தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு 405 ரூபா வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக இ.தொ.கா.உபதலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 290 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலை வரவுக்கான விசேட அலவன்ஸாக 85 ரூபாவும், திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்குவதற்கும், மேற்படி ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு 2011 மார்ச் வரை அமுலில் இருக்கும். அதேவேளையில் 2006ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளதால் ஏப்ரல் மாதத்தில் இருந்து இணக்கம் காணப்பட்ட சம்பள நிலுவை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
தற்பொழுது தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 200 ரூபாவும் நாணய மாற்று விசேட கொடுப்பனவாக 20 ரூபாவும் மாதத்தில் 75 சதவீத வேலைக்கு சமுகமளித்திருந்தால் நாளொன்றுக்கு 70 ரூபாவுமாக மொத்தமாக 290 ரூபாவைப் பெற்று வந்தனர்.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமையவே மேற்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து புதிய சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்தன. இதுவரை சம்பள உயர்வு தொடர்பாக 8 சுற்று பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் நடத்திய போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
இந் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த பொழுதும் நேற்று மீண்டும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாகவே 405 ரூபா எனும் தொகையை நாளொன்றுக்கு வழங்குவதென இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் சார்பில் நாளொன்றுக்கு 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இந்தத் தொகையை வழங்க முடியாதெனத் தெரிவித்த முதலாளிமார் சம்மேளனம் நேற்றுக் காலையில் நாளொன்றுக்கு 390 ரூபா அளவிலேயே வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.
அதாவது அடிப்படைச் சம்பளமாக 275 ரூபாவும் வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 100 ரூபாவும் திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 15 ரூபாவும் வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனம் இருந்தது.
இதற்கிடையில் இந்த அறிவிப்புடன் ஒத்துழைக்க போவதில்லை என கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய தொழில் சங்கங்கள் இரண்டும் தெரிவித்துள்ளன.
500 ரூபா என்ற கோரிக்கையை முன்வைத்து போராடிய போதும், தற்போ இந்த தொகைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதுவரையில் இவ்வாறான எந்த ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அதன் பின்னரே தமது தீர்மானத்தை வெளியிட முடியும் என முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தொட்டத்துறை தலைவர் லலித் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment