Sunday, July 5, 2015

துன்பப்படும் மக்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது

கடந்த 30 ஆண்டுகளாக எமது இரத்த உறவுகள் இந்த மண்ணிலே அதிக துன்பங்களோடு வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எமது இரத்தம் கூட சில நேரத்தில் அழுகிறது. இந்த மக்களுக்கு உதவி செய்வதற்கு நாம் எப்போதும் தயாராக உள்ளோம் என  யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் யாழ். நுண்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி தர்ஷனனின்  நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக் கல்வி நூல் வெளியீட்டு விழா நுண்கலைக்கழக இசைத்துறைக் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கூறுகையில், எனக்கு சிறுவயதில் இருந்தே  இலங்கைக்கு வர வேண்டும்  ஆசை இருந்தது. அந்தக் கனவு நிறைவேறிவிட்டது. இந்திய அரசாங்கம் அப்படியொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. இலங்கை வந்து கண்டியில் 3 ஆண்டுகள் துணைத்தூதுவராக கடமையாற்றினேன்.  இந்திய அரசாங்கம் என்னை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய பிறகு எனது ஒட்டுமொத்த கனவு நிறைவேறிவிட்டது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணத்து தமிழ் மொழியில்தான் உயிரும் சிறந்த மொழிநடை பிரயோகமும் உள்ளதென இந்தியாவில் பொதுவாக கூறுவார்கள். 

மலையகத்திலும் தமிழ்மொழி பேசுகிறார்கள் ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்தான் இலக்கியம் சார்ந்து மொழிநடை உள்ளது. இந்தியாவின் கலைகள் இலங்கையில் வளர்கின்றதென்றால் எங்கள் உடன்பிறப்புகள் அதை விரும்பி கற்கிறார்கள். இதை நான் பெருமையுடன் கூற விரும்புகிறேன்.  கலை, கலாசாரம் இங்கு நன்கு வளர்ந்து வருகிறது. இனியும் வளரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நூலை எழுதிய கலாநிதி ஸ்ரீ தர்சனனுக்கும் அவரது பாரியாருக்கும் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

இராமநாதன் நுண்கலைக்கழகத்துக்கு இன்று தான் நான் முதல்தடவையாக வருகின்றேன். இங்கு வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது, எவ்வளவு மாணவர்கள் கலைகள் தொடர்பான பாடங்களை விரும்பிக் கற்கிறார்கள் என்று. எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தகுதியான மாணவர்களுக்கு இந்தியா புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு எப்போதுமே தயாராக இருக்கிறது என்றார். 

Friday, June 26, 2015

தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கான தீர்வு கிட்டியுள்ளது – இ.தொ.கா

பொகவந்தலாவ தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட நோர்வூட் ருக்கூட்ஸ் தோட்டத் தொழிலாளர்கள்அண்மையில் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர்  காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினை தொடர்பில் தோட்டக் கம்பனியின் அதிகாரிகளுடன்

கலந்துரையாடியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து நோர்வூட் ருக்கூட்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட 18 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, ஓரிரு தினங்களில் இதற்கான தீர்வு வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் சீர்திருத்தத்;தில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

தேர்தல் சீர்திருத்தம் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் அதில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னயியின் செயலாளர் நாயகமும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளருமாகிய ஏ. லோரன்ஸ் 20வது திருத்தம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் 35 வருடங்களின் பின்னர் தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. மீண்டும் அவ்வாறு இடம்பெறுவதற்கு பல வருட காலம் எடுக்கலாம். தேர்தல் சீர்திருத்தம் கட்டாயம் தேவையான ஒன்றாகும். அதில் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றார். 

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான 20வது திருத்தம் நிறைவேற்றப்படலாம். ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க உட்பட அனைத்துக் கட்சிகளும் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சீர்திருத்தம் தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இத் திருத்தம் நாட்டுக்கும், மலையக மக்களுக்கும் அவசியமானதொன்றாகும். 
மலையக மக்களின் பிரஜாவுரிமை 1948ம் ஆண்டு பறிக்கப்பட்டு அவர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. அப்போது வாக்காளர் தொகை குறைவாக இருந்த காரணத்தினால் தேர்தல் திருத்தம் அவசியம் இல்லாமல் இருந்தது. இன்று மலையகத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகல் தேர்தல் திருத்தம் அவசியமாகிறது. 

இன்று விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் 20வது திருத்தம் வெறுமனே தேர்தல் திருத்தமாக பார்க்கப்படக்கூடாது. மலையக மக்களுக்கு தேர்தல் தொகுதி மூலமும், மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளின் மூலமும் உறுப்பினர்களை அதிகரித்துக்கொள்ள கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமேயாகும். இதனை மலையக மக்கள் புத்திசாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்தல் திருத்தம் தொடர்பாக இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், உட்பட அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகவும், கூட்டாகவும் முதன்முறையாக தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன. பெரும்பாலான விடயங்களில் ஒருமித்த கருத்தே காணப்படுகிறது. மலையக அமைப்புக்கள் தமது கட்சி கண்ணேட்டத்தில் கவனத்தில் கொள்ளாமல் அவற்றை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இலங்கையின் தேர்தல் சீர்திருத்தம் இந்த நாட்டில் உள்ள நான்கு பிரதான தேசிய இனங்களின் விகிதாசாரத்துக்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவத்தையும் தொகுதிகளையும் ஏற்படுத்திக் கொள்வதை தவிர சகலரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேறுவழியேதும் கிடையாது. இதில் சிங்கள மக்களுக்கு 74 வீதமும், வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு 11 வீதமாக காணப்பட்டாலும்  இணக்கம் காணப்பட்டுள்ள 9 வீதமும், முஸ்லிம்களுக்கு 8 வீதமும், மலையக மக்களுக்கு 7 வீதமும் கிடைக்கவுள்ளன. சிறு கட்சிகள் பல கொள்கை ரீதியாக தனித்தனியாக இயங்கி வருகின்றன. அவைகளும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் இத்திருத்தம் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க ஆகிய கட்சிகளின் நலன் சார்ந்ததாகவும் அமையாமல் அனைவரது அபிலாசைகளுக்கும் இடமளிப்பதாக அமைய வேண்டும் என்றார். 

மலையக மக்களின் இன விகிதாசாரத்துக்கேற்ப உத்தேச கலப்பு முறை தேர்தல் தொகுதிவாரியாகவும், மாவட்ட விகிதாசார அடிப்படையிலும், தேசிய விகிதாசார அடிப்படையிலும் 18 உறுப்பினர்களுக்குக் குறையாத பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் 10 பேர் தேர்தல் தொகுதி அடிப்படையிலும், பல் அங்கத்தவர் தொகுதி அடிப்படையிலும், 08 பேர் மாவட்ட விகிதாசார அடிப்படையிலும் தெரிவாக வேண்டும்..

தறபோதுள்ள தேர்தல் தொகுதிமுறையில் மறாற்றம் செய்யப்பட்டு கட்டாயம் 160 இற்கும் மேல் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக 125 ஆக அல்லது 145 ஆக குறைப்பதறன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடும்  தற்போதுள்ள 225 இலிருந்து 255ம் ஆக அதிகரித்தால் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது பேணிக்கொள்ளலாம். 

மலையக மக்களுக்கு முதலில் தொகுதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அடுத்ததாக பல் அங்கத்தவர் தொகுதி அடிப்படையிலும், மாவட்ட விகிதாசாரத்திலும் தேசிய விகிதாசாரத்திலும், இரட்டை வாக்கு முறை ஊடாகவும் மேலும் தேர்தல் விகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

தேர்தல் திருத்தம் இன்று நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், புதிய பாராளுமன்றம் உருவாகும்போது நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். இவை அனைத்துக்கும் கட்டாயம் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். எல்லை மீள் நிர்ணயம் செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். இந்த விடயத்தில் மலையகக் கட்சிகள் விழிப்பாக இருந்து தமது இன விகிதாசாரத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். என்றார்.

கிளங்கன் வைத்தியசாலையின் புதிய கட்டிடம் திறக்க முடிவு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டிடத்தை கட்டங்கட்டமாக திறப்பதற்கு  சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பழைய கட்டடத்தில் உள்ள வெளிநோயாளர் பிரிவையும் கிளினிக் பிரிவையும் ஆகஸ்ட் மாதம் முதல் கிழமையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கு மாற்றம் செய்து திறக்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.அன்வர் ஹம்தானி தெரிவித்தார். 

இந்தியா அரசாங்கத்தின் 500 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் 150 கட்டில்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். அன்வர் ஹம்தானி கருத்து தெரிவிக்கையில், 'தற்போது புதிய கட்டடத்தில் சகல வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கத்தினால் புதிய இயந்திரங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் கிழமையில் முதல் கட்டமாக வெளிநோயாளர் பிரிவும் கிளினிக் பிரிவும் திறந்து வைக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார். இக்கட்டடத்தை திறக்குமாறு கோரி பல தடவைகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.


Wednesday, June 24, 2015

20 பேர்சஸ் காணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு அமைப்பு மற்றும் தேசிய சமாதான பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக சமூகத்தினருக்கு 20 பேர்சஸ் காணியுடன் சொந்த வீடு வேண்டும் என கோரி நோர்வூட்டில் ஞாயிற்றுக்கிழமை (21); ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு 20 பேர்சஸ்; காணியும் காணி உரித்துடன் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். இந்த ஆரப்பாட்ட பேரணி நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கபட்டு நோர்வூட் நகரம் வரை சென்று; நோர்வூட் மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடி பல்கலைகழக மாணவர்களின் இடை விலகலுக்கு காரணம்

மலையத்திலிருந்து அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பவேண்டும் என்பதே எம்முடைய முயற்சியாக காணப்பட்டாலும் மாணவர்களுடைய பொருளாதார நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் இடைநடுவே வெளியேறும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். 'வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் மலையத்திலிருந்து வரும் மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர். அவர்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன'. 'பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி செல்லும் மாணவர்கள், அவர்களது குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக இடைவிலகி வேறு தொழில்களுக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலைமையை உடனடியாக மாற்றவேண்டும்'. எனவே, மலையகத்திலிருந்து யாழ். பல்கழைக்கழகத்துக்கு தெரிவாகும்  மாணவர்களுக்காக தங்குமிட விடுதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. மிக விரைவில் கிழக்கு பல்கழைக்கழகத்தில் கல்வி பயிலும் எமது மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

பெருந்தோட்ட இளைஞர்கள் இடைநிறுத்தம்- பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந் தோட்டயாக்க நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்களை இடைநிறுத்தி விட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள பணியில் ஈடுப்படுத்துவதை தான் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் அருள்சாமி தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களில் தற்போது பரவலாக நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டபோது அருள்சாமி, இதனை கூறினார். 'கடந்த 50, 60 வருடங்களாக பெருந்தோட்டங்களில் கடமையாற்றிய தோட்ட சேவையாளர்களை அதிரடியாக இடைநிறுத்திவிட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கமர்த்துவது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.

இது பெருந்தோட்டங்களில் கடமையாற்றும் சேவையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'. பெருந்தோட்டங்களில் கடமையாற்றும் 60 வயதை பூர்த்தி செய்த தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், ஜூன் மாதம் 15ஆம் திகதியுடன் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று, கண்டி மாவட்டத்திலுள்ள தோட்டங்களின் தலைவர்களால் கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது' என்றும் அருள்சாமி கூறினார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சரால் கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத்துக்கு, வெளிமாவட்டங்களிலுள்ள தோட்ட சேவையாளர்கள் கடமைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களானது, பெருந்தோட்டங்களில் வெளிக்கள உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றும் இளைஞர், யுவதிகளுக்கு ஆப்பு வைக்கும் விடயமாக காணப்படுகின்றது என்றும் அருள்சாமி குறிப்பிட்டார்.