Monday, December 14, 2009

திகனயில் அதிர்ச்சி தரும் ஒரு கிராமம் - கசிப்பு காய்ச்சுவது இங்கே குடிசைத் கைத்தொழில்

காலை மாலை என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் வருவதும், போவதுமாக களைகட்டி காட்சியளிக்கும் திகன அலுத்வத்த 8ம் இலக்க கிராமம்

வெற்றுக் கேன்களுடனும், சில ஆயிரங்கள் பணத்துடனும் இக் கிராமத்துக்கு வரும் ஆண்கள்( சில சமயம் பெண்களும்) சுமக்க முடியாத பாரத்துடன் சில சமயம் கொஞ்சம் தள்ளாட்டத்துடன.; திருப்பிச் செல்வது வழக்கம். தினமும் பல ஆயிரக்கணக்கில் இங்கே வியாபாரம் நடக்கும்.

ஆம் இங்கே வியாபாரம் செய்யப்படுவது கசிப்பு. அதுவும் இந்தக் கிராமத்தில் சொந்த உற்பத்தி. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்க சோறு போடுவது இந்த வருமானத்தான். கசிப்பு காய்ச்சுவதும், விற்பதும்தான் நூற்றுக்கணக்கான ஆண்களுக்கும், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பிரதான தொழில்

இந்தத் தொழில் சட்ட விரோதம் என்பது எங்களுக்குத் தெரியும் இருந்தும் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லை. இத் தொழிலை நாங்கள் ஒன்றும் இலாபத்திற்காக செய்யவில்லை. இதில் இலாபமும் கிடைப்பதில்லை. தினம் தினம் வயிற்றுபாட்டுக்காக இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எமக்கிருக்கிறது என மனம் திறந்து சொல்கிறார்கள் இக் கிராம மக்கள்.

இவ்வாறான தொழல் செய்து பிழைக்கும் இவர்கள் பிழைக்க வக்கற்ற மக்கள் கூட்டம் அல்ல. ஒரு காலத்தில் வீடு, நிலம், தொழில் என வசதியாக வாழ்ந்தவர்கள்தான்.

இலங்கைக்கு (மின்சார) ஒளி கொடுப்பதற்காக உருவான விக்டோரியா நீர்த்தேக்கத் திட்டமே இவர்களின் வாழ்வு இருளாகக் காரணமாகியிருக்கிறது.

1982இல் விக்டோரியா நீர்த்தேக்கம் இவர்கள் வாழந்த காணிகளையும், வீடுகளையும் விழுங்கி விட திகன அலுத்வத்த பகுதியில் இவர்களுக்கென 20 பேர்ச்சஸ் காணியும் சில ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.

வுழங்கப்பட்ட காணியோ சுண்ணாம்புக் கற்பாறைகள் நிறைந்தது. வீடு கட்டவோ விவசாயம் செய்யவோ பொருத்தமற்றது. நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட காலத்தில் சிலருக்கு தொழில் கிடைத்தது. அதனால் இம்மக்களுக்கு மோசமான காணியின் நிலை பெரிதாகத் தெரியவில்லை.

அதன்பின் தொழில் வாய்ப்பு இல்லை. வாழ்க்கைக்கான வசதியில்லை. மலசலகூடம், குடிநீர்வசதி இல்லாத இம் மக்களின் வாழ்க்கை

அதேபோல இலங்iகின் பல பாகங்களுக்கும் மின்சார ஒளி கொடுக்கும் பொருட்டு இடம்பெயர்ந்த இந்த மக்களின் குடியிருப்புக்கள் இன்றுவரை மின் ஒளி காணாது இருண்டு கிடக்கின்றன.

இங்கிருந்து பெரும் பாடுபட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற சில விரல் விட் எண்ணக்கூடிய சில குடும்பங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளன. தினக்கூலி வேலைகளை நம்பி வாழ்க்கை நடத்தும் ஏனையவர்களின் வீடுகள் குடிசைகளாகவே காட்சி தருகின்றன.

பிழைக்க வேறு வழியில்லை. கசிப்புக் காய்ச்சும் தொழில் இங்கு தொடங்கப்பட்து. ந்ல வரவேற்பு இருந்தது. வியாபாரம் ஓகோ என நடக்கும். தினமும் ஆயிரக் கணக்கில் பணம் குவியும். ஆனால் பணம் கிடைத்ததென்ன எல்லாம் பொலிசாருக்ம் தண்டம் செலுத்துவதற்குமே சரியாக இருக்கும் என்கிறார் இப்பகுதி பெண் ஒருவர்.

வாரத்திற்கு ஒருமுறையாவது பொலிசார் இக் கிராமத்தை சுற்றி வளைத்து விடுவார்கள். கசிப்பு விற்ற பணம் தவிர வீட்டில் இருக்கும் தங்க நகைகளை விற்று கூட பொலிசாருக்கு தண்டப்பணம் கட்டிவிடுவோம் என்று கூறும் குடும்பஸ்த்தர் ஒருவர் தான் கட்டுக்கட்டாக வைத்திருக்கும் பணம் கட்டியதற்கான ரசீதுகளை காட்டுக்கின்றார். இதன் உண்மைத் தன்மையை அவர் வாழும் மண்ணால் கட்டப்பட்ட குடிசைவீடு நியாயப்படுத்துகிறது.

இக் கிராமத்தில் சுமார் 10 இடங்களில் கசிப்பு காய்ச்சப்பட்டது. இதில் நேரடியாக சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்தனர்.

இங்குள்ளவர்களில் அநேகமானோர் கல்வியறிவு பெறதாவர்களாகவே உள்ளனர். எங்கள் பிள்ளைகளையாவது பாடசாலைக்கு அனுப்பலாம் என்றால் இங்கே பாடசாலையில்லை. திகன, இரஜவெல பகுதி பாடசாலைகளில் எங்கள் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாடசாலை அனுமதியின் போது வீட்டுப்பத்திரம், மின்சார கட்டணப்பட்டியல் என்பன கேட்கப்படுகிறது. எம்மிடம் அவை எதுவும் இல்லை என தம் பிள்ளைகளின் கனவு ஈடேறாத வேதனையை பெற்றோர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.


வேண்டாம் இந்த அவலம்

கசிப்பு காய்ச்சி சுமார் ஒரு தசாப்தகாலமாக வாழ்க்கை நடத்திய இந்த மக்கள் இன்று இந்த தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் பொலிசாருக்கு பயந்து ஒளிந்து நாங்கள் அலுத்து விட்டோம். பணம் சம்பாதித்தாலும் அதைத் தண்டப்பணமாக செலுத்திவிட்டு வாழ்வதில் என்ன பயன்? ஆதனால் கசிப்பு காய்ச்சுவதை ஒட்டு மொத்தமாக நிறுத்தி விட்டோம் என்கின்றனர்.

ஆனால் இத்தனைக் காலம் இம் மக்களிடம் பணப்புழக்கம் இருந்தது. இப்போது இங்கே வறுமை தாண்டவமாடுகிறது.

எங்களுக்கு மாற்றுத் தொழில் ஏதுமில்லை. தொழில் தொடங்கவும் ஏதும் வசதியில்லை. எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. நாம் என்ன தொழில் செய்வது? எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது? ஏன இங்குள்ள குடுமபத் தலைவர்கள் மனங்கலங்கி நிற்கின்றனர்.

ஏமக்கு ஏதாவது தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கமோ அல்லது அமைச்சர்களோ, அரச சார்பற்ற நிறுவனங்கயோ முன்வர வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தவறு செய்யும் மக்களை தட்டிக் கேட்கவும், தண்டிக்கவும் எம் சட்டம் தன் பணியை செய்தது. இன்று தவறான தொழிலை கைவிட்டு நிற்கும் இம் மக்களுக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து கைதூக்கி விட வேண்டிய சமூகப் பணியை பொறுப்புடையவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஆர். நவராஜா

நன்றி- மலையக பார்வை

No comments: