தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வை வழங்காவிட்டால் கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்த தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன நிலுவை கொடுப்பனவை வழங்குவதற்கு சட்டம் அமுலுக்கு வந்த காலம் முதல் ஒருவருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்.பி.யான வாசுதேவ நாணயக்கார,எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும் என சட்டரீதியாக கூறப்பட்டுள்ள போதும் சில தோட்டக்கம்பனிகள் தற்போது விரைவில் சம்பள உயர்வை வழங்கவில்லை. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பீர்களா? எனக் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், பொருளாதார ரீதியாக தமக்கு சில இயலாமைகள் இருப்பதை தோட்டக்கம்பனிகள் எம்மிடத்தில் முன்வைத்துள்ளன. விசேடமாக தேயிலை, இறப்பர் துறையில் காணப்பட்ட வீழ்ச்சியை அவை காரணமாகக் கூறுகின்றன. அந்த விடயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதற்கிணங்க இலங்கை மற்றும் மக்கள் வங்கியூடாக தோட்ட நிறுவனங்களுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான பணத்தை வங்கிகளூடாக பெற்றுக்கொள்வதற்கு தோட்டக் கம்பனிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அதனூடாக முதலிரு மாதங்கள் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. தேயிலைத் துறையைப் பொறுத்தவரையில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. எனவே அந்தத்துறை குறித்து கூடிய அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோன்று தான் இறப்பர் துறையிலும் வீழ்ச்சி காணப்படுகின்றது. எஹலியகொட பிரதேசத்தில் சில தோட்டங்களில் பால் வெட்டப்படாத இறப்பர் தோட்டங்கள் காணப்படுகின்றன. இதற்காக 2500 ரூபா சம்பள உயர்வை வழங்குவதிலிருந்து கம்பனிகள் விலகி நிற்கமுடியாது. தற்போது கம்பனிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளமையால் அவர்கள் மீள்வதற்கு உரிய வழிவகைகள், சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து அனைத்து கம்பனிகளுக்கும் நிலுவைக் கொடுப்பனவை வழங்குவதற்காக ஒரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2016 மார்ச் 23 ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் 23 வரையிலான ஒரு வருடகாலப் பகுதியே நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ள கால அவகாசமாகும்.
நாம் தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். அதன் ஊடாக கூட்டு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு முயற்சிகளை செய்து வருகின்றோம். ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் அதற்கேற்ப சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய சம்பளத்தில் பிரச்சினையை எழுப்ப முடியாது என்றார். இதன்போது வாசு தேவநாணயக்கார எம்.பி. நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா? அல்லது தொழில் வழங்குனர்களின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து விடுவீர்களா? என கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், 2500 ரூபா அதிகரிப்பில் கடந்தமாத சம்பள நிலுவை வழங்கப்படவில்லை என்பதற்காக இந்த மாதம் கூட நடவடிக்கை எடுப்பதற்கு நியதிகள் உள்ளன. அதற்கமையவே நாம் செயற்பட முடியும். நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பகுதியடிப்படையில் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். நாம் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள சட்டரீதியாக முயற்சிகளை எடுக்க முனைந்தபோது எமக்கு பலநெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால் நாம் அதற்கு பின் நிற்கவில்லை. அதேபோல் தான் 2500 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கவும் நிறுவனக் கொடுப்பனவையும் வழங்குவதற்கு நாம் பின்னிற்கவில்லை. அதற்கு தவறுவார்களாயின் நிச்சயமாக கூட நடவடிக்கை முறையாக எடுக்க தயாராகவே உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment