நுவரெலியா நகரில் வீதிக்கு வீதி மதுபான நிலையங்கள் அமைப்பட்டுள்ளன. ஒரு சிலர் விற்பனை அனுமதிப் பத்திரம் பெற்றும் கடை திறப்பதற்கு இடமில்லாமல் இருக்கின்றனர். கடந்த அரசாங்க காலத்தில் இருந்ததை விட தற்போது மதுபான கடைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதுடன், வீதிகள் தோறும் இரண்டு அல்லது ஒன்று என்ற அடிப்படையில் மதுபானக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் மதுபான கடைகளும் பிரதான வீதியில் 2 பார்களும், எலிசபெத் வீதியில் ஒரு மதுபான கடையும் லோசன் வீதியில் 3 மதுபான கடைகளும் கண்டி வீதியில் 2 பார்களும் 4 மதுபான கடைகளும் ஒரு பியர் கடையுமாக 15 மதுபான விற்பனை நிலையங்கள் நுவரெலியா நகரிற்குள் இருக்கின்றன. இந்த 15 மதுபான விற்பனை நிலையங்களுடன் கந்தப்பளை வீதியில் ஹாவ-எலியாவில் மதுபான விற்பனை நிலையம் பொரவத்த என்னும் இடத்தில் ஒரு மதுபான விற்பனை நிலையமும் உள்ளன. இவ்விரண்டு மதுபான விற்பனை நிலையங்களும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மதுபான விற்பனை நிலையங்கள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் ஆலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், முஸ்லீம் பள்ளிவாசல், தொழிற்சாலைகளும் அமைந்திருக்கின்றன. நுவரெலியாவிலிருந்து ரம்பொட புசல்லாவ வரையிலும் பல மதுபான விற்பனை நிலையங்களும் நுவரெலியாவிலிருந்து நானுஓயா லிந்துல தலவாக்கலை வரையும் நுவரெலியாவிலிருந்து வெளிமடை வரையும் நுவரெலியாவிலிருந்து கந்தப்பளை இராகலை வரையிலும் பல மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன.
இது இப்படியிருக்கையில், நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உள்ள உல்லாச ஹோட்டல்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றது. நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 50 இற்கும் அதிகமான மதுபானம் விற்பனை நிலையங்களும் பார்களும் உட்பட சுமார் 15 இற்கும் அதிகமான உல்லாச ஹோட்டல்களிலும் பார்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத்தொழிலாளர்கள் அதிகமாக நடமாடும் இடங்களிலேயே மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படுகின்றன. இது இவ்வாறிருக்க பெருந்தோட்ட பகுதிகளில் அனுமதியற்ற மினிபார்களும் இயங்குகின்றன. இலங்கையிலே மதுபான விற்பனை நிலையங்கள் அதிகமாக இருப்பது நுவரெலியா மாவட்டத்திலாகும்.
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் கல்வி, பொருளாதார தொழில் வாய்ப்பு, வீதிகள், குடியிருப்புகள் போன்றவற்றின் அபிவிருத்தியை விட மதுபான விற்பனை நிலையங்களே அபிவிருத்தியடைந்துள்ளதென்று இம்மாவட்ட பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment