தொழிலாளர்களுக்கு நன்மையளிப்பதாக கூறப்படும் கூட்டு ஒப்பந்தம் துரோகமானது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர் எனக் கூறுவது ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கு எதிரான துரோகச் செயலாகும் ம.ம.மு வலப்பனை பிரிவு பொறுப்பாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிடுகையில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்ட சக்தியைச் சரியாக பயன்படுத்தி அவர்களின் தொழில் உரிமை, பாதுகாப்பு, வாழ்க்கை செலவின் உயர்விற்கேற்ற சம்பள உயர்வு மற்றும் அவர்களின் வாழ்வியல் ரீதியான தேவைகளுக்கு போதிய உத்தரவாதம் என்பவற்றைப் பெற்றுக்கொடுக்க தவறிய கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் அதனை நியாயப்படுத்துவது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் செயலுக்கு ஒப்பாகும்.
இவ் ஒப்பந்தத்தால் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு வறுமையின் அகோரப் பிடியில் அகப்பட்டு "திணறுவதையும்' கம்பனி நிர்வாகங்களின் சர்வாதிகார செயல்பாடுகளினால் தொழிலாளர் உரிமை நசுக்கப்படுவதையும் நன்கு அறிந்துள்ள தலைமைகள் சில இவ்வொப்பந்தம் பல நன்மைகள் பெற்றுக்கொடுத்துள்ளன எனக் கூறுவது வேடிக்கையாகும். இது தொழிலாளர் மீது பலவந்தமாக புதிய ஒப்பந்தத்தை செய்ய முற்படும் செயலாகும்.
மீண்டும் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்யும் முன்பு கடந்தகால அனுபவங்கள், யதார்த்தபூர்வமான நடைமுறை சிக்கல்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தப் போகும் பல்வேறு விடயங்களையும் சட்ட வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள், பொருளியல் நிபுணர்கள் ஆகிய தரப்பினருடன் கலந்துரையாட வேண்டும்.
வாழ்வியல் ரீதியில் தொழிலாளர்கள் வறுமையிலிருந்து விடுபட்டு, தொழில் ரீதியிலும் உரிமைகளுக்கும் உத்தரவாதம் கிடைக்கும் வகையில் தொழிலாளர்கள் விமோசனம் பெற்று உரிமைகள், சலுகைகள், சுதந்திரம் போன்றவற்றை அனுபவிக்கும் வகையில் இவ் ஒப்பந்தம் செய்யப்பட சம்பந்தப்பட்ட தொழிற்சங்க தரப்புகள் முன்வருவது காலத்தின் கட்டாய தேவையாகும்.
சர்வதேச தொழிற்சங்கங்களின் மரபு ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் சர்வாதிகார முறையில் பலவந்தமாகவும் ஒரு நிர்ப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு எதிராக திணிக்கப்படும் கூட்டு ஒப்பந்தத்தை செய்து வருகிறது. அவ்வொப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர் என்று கூறுவது ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களுக்கு எதிரான துரோகச் செயலாகும்.
இக்கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் யாவும் பல்வேறு வகையில் தொழிலாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை பல்வேறு துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், 95 சதவீதம் தொழிலாளர்கள் வெளிப்படையாக தமது எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.
மேலும், கூட்டு ஒப்பந்தம் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பலவற்றை தோட்ட நிர்வாகங்கள் அமுல்படுத்திய சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கப் போராட்டம் மூலம் அவற்றை எதிர்த்து வந்துள்ளதையும் எவரும் மறுக்க முடியாது. இது கடந்தகால நிகழ்வுகளின் உண்மையாகும்.
எனவே, தொழிலாளர்களுக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் நன்மை பெறக்கூடிய கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதனை நிராகரித்து கூட்டு ஒப்பந்தம் செய்யப்படுமாயின் கூட்டு ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்கள் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
No comments:
Post a Comment