ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத முதலாம் திங்கட்கிழமை (5ம் திகதி) அன்று உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டிலும் செப்டம்பர் 28ந் திகதி முதல் அக்டோபர் 5ந் திகதி வரையில் உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தவரும் சொந்த வீட்டைக் கொண்டிருக்க உரித்துடையவர். மலையகத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டுரிமையும், காணி உரிமையுமின்றி வாழ்கின்றனர். இவர்கள் வாழும் குடியிருப்புக்களில் 70 சத வீதமானவை வாழ்வதற்கேற்ற சூழலைக் கொண்டிராதவை. 60 சத வீதமானவை மலசல கூடமின்றி காணப்படுகின்றன.
48 சத வீதமானவை சுத்தமான குடிநீரைப்பெறும் வாய்ப்பு இல்லாதவை. 45 சதவீதமானவை ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற லயன் குடியிருப்புக்களாக காணப்படுகிறது.அடிப்படை மனித உரிமைகளில் வீட்டு வசதி உரிமையும் ஒன்றாகும். பாதுகாப்பாகவும், அமைதியாகவும், கௌரவமாகவும், எங்காவது ஓரிடத்தில் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையே இதுவாகும். ஆகவே போதுமான வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வது வெறுமனே ஒரு நபரின் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தினை வைத்து தீர்மானிக்கப்படக்கூடாது.
போதுமான வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையானது. இலங்கையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு 1991ம் ஆண்டு பொதுவான கருத்துரையொன்றை வெளியிட்டது. போதுமான வீட்டு வசதிக்கான உரிமையானது பின்வரும் ஏழு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
(அ) ஆதன அனுபவிப்புக்கான சட்ட பாதுகாப்பு:
கட்டாயப்படுத்தி வெளியேற்றல், தொல்லை மற்றும் ஏனைய பயமுறுத்தல்களுக்கு எதிராக சட்ட பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை ஒருவர் கொண்டுள்ளார். ஆதன அனுபவிப்புக்கான பாதுகாப்பான உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. இது எல்லா வகையான வீட்டு வசதிகளையும் அதாவது ஒன்றில் அது முறையற்ற குடியேற்றமொன்றின் வதிவிடமாளிகையொன்றாக அல்லது குடிசையொன்றாக இருப்பினும் இது பிரயோகிக்கப்படும் என அக் குழு தெரிவித்துள்ளது.
(ஆ) சேவைகளும் மூலப் பொருட்களும்
போதுமான வீட்டு வசதியென்பது கட்டட மூலப் பொருட்களை அணுகிப் பெற்றுக் கொள்வதற்கான ஒவ்வொருவரினதும உரிமையை மாத்திரமின்றி நீர், ஆரோக்கியம், வலு, கழிவகற்றல், வடிகாலமைப்பு மற்றும் அவசர சேவைகள் போன்ற அத்தியாவசியமான சேவைகளுக்கான உரிமையினையும் உள்ளடக்கியுள்ளது.
(இ) செலவைத் தாங்கும் தன்மை
போதுமான வீட்டு வசதி இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்பதல்ல. ஆனால் வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற தனிப்பட்ட அல்லது குடும்பத்தவரது செலவுகள் என்பது தமது ஏனைய அடிப்படைத் தேவைகளை திருப்தி செய்ய முடியாத மக்கள் என கருதப்படக் கூடாது.
(ஈ) குடியிருக்கத்தகு நிலை:
போதுமான வீட்டு வசதியானது இடைவெளிகொண்ட வசிப்பிடங்களாகவும், குளிர், ஈரத்தன்மை, உஷ்ணம், மழை, காற்று மற்றும் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலை உள்ளாக்கும் கட்டமைப்பு ஆபத்துக்கள் மற்றும் நோய்க்காவிகள் (உதாரணம் விலங்குகளால் பரப்பப்படுகின்ற நோய்கள்) என்பவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதனையும் உள்ளடக்கியுள்ளது.
(உ) அணுகக் கூடிய நிலையிருத்தல்:
போதுமான வீட்டு வசதியானது பௌதீக ரீதியாக அணுகக் கூடிய நிலையிருத்தல் வேண்டும். அங்கவீனமுடைய மக்களும் வீட்டு வசதியை அணுகக்கூடிய நிலையிலும் அல்லது புதிய வீடொன்றைக் கட்டிக்கொள்வதற்கான போதுமான அளவு காணி இருப்பதனையும் நிச்சயப்படுத்திக் கொள்வதனைக் கூறுகின்றது.
(ஊ) இடவமைப்பு:
போதுமான வீட்டு வசதியானது வேலைவாய்ப்புத் தெரிவுகளையும், சுகாதார கவனிப்புச் சேவைகள் பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய சமூக வசதிகளை நாடிப் பெறுவதனை அனுமதிக்கக் கூடிய இடமொன்றில் இருத்தல் வேண்டும். வீட்டு வசதியானது மாசுபடுத்தப்பட்ட இடப்பரப்பிலோ அல்லது உரிமைக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் மாசுபடுத்தலை தோற்றுவிக்கும் மூலங்கள் நிறைந்த இடத்திலோ கட்டப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ள போதிலும் தோட்டத் தொழிலாளரின் வீட்டு வசதிக்கான உரிமைகள் அநேகமாக இன்று மறுக்கப்பட்டு வருகின்றதென்றே கூறவேண்டும். தோட்டங்களில் ஒரு பகுதியைச் சுவீகரித்து கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு புதிய குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு சட்ட ரீதியாக உரிமையாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கிறது. ஆயினும் தொழிலாளருக்கான வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்தும் போது அங்கு தேவையான அடிப்படை வசதிகளும், சட்ட ரீதியான உரிமையும் கிடைப்பதில்லை.
ஏழு பேர்ச் காணியிலேயே தோட்டத் தொழிலாளருக்கான வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு ஒரு வீட்டை மட்டுமே அமைத்துக் கொள்ள முடிவதுடன் வேறு மேலதிக வசதிகள் எதையுமே மேற்கொள்ள முடியாது அடுத்தடுத்து வீடுகள் ஒட்டியபடி ஒடுக்கமாகவே அமையப் பெறுகின்றன. இதுவும் கூட லயன் முறையை ஒத்ததாகவே உள்ளது என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் காணிக்கான உறுதியாவது கிடைத்தால் அதுவே பெரிய காரியமாக இருக்கும் எனக் கூறும் தொழிலாளர்கள் வருடங்கள் பல கடந்துவிட்ட போதிலும் இன்னும் காணி உரிமை இல்லையே என அலுத்துக்கொள்கின்றனர்.
ஒரு குடியிருப்பும் அதைச் சூழவுள்ள காணியும் அதற்கான பெறுமதி முற்றிலும் செலுத்தப்பட்ட பின்னரேயே குடியிருப்பாளருக்கு உரிமையாக்கப்படும்.ஆனால் பெருந்தோட்டக் காணி அரசுக்கு சொந்தமான இக்காணியை மக்கள் பெருந் தோட்ட அபிவிருத்திச் சபையும். பெருந் தோட்டக் கூட்டுத்தாபனமும் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளன.
எனவே இக்காணியை வெளியாருக்கோ அல்லது தொழிலாளருக்கோ சட்டப்படி விற்பனைச் செய்ய முடியாது. இவ்வாறான நிலையில் தமது தோட்டத்தில் வேலை செய்வோருக்காக அமைக்கப்படும் குடியிருப்பையும் சுற்றியுள்ள காணியையும் தொழிலாளர்களுக்கு விற்பனைச் செய்வது சாத்தியமாகுமா? இந்நிலையில் தோட்ட வீடமைப்புத் திட்டம் எவ்வாறு முழுமையாக முடியும்?
தனக்கு சொந்த மில்லாத காணியில் தனது கைப்பணத்தைச் செலவிட்டு வீடு கட்டி மகிழும் ஒரே மனித கூட்டம் தோட்டத் தொழிலாளர்களாகத்தான் இருக்க முடியும்.
எனவே தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்டக் காணியை உரிமையாக்கித்தர முன்வரவேண்டும். இல்லையேல் இதுபோன்ற வீடமைப்புத் திட்டத்தை அரசியல் கண்கட்டுவித்தையாக மட்டுமே கருதவேண்டியிருக்கும்.
இங்கிரிய மூர்த்தி
நன்றி- தினகரன் வாரமஞ்சரி
No comments:
Post a Comment