பெருந்தோட்ட கல்வி நிலை
பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் பெற்றோர்களின் பங்களிப்பும் என்ற ஆய்வு அறிக்கையை மலையகக் கல்வித்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் முன்வைத்து அங்கீகாரம் பெறுவதற்கான செயலமர்வு ஹட்டன் சீடா வள நிலையத்தில் இடம் பெற்றது.
மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வுக்கு மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் அனுஷியா சிவராஜா அமைச்சின் செயலாளர் ஷிராணி வீரக்கோன், அமெரிக்காவிலுள்ள டுலேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமரசிங்க, மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஆலோசகர் எல்கடுவ, ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த அமெரிக்க டுலேன் பல்கலைக்கழக மாணவர் மைக்கல் போல் மற்றும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிரிவின் கல்வி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட கல்வித்துறை சார்ந்த பலரும்கலந்து கொண்டனர். இந்த ஆய்வு மூலம்
மலையகத் தமிழ் மாணவர்களின் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது.
பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையிலான இடைநிலைப்பிரிவில் ஏற்படுகின்ற மாணவர் இடைவிலகலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பெருந்தோட்டப்பகுதி மாணவர்களிடத்தில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான பரிகார திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஆகிய முக்கிய முடிவுகள் வெளிக்கொணரப்பட்டன.
இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டமொன்றினைத் தயாரித்து அதனை முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தும் வகையில் அரசாங்கம், மலையக அரசியல் தலைமைகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புக்கள் என்பனவற்றின் பங்களிப்பினைக் கோருவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment