Tuesday, July 27, 2010

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது சவாலான விடயம் - ஸ்ரீகுமார்


இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது பெரும் சவாலாகவே இருக்கின்றது என்று இலங்கைப் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசகர் எஸ்.ஸ்ரீகுமார் பெருந்தோட்டத் தொழிற்துறையின் இன்றைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நுவரெலியாவிலுள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிலையக்கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போது தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் பெருந்தோட்டத்துறையானது சம்மேளனங்களின் தலையீடற்ற துறை, தொழிற்சங்கங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்ற துறை, கூட்டுப்பேரம் பேசுதலின் அடிப்படையிலான உடன்படிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் துறையாகும்.

1998 ஆம் ஆண்டு முதல் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்படுகின்ற கூட்டு உடன்படிக்கையின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கும் முறை அமுல் படுத்தப்படுகின்றது.

இந்த உடன்படிக்கையின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயமும் ஏனைய சலுகைகள் தொடர்பான விடயங்களும் உறுதி செய்யப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான சம்பளம் 405 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படைச் சம்பளமாக 285 ரூபாவும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளாக நிபந்தனைக்கு உட்பட்டதாக 30 ரூபாவும் 90 ரூபாவும் வழங்கப்படுகின்றது.

மேலும் தோட்டத்தொழிலாளியின் மாதாந்த வருமானத்திற்கு மேலதிகமாக மாதாந்தம் 1500 ரூபா சலுகையை அனுபவிக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இலங்கையின் பெருந்தோட்டத்துறையைப் பாதுகாப்பது அனைத்துத்தரப்பினரதும் கடப்பாடாகும் என்றார்

No comments: