டிக்கோயா லெதண்டி பகுதியில் காற்றுடன் கடும்மழை; வீடுகள் சேதம்
டிக்கோயா லெதண்டி கிராம சேவகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-04-2009) பிற்பகல் பெய்த பலத்த காற்றுடன் கூடிய அடைமழையினால் 22 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இவற்றுள் எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளில் வாழ்ந்த 45 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
டிக்கோயா பிரதேசத்தின் டங்கல்ட் சமரவில், காபெக்ஸ், காசல்ரீ, ஒஸ்போன் ஆகிய தோட்டப்பகுதிகளில் மழையுடன் சுமார் 15 நிமிடங்கள் வீசிய மினிசூறாவளியினால் மேற்படி தோட்டப்பகுதிகளிலுள்ள கூரைத்தகரங்கள் பல காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன. மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதுடன் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால், பிரதேசத்தில் சில மணிநேரம் மின்சாரத் தடை ஏற்பட்டதோடு அட்டன் நோட்டன் பிரதான பாதையில் போக்குவரத்துகளும் தடைப்பட்டன.
இச் சம்பவத்தில் டங்கல்ட் தோட்டத்தில் 4 வீடுகளும் சமர்வில் தோட்டத்தில் 2 வீடுகளும் காபெக்ஸ் கொலனியில் 2 வீடுகளும் முழுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் 14 வீடுகள் சிறிய அளவிலான சேதத்துக்கு உள்ளாகியதாகவும் சேதவிபரங்கள் குறித்து கினிகத்தேனை பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் லெதண்டி பிரதேசத்துக்கான கிராம உத்தியோகஸ்தரான எஸ். டார்வின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment