Monday, December 28, 2009

முகவர் தபால் நிலையங்கள் உப தபாலகங்களாக மாற்ற நடவடிக்கை

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுமார் 126 முகவர் தபால் நிலையங்களை அரசாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றியமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ் செல்லச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தபால் ஊழியர்களாக 500 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்தபோது 400 பேர் மாத்திரமே கடமைகளைப் பொறுப்பேற்றனர். சில தோட்டங்கள் விடுபட்டதால், 100 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை.

இவர்களுக்குத் தேர்தலுக்குப் பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மலையகத்திலுள்ள அனைத்துத் தபாலகங்களையும் சகல வளங்களையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செல்லச்சாமி தெரிவித்தார்

Sunday, December 27, 2009

உழைப்புக்கு மரியாதை

வரலாற்றில் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளருக்கு சிலை

உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் உயர்ந்த இடங்களில் இருந்து தோன்றுவதில்லை. எப்போதும் சாதாரண மக்களிடத்திலிருந்தே ஆச்சரியப்படத்தக்க சிந்தனைகள் தோன்றும் என்பார்கள்.

ஊண்மைதான் பலரும் நினைத்துப் பார்க்காத, ஆனால் வரவேற்கத்தக்க சிந்தனை சாதாரண தோட்ட மக்கள் மனதில் உதித்திருக்கிறது.

நாட்டின் முதுகெலும்புகள், தேசிய பொருளாதாரத்தின் ஆணி வேர்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கர்கள் என தோட்டத் தொழிலாளர்கள் பற்றி பல வார்த்தை ஜாலங்களுண்டு.

வர்ணனைகள் மட்டும் வாழ்க்கையாகி விடுமா? தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான உழைப்புக்கு சமமான வருமானம் கிடைக்கிறதா? வாழ்க்கை வசதிகள் கிடைக்கிறதா? உழைப்புக்கேற்ற கௌரவம்தான் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரியது.

தோட்டத் தொழிலாளர்கள் ஏணிகளாக இருந்து பலரை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். பலரை ஆட்சி பீடம் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். பலருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். முதல் தடவையாக தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் உழைப்புக்கு கௌரவம் வழங்கும் வகையில் தொழிலாளருக்கு சிலை அமைக்கும் எண்ணம் கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மனதில் உதித்திருக்கிறது.

தேயிலை உற்பத்தித் தொழிலை மேற்கொள்கின்றவர்களை வருடாந்தம் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினம் கடந்த ஐந்து வருடங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த தேயிலை தினம் தோட்டத் தொழிலாளர்களை முழுமையாக உள்ளடக்கி உள்ளது எனக் கூறுவதற்கில்லை. பரவலாகத் தேயிலைத் தொழிலாளர்கள் இத் தினம் பற்றி போதிய விளக்கமின்றியே உள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் இவ்வருட தேயிலை தினம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை அறிந்த பத்தனை கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஓர் உன்னத உணர்வு ஏற்பட்டது. இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக பாடுபடுகின்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் முன்னோர்கள் உரிய முறையில் நினைவு கூரப்பட வேண்டும். இந்த மண்ணுக்கு உயிரையும் உடலையும் நீத்த எமது முன்னோர்களின் நினைவாக எமது தோட்டத்தில் தொழிலாளர் சிலைகளை ஏற்படுத்தினால் என்ன? என்பதுதான் அந்த எண்ணம்.

உடனடியாக இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடினர். கேலிவத்தைத் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் தொழிலாளர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இவ்விடயம் தொடர்பாக தோட்ட அதிகாரியான மஹிந்த ரணவீரவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாகத் தோட்ட அதிகாரி தோட்டக் கம்பனியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதன் பின்பு கம்பனியின் சிலைகள் ஏற்படுத்துவதற்கான அனுமதியும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச தேயிலைத் தினத்தன்று தோட்ட அதிகாரியின் தலைமையில் தோட்டத் தொழிற்சாலையின் முன்றலில் சிலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆண், பெண் தொழிலாளர் உருவங்களைக் கொண்ட சிலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இந்தச் சிலையைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் இந்த உயரிய பணிக்கும் ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் உதவுவதற்கு முன்வரலாமென்று கெலிவத்தைத் தோட்டத் தொழிலாளியான மாரிமுத்து தெரிவித்தார். தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இத்தகைய சிந்தனைகள் போற்றுதற்குரியதாகும்.

சோ. ஸ்ரீதரன்

மலையகப்பார்வை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு தனவந்தர்கள் உதவ வேண்டும்


இன்று மலையகப் பிரதேசங்களிலிருந்து க. பொ. த உயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகளிலிருந்து குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் வருடா வருடம் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது மகிழ்ச்சியானதும் வரவேற்கத்தக்கதுமான விடயமாகும்.

உயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம் ஆகிய துறைகளிலிருந்து ஓரளவு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையானோர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டாலும், சட்ட பீடத்திற்கும் முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவாகும் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படவில்லை. அதிகரிக்கின்ற எண்ணிக்கை உயர்தரப் பாடசாலைகளிலிருந்து ஒரு சில பாடசாலைகளைத் தவிர போதாதாக இருக்கின்றது. அதேவேளை விஞ்ஞானம், கணிதம் துறையிலும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இருந்து மருத்துவம், பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்படும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரையும் எமது இலக்கை அடைய முடியாமல் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் இன்று பல்கலைக்கழகங்களில் மேற்கூறிய துறைகளுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு எத்தனையோ புதிய புதிய கற்கை நெறிகள் சகல பாடப் பிரிவுகளுக்கும் இருக்கின்றது என்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.

க. பொ. த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் ஒரு சிலர் குடும்ப வறுமை காரணமாக பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாமல் இருக்கின்றனர். இதில் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், தோட்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான குடும்பங்களிலுள்ள பிள்ளைகளினால் தொடர்ந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கும், பல்கலைக்கழகங்களில் காணப்படும் செலவுகளை (உணவு, விடுதி, போக்குவரத்து, இதர செலவுகள், போன்றவற்றை சமாளிக்க முடியாமல் எத்தனையோ ஏழை மாணவர்கள் கஷ்டப்படுவதோடு, இதில் ஒரு சில மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு கிடைத்தும் கூட வசதி இல்லாததற்கு தொடர்ந்து படிக்காமல் இடை நடுவே பல்கலைக்கழக கல்வியை விட்டு விலகி விடுவதோடு, ஏதாவது ஒரு வேலைக்கு செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. சிலருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தும் கூட செல்லாமல் இருப்பதை சாதாரணமாகஎ அவதானிக்கலாம்.

ஒரு பக்கத்தில் பல்கலைக்கழக அனுமதியை மலையகம் அதிகரிக்க வேண்டும் என கோசம் போடுகின்றோம் அது வரவேற்கத்தக்க விடயமாகும். நிச்சயமாக மலையகத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றும் படிக்க வேண்டும். இதற்கு யாரும் தடைபோட மாட்டார்கள். ஆனால் இதற்கான வேலைத் திட்டங்கள் எந்தளவிற்கு வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

இப்பிரச்சினைகள் இருந்தபோதும் கூட வறுமையில் இருக்கும் மாணவர்கள் சித்தி பெற்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து படிக்கின்ற, படிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பும் கடமையும் ஆகும்.

இவ்வாறு சித்திப் பெற்ற மாணவர்களின் தகவல்களைத் திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதன் பின் இவர்களுடைய பல்கலைக்கழக செலவிற்காக ஒரு தொகைப் பணத்தை எமது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல்வாதிகள், தொழிற்சங்க வாதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பிரதேச சபை, மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், தனவந்தர்கள், செல்வந்தர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் பழைய மாணவர்கள், கல்வி மன்றங்கள், சமூக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், லயன்ஸ்கழகங்கள், ரோட்டரி கழகங்கள், பொதுமக்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரச தனியார் வங்கிகள், கோயில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், போன்ற பல்வேறு தனிநபர்களும், அமைப்புக் களும், நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் இச்சமூகத்தில் படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும். குறிப்பாக கூடுதலான புலமைப் பரிசில்களை இவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதோடு தனவந்தர்கள், இவ்வாறான மாணவர்களைத் தத்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஏனைய மாணவர்களுக்கு உதவிச் செய்வதன் மூலம் எமது மலையகச் சமூகத்தில் இருந்து இன்று இருப்பவர்களை விட மேலும் பல பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், இன்னும் பலதுறைப் சார்ந்தவர்களையும் உருவாக்க முடியும். இவ்வாறானவர்கள் எமது சமூகத்தில் உருவாகும்போதே ஒரு சமூகம் விழிப்படையும்.

ஒரு சமுகத்தின் விடியலுக்கு கல்விதான் அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே பெருந்தோட்டச் சமூகத்திலிருந்து சென்று நல்லத் தொழில், வசதி வாய்ப்புக்களோடு இருக்கின்ற நபர்கள், 10 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு பல்கலைக்கழக மாணவனை தத்தெடுத்து அவரை தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு உதவி செய்வதன் மூலம் எத்தனையோ வசதி குறைந்த மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்க முடியும்.

இன்று இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் மலையகச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏதோ ஒரு கற்கை நெறியில் படிக்கின்றார்கள்.

இவர்களில் சிலர் தொடர்ந்து படிப்பதற்கு வசதியில்லாத சந்தர்ப்பத்தில் இடை நடுவில் பல்கலைக்கழக கல்வியை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்றுவிடுகின்றார்கள். இதனால் குறிப்பிட்டக் காலத்தில் படித்து பட்டம் பெறுவதும் தடைப்படுவதோடு வாழ்க்கையில் எதிர்பார்த்த எத்தனையோ கனவுகளும் உடைந்து சுக்கு நூறாகிப் போகின்றது. எனவே இவ்வாறு பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து இருக்கும் வறிய மாணவர்களையும் இனம் கண்டு உதவி செய்ய முன்வர வேண்டும்.

இரா. சிவலிங்கம்... -

Sunday, December 20, 2009

மலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்!

எமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை எனும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.

இந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.

ஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

தெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.

தெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.

தரகர்களின் தவறான செயல்கள்

மலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று.. தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.

தனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.

ஒரு வீட்டில் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்?

மனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின. இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...?

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை. மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை? இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

கொத்தடிமைகள் அல்லர் மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.

குமுதினியைப் போன்று கறுகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.

எதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா? அல்லது நிஜமாகுமா?

-சுவாதி

நன்றி- வீரகேசரி

Monday, December 14, 2009

திகனயில் அதிர்ச்சி தரும் ஒரு கிராமம் - கசிப்பு காய்ச்சுவது இங்கே குடிசைத் கைத்தொழில்

காலை மாலை என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் வருவதும், போவதுமாக களைகட்டி காட்சியளிக்கும் திகன அலுத்வத்த 8ம் இலக்க கிராமம்

வெற்றுக் கேன்களுடனும், சில ஆயிரங்கள் பணத்துடனும் இக் கிராமத்துக்கு வரும் ஆண்கள்( சில சமயம் பெண்களும்) சுமக்க முடியாத பாரத்துடன் சில சமயம் கொஞ்சம் தள்ளாட்டத்துடன.; திருப்பிச் செல்வது வழக்கம். தினமும் பல ஆயிரக்கணக்கில் இங்கே வியாபாரம் நடக்கும்.

ஆம் இங்கே வியாபாரம் செய்யப்படுவது கசிப்பு. அதுவும் இந்தக் கிராமத்தில் சொந்த உற்பத்தி. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்க சோறு போடுவது இந்த வருமானத்தான். கசிப்பு காய்ச்சுவதும், விற்பதும்தான் நூற்றுக்கணக்கான ஆண்களுக்கும், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பிரதான தொழில்

இந்தத் தொழில் சட்ட விரோதம் என்பது எங்களுக்குத் தெரியும் இருந்தும் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லை. இத் தொழிலை நாங்கள் ஒன்றும் இலாபத்திற்காக செய்யவில்லை. இதில் இலாபமும் கிடைப்பதில்லை. தினம் தினம் வயிற்றுபாட்டுக்காக இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எமக்கிருக்கிறது என மனம் திறந்து சொல்கிறார்கள் இக் கிராம மக்கள்.

இவ்வாறான தொழல் செய்து பிழைக்கும் இவர்கள் பிழைக்க வக்கற்ற மக்கள் கூட்டம் அல்ல. ஒரு காலத்தில் வீடு, நிலம், தொழில் என வசதியாக வாழ்ந்தவர்கள்தான்.

இலங்கைக்கு (மின்சார) ஒளி கொடுப்பதற்காக உருவான விக்டோரியா நீர்த்தேக்கத் திட்டமே இவர்களின் வாழ்வு இருளாகக் காரணமாகியிருக்கிறது.

1982இல் விக்டோரியா நீர்த்தேக்கம் இவர்கள் வாழந்த காணிகளையும், வீடுகளையும் விழுங்கி விட திகன அலுத்வத்த பகுதியில் இவர்களுக்கென 20 பேர்ச்சஸ் காணியும் சில ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.

வுழங்கப்பட்ட காணியோ சுண்ணாம்புக் கற்பாறைகள் நிறைந்தது. வீடு கட்டவோ விவசாயம் செய்யவோ பொருத்தமற்றது. நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட காலத்தில் சிலருக்கு தொழில் கிடைத்தது. அதனால் இம்மக்களுக்கு மோசமான காணியின் நிலை பெரிதாகத் தெரியவில்லை.

அதன்பின் தொழில் வாய்ப்பு இல்லை. வாழ்க்கைக்கான வசதியில்லை. மலசலகூடம், குடிநீர்வசதி இல்லாத இம் மக்களின் வாழ்க்கை

அதேபோல இலங்iகின் பல பாகங்களுக்கும் மின்சார ஒளி கொடுக்கும் பொருட்டு இடம்பெயர்ந்த இந்த மக்களின் குடியிருப்புக்கள் இன்றுவரை மின் ஒளி காணாது இருண்டு கிடக்கின்றன.

இங்கிருந்து பெரும் பாடுபட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற சில விரல் விட் எண்ணக்கூடிய சில குடும்பங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளன. தினக்கூலி வேலைகளை நம்பி வாழ்க்கை நடத்தும் ஏனையவர்களின் வீடுகள் குடிசைகளாகவே காட்சி தருகின்றன.

பிழைக்க வேறு வழியில்லை. கசிப்புக் காய்ச்சும் தொழில் இங்கு தொடங்கப்பட்து. ந்ல வரவேற்பு இருந்தது. வியாபாரம் ஓகோ என நடக்கும். தினமும் ஆயிரக் கணக்கில் பணம் குவியும். ஆனால் பணம் கிடைத்ததென்ன எல்லாம் பொலிசாருக்ம் தண்டம் செலுத்துவதற்குமே சரியாக இருக்கும் என்கிறார் இப்பகுதி பெண் ஒருவர்.

வாரத்திற்கு ஒருமுறையாவது பொலிசார் இக் கிராமத்தை சுற்றி வளைத்து விடுவார்கள். கசிப்பு விற்ற பணம் தவிர வீட்டில் இருக்கும் தங்க நகைகளை விற்று கூட பொலிசாருக்கு தண்டப்பணம் கட்டிவிடுவோம் என்று கூறும் குடும்பஸ்த்தர் ஒருவர் தான் கட்டுக்கட்டாக வைத்திருக்கும் பணம் கட்டியதற்கான ரசீதுகளை காட்டுக்கின்றார். இதன் உண்மைத் தன்மையை அவர் வாழும் மண்ணால் கட்டப்பட்ட குடிசைவீடு நியாயப்படுத்துகிறது.

இக் கிராமத்தில் சுமார் 10 இடங்களில் கசிப்பு காய்ச்சப்பட்டது. இதில் நேரடியாக சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்தனர்.

இங்குள்ளவர்களில் அநேகமானோர் கல்வியறிவு பெறதாவர்களாகவே உள்ளனர். எங்கள் பிள்ளைகளையாவது பாடசாலைக்கு அனுப்பலாம் என்றால் இங்கே பாடசாலையில்லை. திகன, இரஜவெல பகுதி பாடசாலைகளில் எங்கள் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாடசாலை அனுமதியின் போது வீட்டுப்பத்திரம், மின்சார கட்டணப்பட்டியல் என்பன கேட்கப்படுகிறது. எம்மிடம் அவை எதுவும் இல்லை என தம் பிள்ளைகளின் கனவு ஈடேறாத வேதனையை பெற்றோர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.


வேண்டாம் இந்த அவலம்

கசிப்பு காய்ச்சி சுமார் ஒரு தசாப்தகாலமாக வாழ்க்கை நடத்திய இந்த மக்கள் இன்று இந்த தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் பொலிசாருக்கு பயந்து ஒளிந்து நாங்கள் அலுத்து விட்டோம். பணம் சம்பாதித்தாலும் அதைத் தண்டப்பணமாக செலுத்திவிட்டு வாழ்வதில் என்ன பயன்? ஆதனால் கசிப்பு காய்ச்சுவதை ஒட்டு மொத்தமாக நிறுத்தி விட்டோம் என்கின்றனர்.

ஆனால் இத்தனைக் காலம் இம் மக்களிடம் பணப்புழக்கம் இருந்தது. இப்போது இங்கே வறுமை தாண்டவமாடுகிறது.

எங்களுக்கு மாற்றுத் தொழில் ஏதுமில்லை. தொழில் தொடங்கவும் ஏதும் வசதியில்லை. எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. நாம் என்ன தொழில் செய்வது? எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது? ஏன இங்குள்ள குடுமபத் தலைவர்கள் மனங்கலங்கி நிற்கின்றனர்.

ஏமக்கு ஏதாவது தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கமோ அல்லது அமைச்சர்களோ, அரச சார்பற்ற நிறுவனங்கயோ முன்வர வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தவறு செய்யும் மக்களை தட்டிக் கேட்கவும், தண்டிக்கவும் எம் சட்டம் தன் பணியை செய்தது. இன்று தவறான தொழிலை கைவிட்டு நிற்கும் இம் மக்களுக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து கைதூக்கி விட வேண்டிய சமூகப் பணியை பொறுப்புடையவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஆர். நவராஜா

நன்றி- மலையக பார்வை

பாரிய மண்சரிவினால் மக்கள் இடம்பெயர்வு

பதுளை நமுனுகுல பிரதேசம் நல்லமலை கிராம சேவகர் பிரிவு, ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் ஏறட்ட பாரிய மண்சரிவு காரணமாக அப் பகுதியில் சுமார் 35 தோட்டக் குடியிருப்புக்களில் வாழ்ந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார தெரிவித்துள்ளார்

கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடியிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இம் மணிசரிவு சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்

Sunday, December 13, 2009

சர்வதேச தேயிலை தின மாநாடு டிசம்பர் 15 ஆம் திகதி


சர்வதேச தேயிலை தின மாநாடு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு பிரதான மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு 2005ஆம் ஆண்டு புது டில்லியில் நடைபெற்றது. அன்றையத் தினம் சர்வதேச தேயிலை தினப் பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தி செய்யும் எல்லா நாடுகளும் மேற்படி தினத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பரப்புரை செய்து வருகின்றன.

தொழிலாளர்களின் வேதன உயர்வு, வீட்டுரிமை, கல்வி, நிலவுரிமை, சுகாதாரம், கலாசாரம், பெண்கள் தலைமைத்துவம், பால்நிலை சமத்துவம் குறித்து பேசப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை அட்டனில் நடைபெறும் இம்மாநாட்டில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் ஐக்கிய நாட்டுச் சபையின் அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இணைந்து தயாரித்த பெருந்தோட்ட சமூக பத்தாண்டு அபிவிருத்தி திட்டத்தை பூரணமாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

சர்வதேச தேயிலை தின ஊர்வலமும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்தளை நகரிலும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதான மண்டபத்திலும் நடைபெறும் என்று பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் இணைப்பாளர் எஸ். முருகையா தெரிவித்தார்