Thursday, February 24, 2011

மலையக தமிழ் கூட்டமைபின் அலை இன்று நுவரெலியா மாவட்டத்தில் அடிக்கின்றது- தலவாக்கலையில் மனோ கணேசன்

எமது ஜனநாயக மக்கள் முன்னணியும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள மலையக தமிழ் கூட்டமைபின் அலை இன்று நுவரெலியா மாவட்டம் முழுக்க எழுச்சியுடன் அடிக்கின்றது. விலைவாசி உயர்வினால் திண்டாடும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எமது கூட்டமைப்பு நம்பிக்கைத்தரும் ஒளி விளக்காய் வழிகாட்டுகின்றதாக தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்; என தலவாக்கலை மேற் பிரிவு, கட்டுகல, கிலான்மோர் ஆகிய தோட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்ட மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையக தமிழ் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களான மனோ கணேசன் மற்றும் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டங்களில்; உரையாற்றிய மனோ கணேசன் மேலும் தெரிவிதுள்ளதாவது,

மலையகத்திலே இன்று, ஒரு தரப்பினர் தொழிலாளர்களின் வருமானத்திற்கு தடைவிதித்துள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு வழி கோலியுள்ளார்கள். இன்னொரு தரப்பினர் பாராளுமன்றத்திலே வாய்மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள். இந்நிலையில் தொழிலாளர்களின் நம்பிக்கைத்தரும் கூட்டமைப்பாக நாங்கள் எழுச்சி பெற்று வருகின்றோம்.

இந்நாட்டில் விலைவாசிகள் உயர்கின்றபோது ஏனைய தொழிலாளர்களுக்கு உரமானியம், வாழ்க்கை செலவு புள்ளிமானியம் என்று பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்நாட்டில் அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும்; தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. நமது தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லையா? நமது மக்கள் மாற்றான்தாய் பிள்ளைகளா? இன்றைய கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்விலே தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பறிக்கும் கொழுந்தையா, புல்லையா அல்லது மண்ணையா சாப்பிடுவது? என்ற கேள்விகள் இன்று மலையக மக்கள் மனங்களிலே எதிரொலிக்கின்றன. ஆனால் இந்த மக்களின் கேள்விகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவில்லை. மலையக மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற சபையிலே உரையாடாதது ஏன்? கேள்விகள் எழுப்பாதது ஏன்? பிரேணைகள் கொண்டுவராதது ஏன்? சபை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டங்கள் செய்யாதது ஏன்? என்ற கேள்விகளை மலையக தோட்டத் தொழிலாளிகள் இன்று எழுப்புகின்றார்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்காக, ஏனைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நமது மக்களுக்கு வாங்கி கொடுப்பதற்காக எமது மலையக தமிழ் கூட்டமைப்பு ஜனநாயக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த போராட்டத்தின் ஒரு அம்சமாகவே நாம் இந்த தேர்தலை நோக்குகின்றோம். எங்களது நோக்கத்தின் வெற்றி தேர்தல் வெற்றிக்கு அப்பால் செல்கின்றது. தேர்தலின் போது மலையக மக்கள் தரும் ஆணையை நாம் சம்பள போராட்டத்திற்கு பயன்படுத்துவோம். தேவையற்ற நிபந்தனைகள் அல்லாத அடிப்படை சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலிலே மலையக தோட்டத் தொழிலாளர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

No comments: