நுவரெலியா மாவட்டத்தின் வௌ;வேறு பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்குள் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், புசல்லாவ, டெல்டாபுர, கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடமொன்று மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் இக்கட்டடத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம், நுவரெலியா, யுனிக்விவ் கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியொன்றின் சமையலறைப் பகுதி நேற்று திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. இருப்பினும் உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை. கொத்மலையின் சில பிரதேசங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா - கண்டி வீதியிலுள்ள டொப்பஸ் என்ற இடத்திலுள்ள தேயிலைத் தோட்டமொன்று நேற்று சுமார் முப்பது மீட்டர் தூரத்திற்குத் திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மலையகப் பிரதேசங்களில் தொடராக மழை பெய்து வருவதால் தான் இவ்வாறு அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுகின்றன. அதனால் மலையகப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மழைக் காலங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.
No comments:
Post a Comment