பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கு மிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு அழுத்தங்களும் போராட்டங்களும் இடம்பெற்ற போதும் முடிவில் அவை புஸ்வானமாகிவிட்டன. ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக தொழிற்சங்கங்கள் அறிக்கைகளை விடுவதால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காதது வருத்தத்துக்குரியது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் பி.பி.கந்தையா தோட்ட கமிட்டி தலைவர்கள் மத்தியில் பேசும் போது குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கிய அமரர் எஸ்.நடேசன் சங்கத்தின் தலைவராக விளங்கிய காலத்திலேயே கூட்டு ஒப்பந்தம் தொடர்பான வேலைகள் ஆரம்பமாகின. இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் நன்மையையும் தீமையையும் கொண்டது.எனினும், அடிமைச்சாசனம்,தீங்கிழைக்கும் மரணசாசனம் என்றெல்லாம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மாற்றீடான சரியான முடிவினை அவை முன்வைக்காதது விசனத்துக்குரியது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகள் கூட்டு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளன. மேலும் வாழ்க்கைச் செலவுப்புள்ளி உயர்வுக் கொடுப்பனவு தோட்டத்தொழிலாளருக்கு வழங்குவது அவசியம் என்பதைக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்களுடன் தொடருகின்றன.இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களினது விலையும் அதிகரித்துள்ளன. தற்போது கிடைக்கும் ஊதியம் எந்த வகையிலும் போதுமானதல்ல.எனவேதான் வாழ்க்கைச் செலவுப் புள்ளியோடு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதை எமது சங்கம் வலியுறுத்துகின்றது என்றார்.
No comments:
Post a Comment