உள்ளூராட்சி அதிகாரசபை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் மத்திய மாகாணசபையில் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. கடந்த 12-05-2009 அன்று கண்டி பள்ளேகல மாகாணசபை மண்டபத்தில் மத்திய மாகாணசபையின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக ஆளும் ஐ.ம.சு.மு. யுடன் இ.தொ.கா. உறுப்பினர்கள் மூவர் இணைந்து வாக்களித்தனர். சிங். பொன்னையா, எம்.ராம், எம். ரமேஷ் ஆகியோரே ஆதரித்து வாக்களித்தனர். இ.தொ.கா.வை சேர்ந்த மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் சமூகமளிக்கவில்லை. ஐ.தே.க.வுடன் இணைந்து எஸ். இராஜரட்ணம், எஸ்.சதாசிவம், கணபதி கனகராஜ், எஸ். உதயகுமார், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.மர்ஜான் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் பிரதிகள் வாசிக்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி உள்ளூராட்சி சபை சட்டதிருத்தத்தினை ஒத்திவைத்துள்ளதாலும் இவ்விவகாரத்தை நடத்தும் அவசியமில்லை எனவும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று மீண்டும் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படும் போது இவ்விவாதத்தினை நடத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.பீ. திஸாநாயக்க முதலில் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இதன் அவசர தேவைபற்றி 14 நாட்களுக்குள் அறிவிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு ஆளுநர் முறைப்படி சபையின் ஆலோசனையைப் பெறுவதற்கு அறிவித்துள்ளார். மே 5 ஆம் திகதி கூட்டத்தில் இப்பிரேரணை கொண்டுவரப்பட்ட போது தமிழ் பிரதி வழங்கப்படவில்லை என்பதால் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சட்ட மூலத்தில் உள்ளவற்றை மட்டும் ஆராய்ந்து விவாதிக்கலாம். மத்திய அரசு திருத்தங்கள் மீண்டும் கொண்டுவரும் போது நாம் மீண்டும் கூடி விவாதிக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment