Tuesday, July 5, 2016

பாதுகாப்பு இல்லையா? உடன் பதியவும்

கொழும்பு மற்றும் புறநகர்களில்; பாதுகாப்பில்லாத இடங்களில் வேலைக்கமர்த்தப்படும் மலையக இளைஞர், யுவதிகளின் சுயவிவரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக, காங்கிரஸின் உப-தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநருமான எம்.வேங்குருசாமி தெரிவித்தார். சௌமிய பவனில் நடைபெற்ற மலையக இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தோட்டங்களில் படித்துவிட்டு வேலையின்றி அவதிப்படும் இளைஞர், யுவதிகளுக்கு அவர்களது தகுதிக்கேற்ப தோட்டங்களிலேயே, தொழில் வழங்கப்பட வேண்டும். ஆனால், தோட்ட நிர்வாகங்கள் தொழில் வழங்க மறுக்கின்றன. இதனால், விரக்தியடைந்த இளைஞர், யுவதிகள் தொழிலைத் தேடி கொழும்பு மற்றும் புற நகருக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்' என்றார். 'தோட்டங்களில் ஆள் பிடிக்கும் தரகர்கள், இப்போது தோட்டங்களில் அதிகமாக உலாவி வருகின்றனர். இவர்கள், தொழில்தருநர்களிடமிருந்து  ரூபாய் 5,000 முதல் ரூபாய் 10,000 வரை பணம் பெற்றுக்கொள்வதுடன் பெற்றோரை  ஏமாற்றி, பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் செல்லும் நிலை தோன்றியுள்ளது. தொழிற்சங்க சட்டதிட்டங்களின்படி, ஒருவர் தொழில்புரிய வேண்டுமெனில் 18 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆனால், மலையகத்தில் 14, 15 வயதுகளிலேயே இளைஞர், யுவதிகள்; வேலைக்காக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்' என்றார். 

இது இவ்வாறிருக்க, வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்புவதாக ஆசைவார்த்தைகள் கூறி, இந்த தரகர்கள் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி கஷ்டத்துக்குள் தள்ளிவிடுகின்றார்கள். இதேவேளை, கொழும்பில் பல வருடங்களாக தொழில்புரியும் இளைஞர், யுவதிகளுக்கு உருப்படியான சம்பளம், ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இவற்றை எம்மால் அனுமதிக்க முடியாது.   

எனவே, இ.தொ.கா இவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன்பொருட்டு மலையக பெருந்தோட்டங்களிலிருந்து கொழும்புக்குச் செல்லும் இளைஞர், யுவதிகள் தமது முழு விபரங்களையும் இ.தொ.கா தலைமைக் காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்துகொள்பவர்கள் தமது முழுப்பெயர், பெற்றோரின் விபரம், வதியும் தோட்டம், மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை குறிப்பிடுவது அவசியமாகும்' என்றார். 'இ.தொ.கா தலைமைக் காரியாலயம், 72, ஆனந்த குமாரசாமி மாவத்தை, கொழும்பு 07 அல்லது 011 2301359 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும்' எனவும் அவர் கூறினார்

No comments: