை.
ஒரு சில பெண்கள் தமது குழந்தைகளை வேறு ஒருவரின் பராமரிப்பில் விட்டுச் செல்லும் நிலையில் தற்போதைய பொருளாதார சூழ்நிலை உள்ளது. எனினும் அவர்கள் செல்லுமிடத்தில் நிம்மதியாக இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியே. ஆகவே இது தொடர்பில் அக்கறையுள்ள சிவில் மற்றும் பெண்கள் தொடர்பான இயக்கங்கள் இவர்களின் நிலை தொடர்பில் ஆராய பெருந்தோட்டப் பகுதிகளில் அமைப்பொன்றை நிறுவ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைப்பார்களாயின் ஒரு சமூகத்தின் வாழ்வியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்க தீர்வு காண்பதாக அமையும்.
- சூரியகாந்தி-
No comments:
Post a Comment