தெஹியோவிற்ற, டென்ஸ்வர்த் தோட்ட மக்கள் தமது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மலையக புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்துடன் இணைந்து உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேற்படி மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சப்ரகமுவ மாகாண கேகாலை மாவட்ட தெரணியகலை டென்ஸ்வர்த் தோட்டத்தில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களாகிய நாம் கடந்த 200 வருட வரலாற்றைக் கொண்டதுடன் தேயிலை உற்பத்தியின் மூலம் அந்நிய செலாவனியை ஈட்டித்தருவதற்கு காரணமாக இருந்த எமது வாழ்வாதாரம் இன்றும் அதே நிலையில் இருக்கிறது. கவனிப்பாரற்ற நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம்.
தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றில் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம். அரசியல் ரீதியில் மலையகம் பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் எமது பகுதி மக்கள் அரசியல் அநாதைகளாக வாழ்ந்து வருகின்றனர். பெருந்தோட்டப்புறங்களுக்கு பல நன்மைகள் கிடைத்தும் கூட எங்கள் தோட்டத்திற்கு எந்தவித வசதி வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் நமது தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொண்ட பின்னர் எங்களைக் கண்டுகொள்வதே இல்லை. வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. எமது தோட்டப்பகுதிகளுக்கு அண்மித்த கிராமப்பகுதி மக்கள் 20 வருடங்களுக்கு முன்னரே தனிவீட்டு உரிமையைப் பெற்றுக் கொண்டார்கள். கிராமப்பகுதிகள் பல அபிவிருத்திகளை கண்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களான நாம் இன்னும் அதே லயன் காம்பராக்களில் சிறிய அறைகளில் குடும்பத்தில் 10 பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஒன்றாக வசிக்கும் துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலை தொடருமானால் எங்கள் எதிர்கால சந்ததியினரின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கப்போகிறது. டென்ஸ்வர்த் தோட்டத்தில் தரம் 7 வரையான ஆரம்ப பாடசாலையும் இருக்கிறது. இப்பாடசாலை எவ்வித அபிவிருத்தியும் இல்லாத நிலையிலேயே இயங்கி வருகிறது. சில தேவைகள் உங்கள் கவனத்திற்கு கீழே குறிப்பிடுகின்றோம். பாடசாலை அபிவிருத்தி, பாதை அபிவிருத்தி, வாசிக சாலை வசதியின்மை, ஆலய திருத்த வேலை, மைதானம் இவ்வாறான பல தேவைகள் உள்ளன. இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
அத்துடன் மிக முக்கிய விடயமான கிராமிய வீட்டு வசதி தொடர்பில் தோட்டத்தில் தற்போது இறப்பர் பால் சேகரிக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு நிலப்பரப்பில் இருந்த இறப்பர் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அவ்விடத்தில் இடமோ பாதை, பாடசாலை, கோயில் பிள்ளை பராமரிக்கும் நிலையம், மின்சார வசதி, நீர் வசதி போன்ற பல முக்கிய தேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி இருக்கிறது.
அது மட்டுமல்லாது எந்தவித மண்சரிவு அபாயமும் அறிவிக்கப்படாத இடமாக இருக்கின்றது. இவ்விடத்தில் இருக்கும் மரங்களை அகற்றி மீண்டும் இறப்பரோ அல்லது வேறு எந்த பயிர்களோ பயிரிடும் முன்பதாக அந்த இடத்தை பெற்றுக் கொடுத்து லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்குமாறு பணிவோடும் மிக தாழ்மையோடும் எங்கள் தோட்ட பொது மக்களாகிய நாங்கள் எங்களுடைய கையொப்பங்களை இட்டு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment