தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே 31-09-2009 ஆம் திகதி கொட்டக்கலையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக 01-10-2009 காலை 10.00 மணிக்குக் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப் பேச்சுவார்த்தையில் இ.தொ.கா. பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.கா. தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன், இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன், இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஊவா,மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் இராமநாதன் மற்றும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இ.தொ.கா.வின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், மாதர் சங்கத் தலைவிகள் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment