உழைப்புக்கு மரியாதை
வரலாற்றில் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளருக்கு சிலை
உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் உயர்ந்த இடங்களில் இருந்து தோன்றுவதில்லை. எப்போதும் சாதாரண மக்களிடத்திலிருந்தே ஆச்சரியப்படத்தக்க சிந்தனைகள் தோன்றும் என்பார்கள்.
ஊண்மைதான் பலரும் நினைத்துப் பார்க்காத, ஆனால் வரவேற்கத்தக்க சிந்தனை சாதாரண தோட்ட மக்கள் மனதில் உதித்திருக்கிறது.
நாட்டின் முதுகெலும்புகள், தேசிய பொருளாதாரத்தின் ஆணி வேர்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கர்கள் என தோட்டத் தொழிலாளர்கள் பற்றி பல வார்த்தை ஜாலங்களுண்டு.
வர்ணனைகள் மட்டும் வாழ்க்கையாகி விடுமா? தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான உழைப்புக்கு சமமான வருமானம் கிடைக்கிறதா? வாழ்க்கை வசதிகள் கிடைக்கிறதா? உழைப்புக்கேற்ற கௌரவம்தான் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரியது.
தோட்டத் தொழிலாளர்கள் ஏணிகளாக இருந்து பலரை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். பலரை ஆட்சி பீடம் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். பலருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். முதல் தடவையாக தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் உழைப்புக்கு கௌரவம் வழங்கும் வகையில் தொழிலாளருக்கு சிலை அமைக்கும் எண்ணம் கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மனதில் உதித்திருக்கிறது.
தேயிலை உற்பத்தித் தொழிலை மேற்கொள்கின்றவர்களை வருடாந்தம் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினம் கடந்த ஐந்து வருடங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த தேயிலை தினம் தோட்டத் தொழிலாளர்களை முழுமையாக உள்ளடக்கி உள்ளது எனக் கூறுவதற்கில்லை. பரவலாகத் தேயிலைத் தொழிலாளர்கள் இத் தினம் பற்றி போதிய விளக்கமின்றியே உள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் இவ்வருட தேயிலை தினம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை அறிந்த பத்தனை கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஓர் உன்னத உணர்வு ஏற்பட்டது. இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக பாடுபடுகின்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் முன்னோர்கள் உரிய முறையில் நினைவு கூரப்பட வேண்டும். இந்த மண்ணுக்கு உயிரையும் உடலையும் நீத்த எமது முன்னோர்களின் நினைவாக எமது தோட்டத்தில் தொழிலாளர் சிலைகளை ஏற்படுத்தினால் என்ன? என்பதுதான் அந்த எண்ணம்.
உடனடியாக இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடினர். கேலிவத்தைத் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் தொழிலாளர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இவ்விடயம் தொடர்பாக தோட்ட அதிகாரியான மஹிந்த ரணவீரவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாகத் தோட்ட அதிகாரி தோட்டக் கம்பனியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதன் பின்பு கம்பனியின் சிலைகள் ஏற்படுத்துவதற்கான அனுமதியும் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச தேயிலைத் தினத்தன்று தோட்ட அதிகாரியின் தலைமையில் தோட்டத் தொழிற்சாலையின் முன்றலில் சிலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆண், பெண் தொழிலாளர் உருவங்களைக் கொண்ட சிலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இந்தச் சிலையைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் இந்த உயரிய பணிக்கும் ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் உதவுவதற்கு முன்வரலாமென்று கெலிவத்தைத் தோட்டத் தொழிலாளியான மாரிமுத்து தெரிவித்தார். தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இத்தகைய சிந்தனைகள் போற்றுதற்குரியதாகும்.
சோ. ஸ்ரீதரன்
மலையகப்பார்வை
No comments:
Post a Comment