Monday, June 29, 2009

மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படாதது கவலையளிக்கிறது

பெருந் தோட்டத்துறைச் சார்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இதுவரை காலமும் தீர்க்கப்படாமலிருப்பது கவலைதரக் கூடிய விடயமென ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த கொடிய யுத்தம் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் முதுகெலும்பான தோட்டப்புற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு முகங்கொடுத்து அதற்குத் தீர்வு காண்பதில் எமக்குப் பங்குண்டு. அரசாங்கத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இருக்கின்ற போதிலும் இவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தோட்டப்புற பகுதியிலுள்ள வெற்றுக் காணிகளையெல்லாம் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென அரசு வெள்ளையறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சிறுபான்மை மக்களின் தீர்மானமிக்க வளம் குறைக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையொன்று உருவாகும். கடந்த 200 வருடங்களாக குளிரிலும் பலத்த காற்றின் மத்தியிலும் வேலை செய்து நாட்டின் வருமானத்தின் பிரதான தூண்களாக இருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதுவரை முகவரி கிடையாத சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புக்கோ,சுயநலனுக்காகவோ மூடி மறைக்கப்படாமல் பகிரங்கப்படுத்த என்றும் தயங்கக்கூடாது.

No comments: