நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற கால நிலை தொடர்கின்றது. இந்த மாவட்டத்தில் காற்றுடன் கூடிய அடைமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்கின்ற சீரற்ற கால நிலை காரணமாக பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீரத்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.
நுவரெலியா நகருக்கு அருகில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் பல முறிந்து விழுந்ததில் வீடுகளின் கூரைகள் பல சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.
இதனைத்தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா நகரிலிருந்து நுவரெலியா நகரம் வரையிலுள்ள பகுதிகளில் காற்றினால் ஆபத்தை விளைவிக்க கூடிய சுமார் 600 மரங்களைத் தறிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர் வன இலாகா பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மரங்களைத் தறிக்கும் நடவடிக்கைளில் வன இலாகா பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment