பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த விமர்சனங்கள் இப்போது மேலெழுந்து வருகின்றன. இன்றோ நாளையோ தமக்கு உரிய சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் தொழிலாளர்களுக்கு இதுவரை எதுவுமே கிடைக்கவில்லை. சம்பளத்தை பெற்றுக்கொடுக்கப் போவதாக அரசியல்வாதிகள் அழுத்தமாக பல தடவைகள் வாக்குறுதி வழங்கியுள்ளனரே தவிர இதில் சாதகத்தன்மை இல்லாத நிலையே காணப்படுகின்றது. அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை கேட்டு கேட்டு புளித்துப்போன தொழிலாளர்கள் இப்போது அரசியல்வாதிகள் மீது நம்பகத்தன்மை இல்லாத நிலையில் இருந்து வருவதனையே அவர்களின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. இதற்கிடையில் சம்பள உயர்வு வழங்கப்படாதவிடத்து கம்பனிகளின் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் போன்றவர்கள் வலியுறுத்தியுள்ளமையும் தெரிந்த விடயமாகும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சமகால நிலைமைகள் தொடர்பில் நான் இங்கு புதிதாக எதனையும் கூறுவதற்கில்லை. அம்மக்களின் வாழ்க்கை நிலைமைகள் தொடர்பாக பலர் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டிருக்கின்றனர். இம்மக்களின் நிலைமைகளை பார்க்கும்போது இவர்களும் இலங்கை மாதாவின் புதல்வர்களா? என்ற கேள்வியே மேலெழும்புகின்றது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாதநிலை வேண்டும் என்ற பாடல் வரிகளை நான் மிகவும் இரசித்துக் கேட்டிருக்கின்றேன். எனினும் எல்லாமும் பெறாது இல்லாமையால் எமது மலையக தொழிலாளர் சமூகம் கண்ணீர் வடிக்கின்றபோது நெஞ்சுக்கு மிகவும் வேதனையாகத்தான் இருக்கின்றது. நாட்டில் ஏனைய இனங்கள் சகலவிதமான உரிமைகளையும் பெற்று சமூகமாக தலைநிமிர்ந்து வாழுகின்றபோது இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த கதி என்று புரியவில்லை. ஒருவேளை சிலர் கூறுவதைப்போன்று தமிழர்களாக பிறந்ததால்தான் இவர்களுக்கு இந்த கதி நேர்ந்ததோ என்று கூட பல சந்தர்ப்பங்களில் எண்ணத்தோன்றுகின்றது. இதில் உண்மை இருக்குமானால் இனவாதத்தின் பரவல் எந்தளவுக்கு விசாலித்திருக்கின்றது என்பதனை விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
பிழைப்பு நடத்துவதற்கும் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கும் எத்தனையோ வழிவகைகள் காணப்படுகின்றன. ஏதேனும் ஒரு தொழிலை செய்து தானும் குடும்பமும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். அந்தத் தொழில் நேர்மையான தொழிலாக இருக்க வேண்டும். பிழையான தொழிலில் பிழையாக பணம் ஈட்டுவது பற்றி நான் இங்கு கூறவரவில்லை. இத்தகைய விடயங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவையேயாகும். நேர்மையே நிம்மதி தரும். இந்த நிலையில் பிழைப்புக்காக பல நல்ல தொழில்கள் இருக்கின்றபோது அப்பாவி தொழிலாளர்களை அடகுவைத்து அவர்களை பலிக்கடாவாக்கி குளிர்காய முற்படும் சிலரும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள். இத்தகையோர் அரசியலில் மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் இருந்து வருகின்றனர். இவர்கள் நிச்சயம் தம்மை மாற்றிக்கொண்டு மக்களின் நலன்கருதிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. நான் என்ற சுயநலநோக்கில் இவர்கள் சிந்திப்பதனையும் செயலாற்றுவதனையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாம் நமது சமூகம் என்ற பரந்த நோக்கு அவசியமாகும். வீடு பற்றி எரியும் போது பீடி பற்றவைக்க நெருப்பு தேடும் தன்மை கொண்ட சிலரை பார்த்திருக்கின்றேன். இவர்களால் மலையக சமூகத்தின் அபிவிருத்திக்கு ஏதும் நன்மைகள் ஏற்படப் போவதில்லை. மாறாக தீமைகளே வந்து சேரும். நன்மை செய்யப் பிறந்த நீ பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு என்பதனை இவர்கள் நன்றாக விளங்கிக் செயற்படுதல் வேண்டும்.
மலையக சமூகத்திற்கு இதுபோதாத காலமாகும். சாண் ஏறினால் முழம் சறுக்குகின்றது. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இருபக்கமும் இடி என்பதைப் போல மலையக மக்களின் நெருக்கீடுகள் அமைந்துள்ளன. இனவாதிகளும் கம்பனிகளும் தாராளமாகவே நெருக்கீடுகளை தொழிலாளர் தோழர்களுக்கு வழங்கி வருகின்றார்கள். மலையக மக்களின் இருப்பினை இல்லாது செய்து சகல துறைகளிலும் இவர்களை ஓரம் கட்டுவது பலரின் எண்ணமாக உள்ளது. இந்த எண்ண விதைப்புகள் சுதந்திரத்திற்கும் முன்னதாகவே ஆரம்பித்துவிட்டன. இதன் தொடர்ச்சியே சுதந்திரத்திற்கு பின்னரும் இருந்து வருகின்றது. மலையக மக்களுக்கென்று எந்த ஒரு உரிமையையும் வழங்குவதற்கு யாருமே தயாராக இல்லை. உரிமைகளை வழங்குவதாக காட்டிக்கொள்ள ஆட்சியாளர்கள் முற்படுகின்றபோதும் இது உண்மையாக அமையவில்லை. கடந்தகால சம்பவங்கள் இதற்கு சரியான சான்றுகளை பகர்வதாக அமையும்.
மலையக மக்களின் தேவைகள் இன்னுமின்னும் அதிகரித்துச் செல்கின்றன. இவற்றினை போராடிப் பெற்றுக்கொடுக்க வேண்டியது மலையக அரசியல்வாதிகளின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டு மக்களையும் பிரித்தாளுவதல்ல. மக்களுக்காகவே அரசியல்வாதிகளே தவிர அரசியல்வாதிகளுக்காக மக்களில்லை.
மலையக மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்களில் உழைப்புக்கேற்ற ஊதியத்தினை பெற்றுக்கொள்வதும் முக்கியமாகியுள்ளது. ஆனால் இது உரியவாறு இவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் யாவரும் அறிந்த விடயமாகும். ஒவ்வொரு தடவையும் இவர்கள் போராடியே சம்பளத்தினை பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. சத்தியாக்கிரகம், மெதுவாக பணிபுரிதல் என்றெல்லாம் போராட்டங்களின் வடிவங்கள். காலத்துக்கு காலம் மாறுபடுகின்றன. எனினும் இந்த போராட்டங்கள் உரிய சம்பள உயர்வினை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கின்றதா? என்றால் கேள்விக்குறியே மிச்சமாக இருக்கும். இதனை யாவரும் நன்கறிவர். வரவு – செலவு திட்டத்தினூடாக அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவினை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தல்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் இது சாத்தியமாக வில்லை. அரசாங்கம் கம்பனிகளின் நலன்கருதி பல்வேறு கடன்வசதிகளை செய்து கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கம்பனிகள் 2500 ரூபாவினை தொழிலாளர்களுக்கு அவ்வளவு விரைவில் வழங்குவதாக இல்லை. இன்னும் இது தொடர்பில் பல்வேறு இழுத்தடிப்புகள் இருந்துகொண்டே வருகின்றன.
இதேவேளை தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலன்களையும் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. முன்னைய கூட்டு ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய கூட்டு ஒப்பந்தத்தை ஏற்கனவே கைச்சாத்திட வேண்டியும் இருந்தது. எனினும் உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களை மையப்படுத்தி முதலாளிமார் சம்மேளனம் இது தொடர்பில் இழுத்தடிப்பினை மேற்கொண்டு வருகின்றது. இவையெல்லாம் பழைய கதைகளாகும். சம்பள உயர்வினையும் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவையும் உடனடியாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென்று மலையக அரசியல்வாதிகள் ஏற்கனவே வேண்டுதல்களை விடுத்துள்ளதோடு, போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதும் தெரிந்த விடயமாகும். எனினும் இவையாவும் கம்பனியினரை ஒன்றும் செய்துவிடவில்லை. முதலாளிமார் சம்மேளனத்தையும் மசிய வைத்துவிடவில்லை. போராட்டங்கள் பிசுபிசுத்துவிட்டதுதான் மிச்சம்.
மலையக அரசியல்வாதிகள் சம்பள உயர்வு தொடர்பில் கம்பனியினருக்கு காலக்கெடுவினை விதித்திருந்தனர். இப்போது அந்த காலக்கெடுக்களும் முடிவடைந்துவிட்டன. எனினும் கம்பனியினர் தனது நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவும் மாறியதாக இல்லை. வெளியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்தி எமது மக்களை மென்மேலும் பொருளாதார ரீதியில் ஓட்டாண்டியாக்கவே கம்பனியினர் முற்படுகின்றனர். மலையக மக்களின் மேம்பாடு தொடர்பில் கிஞ்சித்தும் கம்பனியினர் சிந்திப்பதாக இல்லை. இலாபத்தை மட்டுமே மையப்படுத்திய அவர்களின் சுயநலவாத செயற்பாடுகள் காரணமாக தொழிற்குலம் துன்பத்தில் சிக்கித்தவிக்கின்றது.
இதற்கிடையில் கூட்டு ஒப்பந்த நடவடிக்கை மற்றும் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவினை வழங்குதல் என்பன தொடர்பில் கம்பனியினர் அசமந்தப் போக்கில் செயற்படுவார்களானால் தொழில் அமைச்சர் கம்பனிகளுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலமே சாதகமான விளைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருக்கின்றார். தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத் தொழிலைத் தவிர வேறு எந்த வருமான மார்க்கங்களும் இல்லாதுள்ளனர். இந்த நிலையில் இவர்களின் வருமான மேம்பாடு கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தோட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தரிசு நிலங்கள் காணப்படுகின்றன. இவற்றை மலையக இளைஞர்களுக்கு பிரித்துக் கொடுத்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். சுயதொழில் ஊக்குவிப்புக்கான கடன்வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். கம்பனியினர் நாளொன்றுக்கு தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் அளவினை இப்போது அதிகரித்துள்ளனர். இதனால் தொழிலாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும் கம்பனியினர் நாளுக்கு நாள் விதிமுறைகளை மாற்றி வருகின்றனர். இதனால் தொழிலாளர்களின் நலன்கள் பறிபோகின்றன. கம்பனியினர் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தொடர்ந்தும் சாக்குபோக்குகளை சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று வடிவேல் சுரேஷ் தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி இருக்கின்றார்.
இதற்கிடையில் இன்னுமொரு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஏ.அரவிந்தகுமார் கம்பனிகள் சட்டத்தினை மதிக்காமல் செயற்படுவது தொடர்பில் தனது விசனத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். வரவு–செலவு திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவினை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்காமை என்பது ஒரு அநீதியான செயலாகும் என்று கண்டித்துள்ள அவர் கம்பனிகள் சர்வாதிகார போக்கில் செயற்படுமானால் விரைவில் பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்திருக்கின்றார். இதனுடன் இன்னுமொரு முக்கியவிடயம் தொடர்பிலும் அரவிந்தகுமார் தனது நிலைப்பாட்டை விளக்கிக் கூறி இருக்கின்றார். தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபாவினை பெற்றுக்கொடுக்க கம்பனியினர் உடன்படவில்லையாயின் தோட்ட அதிகாரிகள் விரைவில் கூண்டிலேறும் நிலைமை உருவாகும் என்பது அரவிந்தகுமாரின் கருத்தாக இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரையில் கம்பனியினர் அவர்களின் எஜமானர்களாக உள்ளனர்.
தொழில்தருநர்கள் என்ற வரையறைக்குள் ஒவ்வொரு தோட்டத்தின் அதிகாரியும் உள்ளடங்குகின்றனர். தோட்ட அதிகாரிக்கு கீழ் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். எனவே தொழில்தருநர்கள் என்ற வகையில் தோட்ட அதிகாரிகளுக்கும் கணிசமான பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. தொழிலாளர்களின் நலன்களை இவர்கள் பேணுதல் வேண்டும். இவர்கள் இதிலிருந்தும் விலகிச் செல்ல முடியாது. வரவு–செலவு திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவை தொழில் தருநர்களாகிய தோட்ட அதிகாரிகள் உடனடியாக தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தோட்ட அதிகாரிகளின் வகிபாகத்தினையும் இதிலிருந்தும் விலகிச் சென்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் அரவிந்தகுமார் எடுத்துக் கூறி இருக்கின்றார்.
இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய குழுவின் உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் மலையக அரசியல்வாதிகள் தொடர்பில் தனது அதிருப்தியினை வெளிப்படுத்தி இருக்கின்றார். இதுபற்றி அவர் கூறுகையில், தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு பிரச்சினை என்பது தற்போது இழுபறியான ஒரு நிலையினை அடைந்திருக்கின்றது. கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடத்துக்கு மேலாகியும் சம்பள உயர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் கூட முதலாளிமார் சம்மேளனத்தினர் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதாக இல்லை. கடந்த தேர்தல் காலத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை பெற்றுக் கொடுப்பதாக மலையகத்தில் மேடை மேடையாக சென்று வாக்குறுதி அளித்திருந்தனர். எனினும் இன்றுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் இத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் இன்னும் சாத்தியப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. இப்படியான ஒரு நிலைமையிலேயே வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா தொடர்பாக எல்லோரும் பேசுகின்றனர்.
2500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்பது ஒரு சட்டமாகும். தனியார் துறையினருக்கு இந்த 2500 ரூபா அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இது எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டுமென்பது நியதியாகும். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி என்பது இப்போது வலுவடைந்துள்ள நிலையில் இம்மக்களின் பிரச்சினைகளை 2500 ரூபாவினை வழங்குவதன் ஊடாக தீர்த்துவிட முடியாது. இவர்களின் பொருளாதார நெருக்கடி குறித்து ஆழமாக சிந்தித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. 2500 ரூபா அதிகரிப்பினை பெற்றுக்கொடுப்பதன் மூலமாக தொழிலாளி ஒருவரின் சம்பளத்தில் நாளாந்தம் நூறு ரூபா மட்டுமே அதிகரித்த சம்பளமாக கிடைக்கும். இதில் எந்தவிதமான பயனும் இருப்பதாக தெரியவில்லை. இதனை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாவினை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு போராட்டத்தினையே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. எனினும் இந்த ஆயிரம் ரூபா நடவடிக்கையினை மழுங்கடிக்கச் செய்யும் நோக்கில் சில மலையக அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். இது ஒரு மிகப்பிழையான செயலாக அமைந்திருக்கின்றது.
ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் நாள் ஒன்றுக்கு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென்பது முக்கிய தேவையாக இருக்கின்றது. எனினும் இதைவிடுத்து 2500 ரூபாவுக்காக போராட்டங்களில் ஈடுபடுவதென்பது சாத்தியமானதாக தெரியவில்லை. பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு 2500 ரூபாவுக்காக போராடுவதென்பது விந்தையாக உள்ளது. இதற்கிடையில் அண்மையில் முதலாளிமார் சம்மேளனம் நாள் ஒன்றுக்கு 720 ரூபா அளவில் சம்பளத்தை வழங்க உத்தேசித்திருப்பதாகவும் மாதத்தில் 12 நாட்களே வேலை வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது. ஏனைய நாட்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் அளவிற்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது. இது ஒரு பொருத்தமான நடவடிக்கை என்று எனக்குப்படவில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது சரியாக விளங்கிக் கொண்டு செயற்படவேண்டிய ஒரு விடயமாகும். வருமானம் இல்லாத காரணத்தினால் ஒரு புறத்தில் தோட்டங்கள் இழந்து மூடப்பட்டு வருகின்றன. தோட்டத் தொழிற்றுறையானது செயலிழந்து போகின்ற ஒரு பரிதாபகரமான நிலைமையும் மேலெழுந்து வருகின்றது. தேயிலை தொழிற்றுறை பெரிதும் பின்தள்ளப்பட்டு வருவதனையும் எம்மால் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. எனவே இந்நிலையில் தோட்டத் தொழிற்றுறையை பாதுகாக்க விரும்புகின்ற எவரும் முதலில் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. தோட்டத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியரையும் பாதுகாக்க வேண்டும். இதனடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியதும் மிக முக்கிய தேவையாகியுள்ளது. எனவே தோட்டத் தொழிலாளர்கள் உரிய வருமானத்தினை பெற்றுக்கொள்வதென்பது இன்று முதன்மையான பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. இந்நிலையில் இப்போதைய மலையக அரசியல்வாதிகளும் முன்னவர்களைப் போன்றே செயற்படுவதனை காணமுடிகின்றது. எனினும் தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய ஒரு தீர்க்கமான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக தெரியவில்லை.
இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பலவும் இதில் உள்ளடங்கும். இதன்மூலம் பல்வேறு உரிமைகளையும் இவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள். எனினும் தொழிலாளர்களின் போராட்டம் என்பது ஒரு முடிவில்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு கடந்த கால ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அதைப்போன்று சமகால ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும். மலையக மக்களின் அவலகரமான நிலைக்கு இவர்களே பொறுப்பாளிகளாவர் என்பதனை மறுத்துவிட முடியாது. அறிக்கை விடும் அரசியல்வாதிகள் மலையக மக்களின் நலன்கருதி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதேவேளை மத்திய மாகாண சபையின் உறுப்பினர் கணபதி கனகராஜ் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றது. எனினும் கடந்த ஒன்றரை வருடங்களாக காத்திருந்தும் எவ்விதமான சாதகமான சமிக்ஞைகளையும் பெருந்தோட்ட கம்பனிகள் தெரிவிக்கவில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பொறுமை இழந்து நிற்பதாக கனகராஜ் விசனப்பட்டுக் கொள்கின்றார்.
தொழிலாளர் சம்பள விடயம் இழுபறியானதொரு நிலையில் இருக்கின்றபோது தொழில் அமைச்சர் கம்பனியினர் மீது வழக்கு தொடர வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் முன்னதாக தெரிவித்திருந்தேன். எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தனது நிலைப்பாட்டில் கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்ற நியாயத்தினை முன்வைத்திருக்கின்றார். இது கம்பனிக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு எண்ணியுள்ளமை தொடர்பில் சிந்திக்க வைத்திருக்கின்றது. சம்பள உயர்வு விடயம் தொடர்பில் பலசுற்று பேச்சுவார்த்தைகளை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தி இருந்தன. எனினும் இவையனைத்தும் இணக்கம் காணப்படாத நிலையிலேயே முடிவுபெற்றிருந்தன. இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருந்தார்கள்.
இதற்கிடையில் அடுத்த வாரமளவில் இ.தொ.கா. உள்ளிட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தெரியவருகின்றது. இதில் தோல்வி ஏற்படுமிடத்து தொழில் அமைச்சரிடமும் தேவையேற்படின் ஜனாதிபதியிடமும் தாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இ.தொ. காங்கிரஸ் தரப்பு செய்திகள் வலியுறுத்தி இருக்கின்றன. கம்பனியின் விடாப்பிடியான தன்மையினால் இந்த பேச்சுவார்த்தைகளும் இழுப்பறியான ஒரு நிலையினை அடைந்து விடுதல் கூடாது. இரு சாராருக்கும் இடையிலான புரிந்துணர்வு சிறந்ததொரு இணக்கப்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும்.
இது இவ்வாறிருக்க தினேஷ் குணவர்தன பாராளுமன்ற உறுப்பினரால் தோட்டத் தொழிலாளர்களின் 2500 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அண்மையில் பதிலளித்த தொழில் அமைச்சர் ஜே.எம்.செனவிரட்ண தற்போது பெருந்தோட்டத் துறையின் தற்காலிக வீழ்ச்சியினைத் தொடர்ந்து வங்கிகள் ஊடாக கம்பனிகளுக்கு கடன்களை வழங்கி 2500 ரூபா சம்பள உயர்வினை தொழிலாளர்களுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தமையும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த வாக்குறுதிக்கு மத்தியில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரம் இன்னும் இரண்டு வாரங்களில் 2500 ரூபாய் தொழிலாளர்களின் கைகளில் கிடைக்கும் என்று ஒரு வாக்குறுதியினை வழங்கி இருக்கின்றார். தொழிலாளர்களின் நிலையினை உணர்ந்து தொழில் அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து 2500 ரூபாவை இடைக்கால கொடுப்பனவாக பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் திகாம்பரம் இச்சலுகையைக் கூட அனுபவிக்கவிடாமல் சில தொழிற்சங்க அங்கத்தவர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
எது எவ்வாறெனினும் வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கதே. எனினும் மக்கள் விடுதலை முன்னணியின் இராமலிங்கம், சந்திரசேகர் கூறியதைப்போன்று இந்த 2500 ரூபாய் மட்டுமே தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினைத் தராது என்பது உண்மை. எனவே இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் நாள் சம்பளம் என்ற இலக்கினை அடையும் நோக்கில் மலையக அரசியல்வாதிகள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஐக்கியமும் அதனூடான அழுத்தமுமே சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை மறந்து செயற்படுத்தலாகாது. அரசியல்வாதிகளுக்கிடையேயான பிரிவினைகளும் முரண்பாடுகளும் தொழிலாளர்களின் உரிமைகளை மழுங்கடிக்கச் செய்யும்.
- துரைசாமி நடராஜா-
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment