புதிய அரசியல் யாப்பில் இந்திய வம்சாவளி தமிழர் இருப்பையும் உரிமைகளையும் பாதுகாப்பது பற்றிய ஆலோசனைகளை முன்மொழிவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் புதிய அரசியலமைப்பு பற்றிய குழு நிலை விவாதங்கள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வு கடந்த திங்கட்கிழமை வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் இ.தொ.கா வின் தலைவர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான், கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர், மாகாண சபை உறுப்பினர் சதாசிவம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பி.பி.தேவராஜ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் இருப்பையும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாவட்ட சுயாட்சி சபையொன்று அவசியம் என தெரிவித்தார். இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான பிரத்தியேக பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான தயார்படுத்தல்களை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. காலம்காலமாக இந்திய வம்சாவளி மக்கள் அரசியலமைப்பு உருவாக்க யோசனைகளின் போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர் வரலாற்றை நோக்கும் போது அது புரிகிறது.
சோல்பரி அரசியலமைப்பு முதல் 2 ஆம் குடியரசு யாப்புவரை இந்திய வம்சாவளியினருக்கான பிரத்தியேக சொற்பதம் கூட பாவிக்கப்படவில்லை.பல்லின மற்றும் பல் கலாசார நாடு என அடையாளப்படுத்தும் இலங்கை தமிழ் மக்களை மாத்திரமே சிறுபான்மையாக கருத்திற்கொண்டுள்ளது என்பதே உண்மை. இந்திய வம்சாவளியினர் தமக்கான தனியான அடையாளங்களையும் வரலாற்றுப் பாரம்பரியங்களையும் பேணி வந்துள்ளனர் சோல்பரி யாப்பில் சிறுபான்மையின் காப்பீடாக 29 (2) சரத்து அமைந்துள்ளது. இதனைத் தழுவி 1972 யாப்பில் அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்பட்டாலும் அவை இந்திய வம்சாவளியினருக்கு எந்தளவு பயனுடையது என்பதை கடந்த கால அனுபவங்களில் உணர முடிந்தது.
13 ஆம் திருத்தத்தில் மாகாணசபை அதிகாரங்கள் கொண்டுவரப்பட்டாலும் நுவரெலியாவில் பெரும்பான்மையாக வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்த முடிந்ததா என்பதும் கேள்விக்குறியே. தற்போதைய அரசியலமைப்பில் மலையகத் தமிழர்கள் உள்வாங்கப்பட்டாலும் இந்தியத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று பிரத்தியேகமான வசனம் பாவிக்கப்பட்டால் சாலச் சிறந்தது.
தந்தை செல்வாவினால் வரையறுக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் என்ற இரு பிரிவுகள் மாத்திரம் உள்ளதால் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களுக்கு எவ்வாறு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதனால் இந்திய வம்சாவளியினர் என்ற தனி அடையாளம் இருக்குமாயின் வரவேற்கத்தக்கது.
இதன்படி 1996 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க புதிய அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கான மக்களின் நலனுக்காக வரையப்பட்ட முதன்மையான யாப்பாகின்றது. குறித்த யாப்பில் சிறுபான்மையினருக்கான சுதந்திரம் அரசியல் பிரதிநிதித்துவம் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கென விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்க யாப்பின் மாதிரியை உள்வாங்கி இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் மேலும் அந்த அரசியல் யாப்பில் உள்ள அடிப்படை உரிமை பற்றிய விடயங்களும் அவசியம் உள்வாங்கப்பட வேண்டும். அதேபோல் கணிசமான அளவு வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் எமக்கு நியாயம் தரும் வகையிலான தேர்தல் முறைமையொன்றினை உருவாக்கப்பட வேண்டும்.
வடபகுதியை கருத்திற்கொண்டு மாத்திரம் முன்னெடுக்கப்படும் அதிகாரப்பகிர்வு இனிவரும் காலங்களில் இந்திய வம்சாவளியினரையும் கருத்திற் கொண்டதாக அமைய வேண்டும்.
இந்திய வம்சாவளியினரின் தனிப்பட்ட கலாசாரப் பின்னணியும் பாதுகாக்கப்படும் வகையில் அரசியலமைப்பு வரையப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment