Thursday, May 21, 2009

துவேஷத்தை வளர்க்காமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.ஏ. இராமையா

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகக் கூற முடியாது. அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் புதிய வடிவம் பெற்றுள்ளன. அவற்றுக்கு ஏதுவான அரசியல் தீர்வு முன்வைக்கப்படா விட்டால் புதிய முரண்பாடுகள் தோன்றும்.
அதேவேளை தமிழ் மானசீகமான முறையில் வேதனை கொள்ளத்தக்க வகையில் சில பேரினவாத சக்திகள் துவேஷத்தைக் கக்கி வருவது மேலும் பிரச்சினைகள் தோன்ற வழிவகுக்கும். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக சில வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தமிழ் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்டு தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் ஒற்றுமையுடனும் சௌஜன்யத்துடனும் வாழக்கூடிய வகையில் செயற்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும். மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது பழைய சோற்றை மீண்டும் கொடுப்பதைப் போல அல்லாது, சகல தரப்பினரோடும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தோடும் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கு சகத்துவமும் கௌரவமும் அளிக்கும் வகையில் அரசியல் தீர்வுகள் அமைய வேண்டும்
இவ்வாறு செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: