Thursday, February 24, 2011

மலையக தமிழ் கூட்டமைபின் அலை இன்று நுவரெலியா மாவட்டத்தில் அடிக்கின்றது- தலவாக்கலையில் மனோ கணேசன்

எமது ஜனநாயக மக்கள் முன்னணியும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள மலையக தமிழ் கூட்டமைபின் அலை இன்று நுவரெலியா மாவட்டம் முழுக்க எழுச்சியுடன் அடிக்கின்றது. விலைவாசி உயர்வினால் திண்டாடும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எமது கூட்டமைப்பு நம்பிக்கைத்தரும் ஒளி விளக்காய் வழிகாட்டுகின்றதாக தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்; என தலவாக்கலை மேற் பிரிவு, கட்டுகல, கிலான்மோர் ஆகிய தோட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்ட மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையக தமிழ் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களான மனோ கணேசன் மற்றும் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டங்களில்; உரையாற்றிய மனோ கணேசன் மேலும் தெரிவிதுள்ளதாவது,

மலையகத்திலே இன்று, ஒரு தரப்பினர் தொழிலாளர்களின் வருமானத்திற்கு தடைவிதித்துள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு வழி கோலியுள்ளார்கள். இன்னொரு தரப்பினர் பாராளுமன்றத்திலே வாய்மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள். இந்நிலையில் தொழிலாளர்களின் நம்பிக்கைத்தரும் கூட்டமைப்பாக நாங்கள் எழுச்சி பெற்று வருகின்றோம்.

இந்நாட்டில் விலைவாசிகள் உயர்கின்றபோது ஏனைய தொழிலாளர்களுக்கு உரமானியம், வாழ்க்கை செலவு புள்ளிமானியம் என்று பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்நாட்டில் அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும்; தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. நமது தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லையா? நமது மக்கள் மாற்றான்தாய் பிள்ளைகளா? இன்றைய கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்விலே தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பறிக்கும் கொழுந்தையா, புல்லையா அல்லது மண்ணையா சாப்பிடுவது? என்ற கேள்விகள் இன்று மலையக மக்கள் மனங்களிலே எதிரொலிக்கின்றன. ஆனால் இந்த மக்களின் கேள்விகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவில்லை. மலையக மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற சபையிலே உரையாடாதது ஏன்? கேள்விகள் எழுப்பாதது ஏன்? பிரேணைகள் கொண்டுவராதது ஏன்? சபை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டங்கள் செய்யாதது ஏன்? என்ற கேள்விகளை மலையக தோட்டத் தொழிலாளிகள் இன்று எழுப்புகின்றார்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்காக, ஏனைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நமது மக்களுக்கு வாங்கி கொடுப்பதற்காக எமது மலையக தமிழ் கூட்டமைப்பு ஜனநாயக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த போராட்டத்தின் ஒரு அம்சமாகவே நாம் இந்த தேர்தலை நோக்குகின்றோம். எங்களது நோக்கத்தின் வெற்றி தேர்தல் வெற்றிக்கு அப்பால் செல்கின்றது. தேர்தலின் போது மலையக மக்கள் தரும் ஆணையை நாம் சம்பள போராட்டத்திற்கு பயன்படுத்துவோம். தேவையற்ற நிபந்தனைகள் அல்லாத அடிப்படை சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலிலே மலையக தோட்டத் தொழிலாளர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

Wednesday, February 23, 2011

மலையக மக்கள் வர்க்க ரீதியில் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே உரிமைகளை பெற முடியும்- ஆறுமுகன் தொண்டமான்


மலையக மக்கள் அரசியல் கட்சி பேதங்களையும் தனி மனித பேதங்களையும் ஒதுக்கிவிட்டு வர்க்க ரீதியில் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாத்திரமே அந்த பலத்தை முன்வைத்து மேலும் பல உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் . எனவே நாம் ஒரு பேரம் பேசும் சக்தியாக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என இ.தொ.கா பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காண முடியாதுள்ளது. தோட்டத் தொழிலாளர்களிடம் காணப்படும் ஒற்றுமையின்மையே இதற்கு பிரதான காரணம். தொழிலாளர்கள் பல தொழிற்சங்கங்களில் அங்கம் வகிப்பதால் தோட்ட நிர்வாகங்கள் பிரச்சினைகளை தட்டிக் கழிக்கின்றன. எனவே தொழிலாளர்கள் எம்முடன் இணைந்து ஒரே கொடியின் கீழ் செயற்படுபவர்களாயின் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

தொழிற்சாலையை மூடுவதற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்


தெரேசியாத் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையை திடீரென மூடிவிடுவதற்கு தோட்ட நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கெதிராக தேயிலைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்தத் தேயிலைத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேயிலைத் தூளினை இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம் பரிசோதனை செய்தபோது அந்தத் தூளில் அதிகமான இரசாயன கலவை இருந்தமையாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தெரேசியா தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையைத் தொடர்ந்து மூடி விடுவதற்கும் இந்தத் தேயிலைத் தொழிற்சாலையில் அரைக்கப்பட வேண்டிய கொழுந்துகள் இனிமேல் கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்திலுள்ள தேயிலைத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இணக்கப்பாடு ஒன்று நேற்று புதன்கிழமை தோட்ட நிர்வாகத்தின் பிரதிநிதிகளுக்கும் தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு மிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் 14 நாட்களுக்குள் மீண்டும் இந்தத் தேயிலைத் தொழிற்சாலையை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 22, 2011

பெருந்தோட்ட வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாப்புடன் அந்நிய செலாவணியும் திரட்டு

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் அமைந்துள்ள பெருந்தோட்ட நிர்வாகங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாக்கப்படுவதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியையும் திரட்டக்கூடியதாகவுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வனாந்தர செயற்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் இரத்தினபுரி, ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்டப்பகுதியில் இடம்பெற்றது. இங்கு ஹப்புகஸ்தென்ன மற்றும் உடபுசல்லாவ பெருந்தோட்டங்களின் வனாந்தர முகாமைத்துவ பிரிவின் விசேட நிபுணரான திரு.பிரியா குணவர்த்தன ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"தேயிலை தயாரிப்பை பொறுத்தமட்டில் வனாந்தர திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த திட்டங்களின் மூலம் பெறப்படும் விறகு மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை விட அதிகளவு சிக்கனமான முறையில் தேயிலை உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடிகிறது. எரிபொருளின் மூலம் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய 32 ரூபா செலவாகிறது. ஆயினும் விறகின் மூலம் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய 8 ரூபாவே செலவாகிறது. ஆயினும் வருடாந்த தேசிய தேவையான 300 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்வதற்கு 4000 ஹெக்டெயர் பரப்பளவில் வனாந்தர செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பெருந்தோட்ட கம்பனிகளின் வனாந்தர திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன".

“இந்த வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாப்பு சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. பெருந்தோட்டங்களிலிருந்து பெறப்படும் விறகுகளின் மூலம் உற்பத்தி செலவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டங்களின் மூலம் மண் வளம் பேணப்படுவதுடன், நீர் சேகரிப்பு நிலையங்களுக்கு நிழலாகவும் பயன்படுகின்றன. வனாந்தர பாதுகாப்பு திணைக்களத்தின் கீழுள்ள பெருமளவான வர்த்தக நோக்கிலான வனாந்தரங்கள் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன. தற்போது பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகப்பகுதியில் காணப்படும் வனாந்தரங்கள் மொத்தமாக 20000 ஹெக்டெயார் பரப்பில் காணப்படுகிறது. 10 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் காணப்படுகின்றன. பெருந்தோட்ட வனாந்தர திட்டஙகளின் கீழ் பெருமளவில் இயுக்கலிப்டஸ் கிராண்டிஸ் மற்றும் அகாசியா மங்கியம் போன்ற இன மரங்களே அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவை விறகு பாவனைக்காகவே பயிரிடப்படுகின்றன. தேக்கு மற்றும் மஹாகொனி போன்ற மரங்கள் உயர் பெறுமதியான தளபாட தயாரிப்புக்கு பயன்படுத்தும் நோக்கில் பயிரிடப்படுகின்றன".

"பெருந்தோட்ட வனாந்தர முகாமைத்துவ வரலாறு 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை பராமரிக்கும் குத்தகை உடன்படிக்கை கைச்சாத்திடலுடன் ஆரம்பமானது. இக்காலப்பகுதியிலேயே வனாந்தர திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது ஆரம்பமானது. இதற்காக இறப்பர், தேயிலை, தென்னை மற்றும் இதர பயிர்ச்செய்கைக்கு உதவாத நிலப்பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன. 1997ஃ98 ஆண்டிலிருந்து வனாந்தர திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரசாங்க திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது".

"அனைத்து வனாந்தர விஞ்ஞான வனாந்தர செயன்முறை (ளுஉநைவெகைiஉ கழசநளவசல pசயஉவiஉநள) உட்பட்டது. உரிய காலத்தில் வெட்டல், தறித்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்றன இதில் அடங்குகின்றன. உறுதியான செயற்பாட்டுக்கான முகாமைத்துவ முறைக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. பெருந்தோட்ட கம்பனிகளின் பெரும்பாலான வர்த்தக வனாந்தரங்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு, இலக்கமிடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன".

"ஏனைய பயிர்களைப் போன்று வர்த்தக நோக்குடைய வனாந்தரங்களும் முறையான தறிப்பு, மற்றும் மீள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமாகும். இதில் தறிப்பு நடவடிக்கையின் போது நோக்கம் கருத்தில் கொள்ளப்படும். உதாரணமாக, விறகு பெறுவது நோக்காக இருப்பின், 8-10 வருட காலம் வளர்ச்சியடைந்த மரங்களே தறிக்கப்படுகிறது".

அங்கீகாரம் பெற்ற பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் வனாந்தர திட்டங்கள் தேசிய அமைப்புகளின் மூலம் அடிக்கடி மேற்பார்வை செய்யப்படுவதுடன், ஒரு மரம் தறிக்கப்படும் போது இறுக்கமான கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு மரத்தை தறிப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சின் பிரதிநிதி, மாவட்ட வனப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், சூழல் மத்திய அதிகார சபையின் பிரதிநிதி மற்றும் மாவட்ட அல்லது மாகாண செயலகத்தின் உத்தியோகத்தரிடமிருந்து அனுமதியை பெற்றுக்கொண்டே மேற்கொள்ளப்படுகிறது." என்றார்

நன்றி- வீரகேசரி
(வர்த்தக உலா)

தோட்ட மக்களுக்கு குடியிருப்புகள் அமைக்க உடனடி நடவடிக்கை


பன்வில ஆகல சின்னகந்தக்கட்டி மேற்பிரிவு தோட்டத்தில் குடியிருப்புகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதியான தோட்டத்திலுள்ள 39 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் கடந்த 5 ஆம் திகதி முதல் ஆகல தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருந்தனர். இவர்கள் தங்கியிருந்த பாடசாலையை இயங்க வைப்பதற்காகவும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்வதற்காகவும் இத் தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் பழைய இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச் சம்பவத்தினை தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்ட விசேட சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை பன்வில கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் இடம் பெற்றது. இச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் சின்னபந்தகட்டி தோட்டத்தின் கீழ்ப்பிரிவில் ஆகல அரச பெருந்தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு 20 வீடுகளை கட்ட காணியை வழங்க தீர்மானித்துள்ளது.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்


மலையக மாணவர்களின் கல்விக்கு கைக்கொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எட்டியாந்தோட்டை எக்கிலாஸ் தோட்டத்திலுள்ள பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்களையும் வித்தியாலயத்திற்காக தளபாடங்களையும் வழங்கவுள்ளது.

கொழும்பிலிருந்து இயங்கும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மலையகத்தில் பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றவேளை பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் சம்பள கூட்டு ஒப்பந்தம்- மனோ கணேசன்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் உண்மையிலேயே உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் ஒப்பந்தமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையகத் தமிழ் கூட்டமைப்பின் சார்பில் மஸ்கெலிய புதுக்காடு, வலதெல, க்ளன்டில் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் உரையாற்றிய போது ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டபோது

தற்பொழுது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் 30ஆம் திகதி முடிவுக்குவருகின்றது. உண்மையிலேயே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் உள்ளுராட்சி தேர்தலைவிட, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கையெழுத்திடப்படும் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தமே நமக்கு முக்கியமானதாகும். தேர்தல் முடிந்து, 13 நாட்களில் இன்று நடைமுறையில் இருக்கும் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகின்றது என்பதை மனதில்கொண்டு தொழிலாளர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் பிரதான பிரச்சார பொருளாக மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை முன்வைத்திருக்கின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 405 ரூபாய் சம்பளம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையிலே அவர்களுக்கு கிடைப்பது 285 ரூபாய் மட்டுமே. வேலைக்கு வருகைத்தரும் நாட்களின் அடிப்படையிலான 90 ரூபாவும், 18 கிலோ கொழுந்து எடுக்கவேண்டிய நிபந்தனையின் அடிப்படையிலான 30 ரூபாவும் பெரும்பாளான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. கர்ப்பமடையும் பெண்களுக்கு தொழில் வழங்கப்படுவதில்லை. சில தோட்டங்களில் 15 நாள் வேலைக்கு சமூகமளிக்காவிட்டால் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் சம்பளத்துடன் வழங்கப்படும் தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை. இதுபோன்று தொழிலாளர்களுக்கு பல்வேறு பாதகமான அம்சங்களை உள்ளடக்கியதுதான் பொருந்தோட்ட சம்;பள உடன்படிக்கையாகும். இத்தகைய மோசடி கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு தொழிலாளர்கள் வாக்களிக்க முடியுமா? என்றார்.