தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இதனை இலங்கைதொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கிறது. இதேநேரம் இவ் இடைக்கால கொடுப்பனவை இரண்டு மாதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தி விடாது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை கிளாஸ்கோ நெதர்ஸ்டன், டயகம வெஸ்ட் முதலாம் பிரிவு ஆகிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை பாதை திறப்பு நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,தோட்டத்தொழிலாளருக்கான நிவாரணமாக 2500 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கின்றது. எனினும் இந்தக்கொடுப்பனவானது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை வழங்கப்படவேண்டும் என்பதை இ.தொ.கா. விரும்புகிறது.
சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அது வெற்றியளிக்காது இருப்பதற்கு குழப்பகரமான செயற்பாடுகளில் சில தரப்புக்கள் ஈடுபடுகின்றன. இதுவே சம்பள அதிகரிப்பு தாமதமாவதற்கு பிரதான காரணமாகும்.
எவ்வாறிருப்பினும் தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மாத்திரமே தீர்த்து வைக்க முடியும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இ.தொ.கா.வே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைபெற்றுத்தரும் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.
இம்முறை தேயிலை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையால் நாம் முன்வைத்த சம்பள தொகையை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகின்றது. ஆனாலும் நாம் நிர்ணயித்த சம்பளத்தை அடைந்தே தீருவோம்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்திருந்தாலும் கூட அடுத்த மாதம் முதல் வாரம் அளவில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கின்றது.
அந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என எதிர்பார்க்கின்றோம். இருந்தும் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை நாம் பெற்றே தீருவோம் என்பதில் ஐயம் கொள்ளத்தேவையில்லை.
சிலர் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் உரிமைகளில் தலையிட்டு தங்களை வளர்த்து கொள்வதற்காக மக்களை திசை திருப்பி வருகின்றனர். ஆனால் காங்கிரஸின் சேவை தொடர்பில் இவர்களுக்கு நன்கு தெரியும். எந்த நேரத்தில் எதை பெறுவார்கள் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க எவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை அறிந்தவர்கள் தான் இன்று மக்கள் மத்தியில் அவர்களை திசை திருப்புவதற்காக கிளம்பி வந்துள்ளார்கள்.
தோட்ட நிர்வாகங்கள் தோட்ட காணிகளை காடுகளாக்கிவிட்டு, தொழிலாளர்குறைப்பையும் நிகழ்த்தி விட்டு தொழிலுக்கு வராவிட்டால் தேயிலை காணிகளை மூடுவதாக அறிவிக்கின்றனர்.
அவ்வாறு நடந்தால் கவலைப்பட தேவையில்லை. மூடும் தேயிலை காணிகளை அந்தந்த தோட்டத்தில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு அவர்கள் செல்லலாம். காரணம் இந்த தேயிலை காணிகளை உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள் தான். தம் உழைப்பின் சக்தியை முழுமையாக தேயிலை காணிக்கே செலவழித்து விட்டு யாரோ சொன்னார்கள் என்பதற்காக பூர்வீகத்தை இழக்க எமது மக்கள் முட் டாள்கள் அல்ல என்றார்.
No comments:
Post a Comment