Wednesday, September 9, 2009

ஒத்துழையாமைப் போராட்டத்தை வலுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகள்

தோட்டத் தொழிலாளர்களின் 500 ரூபா சம்பளத்தினை வலியுறுத்திய ஒத்துழையாமைப் போராட்டம் பெருந் தோட்டப்பகுதிகளில் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்தப் போராட்டங்களில் தோட்டத்தொழிலாளர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொகவந்தலாவை, மஸ்கெலியா, ஹட்டன், தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம, பத்தனை, கொட்டகலை, டிக்கோயா போன்ற பகுதிகளில் மேலும் பல போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தொழிலாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

அதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டுள்ளனர். மேற்படி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அக்கரப்பத்தனை – டயகம வீதியில் பெல்மோரல் சந்தியில் இடம்பெறுகின்றது. இதில்14 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லெட்சுமணன், ஜெயக்குமார், ஜெயசீலன், செல்வகுமார், நித்தியானந்தன், மஹேந்திரன், தாமோதிரன், திருஞானசுந்தரம் அபிமன்யு, ஜெயசேகர, மணமோகன், யோகேஸ்வரன், முனியாண்டி, முருகதாஸ் ஆகியோர இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று 09-09-2009 ஆம் திகதி காலை 7.20 மணிக்கு ஆரம்பமானது.

அத்துடன் பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வித தொழிற்சங்க பேதமின்றி இந்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு ஒன்று கூடியிருக்கின்றனர்.

அதேவேளை,சம்பள உயர்வை வலியுறுத்தி ஹட்டன் வெலிஓயா மேற்பிரிவு தோட்டத்தொழிலாளர்கள் தன்னிச்சையாக மெதுவாகப்பணி செய்யும் போராட்டமொன்றினை நேற்று 08-09-2009 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர்.

லிந்துலை ஆகரகந்த தோட்டத் தொழிலாளர்கள் நாளை மறுதினம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர்

நன்றி- வீரகேசரி இணையம்

No comments: