Monday, July 19, 2010

நுவரெலியாவில் அடை மழை, மண்சரிவு அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வருகின்ற அடைமழையினால் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கினிகத்தேனை, நோட்டன், மஸ்கெலியா, வட்டவளை போன்ற பகுதிகளிலேயே மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தப் பிரதேசத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கினிகத்தேனை நகரிலுள்ள அம்பகமுவ பிரதேச சபை பணிமனைக்குச் செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியின் மண்திட்டொன்று சரிந்து அட்டன் கினிகத்தேனை பிரதான வீதியின் ஒருபகுதியில் விழுந்துள்ளது. எனவே பிரதேச மக்கள் மிக அவதானமாக இருக்கும்படி பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நுவரெலியா மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாகப் பெய்து வருகின்ற அடைமழையினால் காசல்ரீ, மவுசாகலை, கனியன், விமலசுரேந்திரபுர, பொல்பிட்டிய போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றதோடு நுவரெலியா மாவட்டத்திலுள்ள லக்ஷபான, டெவன், சென்கிளாயர், றம்பொடை போன்ற நீர் வீழ்ச்சிகளிலும் நீர்ப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இம் மாவட்டத்தில்
சீரற்ற காலநிலை நிலவுவதால் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஏனையவர்களும் தமது வழமையான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதேவேளை, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் இதன் வான்கதவுகளை எந்த நேரமும் திறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளிலும் ஆற்றோரங்களிலும் வாழுகின்றவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கொத்மலை நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் எல்.எம்.ஜி.விஜேசேகர அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற கால நிலையைத் தொடர்ந்து காலை வேளையிலும் மாலை வேளையிலும் மேக மூட்டம் ஏற்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: