Saturday, August 15, 2009

ஆகஸ்ட் 15 கறைபடிந்த நாள்

-த.மனோகரன்-
வரலாற்றில் சில சம்பவங்களும் அவை இடம்பெற்ற தினங்களும் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையிலே 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இலங்கை வரலாற்றிலே கறைபடிந்த நிகழ்வின் ஒருபக்கமாக இடம்பெற்றுள்ளது. ஆம். 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட இன வெறிப் பயங்கரவாதம் நிகழ்ந்த,ஆரம்பித்து வைக்கப்பட்ட நாளாக அமைகின்றது.
இத் தினத்திற்கு முன்பும் அதாவது 1958 ஆம் ஆண்டிலும் இம் மாவட்டத்தில் இனவெறிப் பயங்கரவாதம் நிகழ்ந்த போதிலும் 1981 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வுகள் இம் மாவட்டத் தமிழர்களது வாழ்வையே ஆட்டங்காணச் செய்து விட்டது. அதுவே மறுக்க, மறைக்க, மறக்க முடியாத உண்மை வரலாற்று நிகழ்வு.
பருவப் பெயர்ச்சிக் காற்று காலத்திற்குக் காலம் வடகிழக்குத் திசையிலிருந்தும், தென்மேற்குத் திசையிலிருந்தும் வீசுவது போல தமிழ்மக்களுக்கெதிரான வன்முறையும் வழமையான நிகழ்வாகி விட்டதால் எவரும் அது தொடர்பில் அலட்டிக் கொள்வதில்லை.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை, இறக்குவானை, நிவித்திகலை, கலவானை, பெல்மதுளை, இரத்தினபுரி, எஹலியகொட, கொலன்ன ஆகிய எட்டுத் தேர்தல் தொகுதிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் 1981 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு தமிழர்களது சொத்துகள் அழிக்கப்பட்டன, எரியூட்டப்பட்டன, கொள்ளையிடப்பட்டன, பாடசாலைகளிலும் தேவாலயங்களிலும் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
ஆண்டுகள் இருபத்தெட்டைக்கடந்து இன்று இருபத்தொன்பதில் புகும் போதும் அன்றைய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனதுகளில் இன்றும் அன்றைய நிகழ்வின் வடுக்கள் மறையவில்லை. வேதனைகள் நீங்கவில்லை.
வயோதிபர்கள், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள், நோயாளிகள், பாலூட்டும் தாய்மார்கள் இவ்வாறு சகல தரத்தினரும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அகதிகளாக்கப்பட்டனர், அவலத்திற்குள்ளாக்கப்பட்டனர். புத்தபெருமான் அவதரித்த இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பதாம் ஆண்டு 1981 ஆம் ஆண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே ஆண்டு தமிழ் மக்கள் இனவெறிக் கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டனர். எனவே இரத்தினபுரி மாவட்ட இனவெறிப் பயங்கரவாதம் நிகழ்வுகளை பகவான் புத்தரின் அவதார நினைவு ஆண்டுடன் இணைக்கும் போது வரலாற்றில் புத்தரின் போதனை எந்தளவுக்கு கைக்கொள்ளப்படுகின்றது,(பட்டது) என்பது பதிலாகின்றது.
அமைதியாக இருந்த இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழருக்கெதிரான வன்முறையைத் தூண்டிவிட்டது யார் என்பதற்கு எவரும் இதுவரை திட்டவட்டமான பதில் கூறவில்லை. அன்றைய அரசாங்கம் இஸ்மாயில் ஆணைக்குழு என்று ஒன்றை அமைப்பதாகக் கூறியதுடன், விடயத்தைக் கைவிட்டு விட்டது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் “சன்டேசில்,மண்டேகில்” என்று அன்று இரத்தினபுரி மாவட்ட இனக் கலவரத்தை மட்டிட்டுச் சொன்னார். அதாவது 14 ஆம் திகதி போயா தினத்தில் புத்த பெருமானின் போதனைகளைக் கேட்க பௌத்த விகாரைகளில் கூடி தர்மோபதேசம் பெற்றவர்கள் பலர். மறுநாள் கொலை, கொள்ளை, அழிப்பு,எரிப்பு என்று பல்வேறு செயல்களில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டனர். இந்த நிலையைக் கண்ட அமரர் தொண்டமான் அன்றைய நிகழ்வுகளை மேற்கண்டவாறு மதிப்பிட்டு வெளிப்படுத்தினார்.
அன்று அதாவது 1981 இல் இரத்தினபுரி மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை. தமிழ் மக்கள் செல்வாக்காக இருப்பதைப் பொறுக்கமாட்டாத இனவெறிப் பயங்கரவாதிகள் திட்டமிட்டு ஒரேநாளில் தமிழர்களை அகதிகளாக்கினர் ஆட்சி இயந்திரமும் கைகட்டி, வாய்பொத்தி ஏன் வாழ்த்தியும் பார்த்திருந்த அவலம் கூட வரலாற்றுப் பதிவாகும்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து,வாழ்ந்தவர்கள் உடைமைகளை இழந்து இருப்பிடங்களை இழந்து அகதிகளாக வெளியேறி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மட்டுமல்ல, கடல்கடந்து இந்தியாவுக்கும் சென்றனர். இதுபற்றி இன்றுவரை எவரும் அலட்டிக் கொள்ளவில்லை.
பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட தமிழர்கள் மனவேதனையுடன் இறந்தவர்கள் பலர். அவதி வாழ்வு வாழ்பவர்கள் இன்றும் பலர் உள்ளனர். தமிழர்கள் அவதிப்பட்டு இடம்பெயர அவர்களது சொத்துகளைக் கொள்ளையடிப்பதிலும் குறைந்த விலையில் வாங்குவதிலும் கவனம் செலுத்தும் பலர் அன்றும் இருந்தனர். இன்றும் அவ்வாறு எதிர்பார்த்துள்ளோரும் அநேகர் உள்ளனர்.
இச்சம்பவம் நடைபெற்ற அடுத்தடுத்த மாதங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு உத்தரவுப் பத்திரம் இல்லாதவர்களுக்கு நடமாடும் சேவை மூலம் புதிதாக உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டதும் ஒரு வரலாற்றுப் பதிவாகும். கொள்ளைக்கு வெள்ளையடிக்கப்பட்டது. புத்தபகவானின் போதனைகளில் ஒன்றான கொள்ளையடித்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் மூலம் மீறப்பட்டது. புத்தரின் போதனை அவமானப்படுத்தப்பட்டது.
இலங்கையில் தமிழர்களின் உள்ளக இடப்பெயர்வுகளில் 1981 இல் ஏற்பட்ட நிகழ்வுகளும் பதியப்பட வேண்டியவை. இன்று இவை மறக்கப்பட்டு விட்டாலும் வரலாறு அதாவது நிகழ்ந்த உண்மை வரலாறு மாற்றப்பட முடியாதது.
இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப் போட்டிபோட்டுக் கூச்சலிடும் காலம் கடந்த இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த அதர்ம நிகழ்வுகளுக்கு இதுவரை எந்தவொரு சரியான பரிகாரமும் காணப்படவில்லை. இயற்கையின் தீர்ப்பு எதிர்காலத்தில் என்ன நிர்ணயம் செய்யுமோ தெரியவில்லை.
இதில் படுபாதகமான நிகழ்வு, கொடுமை என்னவெனில், இந்தியரான இந்துவான புத்த பிரானின் தர்மோபதேசம் கேட்டவர்கள் மறுநாள் இந்திய வம்சாவளி மக்களான இந்துக்களான தோட்டத் தொழிலாளர்களையும் கூட அகதியாக்கிய அவமானமாகும். இவற்றுக்கெல்லாம் காலம்தான் பதில் கூற வேண்டும்.
எவ்வாறாயினும் தமிழர்களுக்கு எதிரான இழிவான செயற்பாடுகளுக்கு எதிராகத் தமிழ் மக்களுக்குப் பல்வேறு உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியும் ஆறுதல் தந்தும் செயற்பட்ட சிங்கள மக்களது நல்லுணர்வையும் போற்ற, மதிக்க மறக்கக் கூடாது.
நன்றி- தினக்குரல்

No comments: