Sunday, August 16, 2009

தொழில் அந்தஸ்து இல்லாத நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவனிக்குமா தொழிற்சங்கங்கள்?

தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு 200 வருடங்களைத் தாண்டி விட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் துறையானது, ஆங்கிலேயர் ஆரம்பித்த கோப்பி தேயிலைத் தொழிலோடு ஆரம்பிக்கின்றது. இந்தத் துறையே இன்று வரையும் இலங்கையின் பொருளாதாரத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றது.
இத்தேயிலைத் தொழிலானது உயர் நிலத் தேயிலை, மத்திய நிலத் தேயிலை, தாழ்நிலத் தேயிலை எனப் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி 2008 ஆம் ஆண்டு மொத்த நிலப்பரப்பு 2,22,000 ஹெக்டேயராகக் காணப்பட்டாலும் 193,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர் செய்யப்பட்டது. இதில் 320 மில்லியன் கிலோ கிராம் ஏற்றுமதி செய்யப்பட்டதுடன் 137,600 மில்லியன் ரூபா ஏற்றுமதி பெறுமானமாக கணிக்கப்பட்டது.
குறிப்பாக உயர் நிலத் தேயிலை பயிர் செய்யும் பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்றனர். 2008 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் கணிப்பீட்டின்படி உயர்நிலத் தேயிலை 61,773,000 கி.கி. உம் மத்திய நிலத் தேயிலை 42,718,000 கி.கி. தாழ்நிலத் தேயிலை 161,981 கி.கி. உம் கொழுந்து ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இத்தேயிலைக்கு கிடைத்த மொத்த விலையாக பின்வருமாறு காணப்பட்டது. உயர் நிலத் தேயிலை 269.01 மத்திய நிலத் தேயிலை 260.68 தாழ்நிலத் தேயிலை 325.64 என (ரூபா) விலை கிடைத்தது. எல்லா வகைத் தேயிலைக்கும் 301.63 ரூபா விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட் இத்தொழிலாளர்கள் இன்று வரையும், இவர்கள் செய்யும் தேயிலை உற்பத்தி தொழில் நிலை அந்தஸ்து அற்றவர்களாக (கிடைக்காதவர்களாக) தொழில் செய்து வருகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
உலகத்திலேயே இந்த தேயிலைத் தொழில் அல்லது பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மட்டுமே தொழில் அந்தஸ்து அற்றவர்களாக உழைக்கின்றார்கள். இவர்களுக்கான உடை இல்லை. பாதுகாப்பு இல்லை. (குறிப்பாக மருந்து தெளித்தல், உரம் போடுதல், தொழிற்சாலை வேலைகள்).
இம்மக்கள் ஆரோக்கியமாகவும், தொழில் நிலையில் அந்தஸ்து பெற்றவர்களாகவும் இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட தொழில் துறையின் உற்பத்தி கூடும். தொழில் துறை வளர்ச்சியடையும், உற்பத்தி அதிகரித்து வருமானம் கூடும் என்பது கவனிக்கப்படல் வேண்டும்.
இதுவரை காலமும் இத்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப வழங்கப்படவில்லை. அத்துடன் இவர்கள் சார்ந்திருக்கும் தொழிற் சங்கங்களும் இவற்றைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என்பது கவலையான விடயம். வெறுமனே உழைப்பை மட்டுமே பெற்றுக் கொள்ள எத்தனிக்கும் கம்பனி நிருவாகங்கள், இவர்களின் சம்பள உயர்வு, காப்புறுதி, தொழில் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு. கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கு மேல் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். (இறப்பர், தென்னை, தேயிலை) இவர்களுக்கென பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்த தொழிற்சங்கங்களுக்கான சந்தா பணம் மட்டும் மாதம், மாதம் சம்பளத்தில் கழிக்கப்படுகின்றது. சில தோட்டங்களில் சில தொழிற்சங்கங்கள் 50 வருடத்திற்கு மேலும் அங்கத்தவர்களை கொண்டு செயற்படுகின்றது.
அன்று தொடக்கம் இன்று வரையும் பல கட்சிகளுக்கு சந்தாப் பணம் செலுத்துகின்றார்கள். ஆனால் கோயில் மணி, விளையாட்டு உபகரணங்கள் தவிர சில தோட்டங்களுக்கு இன்னும் உருப்படியாக எதையேனும் செய்யவில்லை என்பதே மக்களின் ஆதங்கம்.
தேர்தல் காலங்களில் கூட ஏனைய கட்சி அங்கத்தவர்களை தூற்றுவதும் அவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதும் குண்டர்களை ஏவி விட்டு சக தொழிலாளர்களையே தாக்குவதும், கட்சிக்குள்ளேயே பல்வேறு வெட்டுக் கொத்துக்களும் குளறுபடிகளும் இருப்பதை இன்று மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள்.
இந்த அரசியல் வாதிகளிடம் மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இம்மக்களின் வாழ்வியல் விடிவுக்கு ஏதாவது பொருத்தமானதாக செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
தொழிற்சங்கத்தை நடத்துபவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களிலாவது எதையாவது சிறப்பாக மக்கள் நலன் கருதி செய்ய வேண்டும். இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் போல் இங்கும் வரவேண்டும்.
கொட்டகலை
இரா. சிவமணம்

No comments: