Wednesday, June 24, 2009

பெருந்தோட்டத்துறை கங்காணிமார் மாநாடு

பெருந்தோட்டத்துறை கங்காணிமார்களுக்கான மாநாடொன்றினை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதிக் கல்வியமைச்சர் மு.சச்சிதானந்தன் முன்னெடுத்து வருவதாக அமைச்சரின் இணைப்பாளர் ஆசிரியர் கே.இராஜேந்திரன் தெரிவித்தார். பதுளை மாவட்டத்தில் கங்காணிமார்களுக்கான பிராந்திய செயலமர்வுகள் பசறை, பதுளை, அப்புத்தளை, வெலிமடையென பல்வேறு இடங்களில் இடம்பெற்று வந்தன. இதனையடுத்து எதிர்வரும் ஜூலை மாதமளவில் மாநாடொன்று இடம்பெறவுள்ளதுடன், அரிய சேவையாற்றிய கங்காணிமார்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். அத்துடன், கங்காணிமார்களின் தொழில்சார் சிறப்பம்சங்களான பாடல்கள், கதைகள் என்பனவும் சேகரிக்கப்படுவதுடன், ஓய்வுபெற்றுள்ள கங்காணிமார்கள் பலரும் இத்திட்டத்தினுள் உள்வாங்கப்படவுள்ளனர். இம்மாநாட்டின் போது பிராந்திய கருத்தரங்குகளில் கூறப்பட்ட உயர்வான கருத்துகள் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் தொழில்சார் இடர்பாடுகள், வாழ்வியல் அபிவிருத்திக்கான தொழிற்திறன் பற்றிய கருத்துகள், அபிலாசைகள் என்பனவும் ஆராயப்படவுள்ளன.
இக்கருத்தரங்கு தொடர்பாக பிரதிக் கல்வியமைச்சர் மு.சச்சிதானந்தன் தெரிவிக்கையில்; ஏறக்குறைய 175 வருடகால வரலாற்றைக் கொண்டவர்களான பெருந்தோட்டத் துறையினரின் சமூகவளர்ச்சிக்கு அன்று தொட்டு இன்றுவரை பல்வேறு வகைகளில் மிக உயர்வான பங்களிப்பினை கங்காணிமார்கள் வழங்கிவருகின்றனர். பல துறைகளிலும் பங்களிப்புச் செய்து வரும் கங்காணிமார்களின் சாணக்கியம் நிர்வாகத்துறையையும் தொழிலாளர் சமூகத்தை உள்ளடக்கிய பிணக்குகளுக்கு சுமுகமான முடிவுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் அடிகோலியுள்ளது. இவர்கள் அளப்பரிய சேவைகளை ஆற்றிவருகின்றமையை பெருமைப்படுத்தவே மாநாடு நடத்தவுள்ளது.

No comments: