Monday, April 6, 2009

மலையகத் தமிழரை அழிக்கும் முயற்சியில் குடும்பக் கட்டுப்பாடு

மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்து விடயங்களும் மாறிக்கொண்டிருக்கும் சமகால உலகில் மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் மட்டும், நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் மாறாமல் காணப்படுகின்றது. ஏனைய சமூகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து கல்வி, சுகாதாரவசதிகள், வீட்டுவசதி, பொருளாதாரம், சொத்துரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பல அம்சங்களில் இவர்கள் பின்தங்கியே வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றனர். இன்று உலகின் சனத்தொகையானது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கின்ற வேளையில், சனத்தொகை வளர்ச்சியில் கூட இவர்கள் பின்தங்கியே காணப்படுகின்றனர். ஒரு சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சி குறைவடைந்து செல்கின்றமைக்கு அச்சமூகத்தின் அதிகரித்து வரும் கல்விவளர்ச்சி ஒரு காரணமாய் அமைகின்றது. ஆனால், மலையகத்தின் சனத்தொகை வளர்ச்சி குறைவடைந்து செல்கின்றமைக்கு அவர்கள் கல்வி ரீதியாக வளர்ச்சியடையாமையே காரணமாகும். வருடாந்த புள்ளிவிபர அறிக்கை (Statistical Annual Report-2000), பெருந்தோட்டத்துறை சனத்தொகை வளர்ச்சியானது 5.6 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைவடைந்திருப்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்குப் பிரதானமாக மலையகத்தில் காணப்படும் கட்டாயப்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு (Family Planning) முறையே காரணமாகும்.

அதீத சனத்தொகை வளர்ச்சியானது ஒரு நாட்டிற்குப் பிரச்சினையாக அமையும்போது, அந்நாட்டில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அமுலுக்கு வருவதை நடைமுறையில் சில நாட்டுக்கொள்கைகள், சட்டங்கள் என்பன சித்திரிக்கின்றன. உதாரணமாக இந்தியாவில் "நாம் இருவர் நமக்கிருவர்' என்ற கொள்கை மக்கள் மத்தியில் பின்பற்றப்படுவதும், சீனாவில் ஒரு குழந்தை மாத்திரம் பெற்றுக்கொண்டால் அதற்கான சகல செலவினங்களையும் அரசு பொறுப்பேற்பதன் மூலம் அவர்களைக் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ள ஊக்குவிப்பதனையும் காணலாம். இங்கு குறிப்பிடக் கூடிய அம்சம் யாதென்றால், இக்கொள்கைகள், சட்டங்கள் என்பன ஒரு இனக்குழுவை மாத்திரம் மையப்படுத்தாமல், எந்தவொரு இனக்குழுவிற்கும் பாதகத்தை ஏற்படுத்தாமல் இருக்கின்றது. ஆனால், இலங்கையில் மலையக மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் விருப்பத்திற்கு அப்பால் குடும்பக் கட்டுப்பாட்டு முறையைத் திணிப்பது அவர்களுக்குக் காட்டும் பாரபட்சமாகாதா?
2008 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது 0.943மூ என ?The World Factbook குறிப்பிடுகின்றது. இவ்வளர்ச்சி வீதமானது ஏனைய ஆசிய நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்ததாகும். அத்தோடு, இலங்கையின் இன முரண்பாட்டினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதனாலும், பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமையினாலும் நாட்டின் சனத்தொகையின் அளவு குறைந்துள்ளதை பல்வேறு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்நிலையில் இலங்கையின் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அவசியமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அம்முறை மலையக சமூகத்திற்கு மட்டும் கட்டாயப்படுத்தப்படுவதை நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. இங்கு இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக இருக்கும் மக்களின் உயிர்கள் அழிக்கப்படுகின்றமையை அவதானிக்க வேண்டும்.

கூலிப்படைகளாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட இம்மக்களைத் தொடர்ந்தும் அந்நிலையிலேயே வைத்திருப்பதனை பெரும்பான்மை சமூகம் விரும்புகின்றது. இவர்கள், குறிப்பாக கல்வி ரீதியாக வளர்ச்சியடைவதனை விரும்பாத பெரும்பான்மை அரசியற் குழாம், ஒரு நிர்ப்பந்தத்தின் பேரிலேயே இவர்களுக்கான கல்வி வசதிகளை செய்து கொடுக்கின்றது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுவதைப் போல, மலையகத்தில் இரண்டாம் நிலைக்கல்வி (க.பொ.த. சாஃத) வரை கற்றவர்களே அதிகம். உயர்கல்வி பெறுபவர்களின் தொகை சமீபகாலமாக அதிகரித்த போதிலும், ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும்போது இத்தொகை மிகக் குறைவாகும். பெரும்பான்மையினர் இலங்கையின் பொருளாதாரத்திற்குத் தேவையான தொழிற்படையை மாத்திரமே மலையகத்திலிருந்து எதிர்பார்க்கின்றனர். தேயிலைத் தோட்டத்திலும் , தேயிலைத் தொழிற்சாலைகளிலும் தினக்கூலி (Daily Wage) பெறுபவர்களாக விளங்க வேண்டும் என்பது அவர்களின் அவா. சனத்தொகை ரீதியாக வளர்ச்சியடைந்துவிட்டால் அம்மக்களுக்கான சகல வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம் நேரிடும். அவ்வாறு வசதிகளைப் பெறும்போது ஒரு சமூக அசைவியக்கத்தின் (Social Mobility) மூலம் அவர்கள் வேறு தொழில்களை நோக்கி இடம்பெயர்ந்து விடுவர். எனவே தேயிலைத் தோட்டங்களில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்கான ஆளணி இல்லாமல் போய்விடும்.

இந்த அம்சத்தின் காரணமாகவே இன்று மலையகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அத்தியாவசியமானதொன்றாகத் திணிக்கப்படுகின்றது. இவர்களிடம், “உனக்கு வருமானம் இல்லை” எவ்வாறு இத்தனை குழந்தைகளை வளர்க்கப்போகின்றாய், அநியாயமாக நோயிலும், பட்டினியிலும் சாகப்போகின்றனர்” என்று தோட்ட வைத்தியர் ( Estate Medical Officer), தாதி குறிப்பாக தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் ( Estate Welfare Officer) போன்றோர் “உளவள ஆலோசனை” (Counseling) மூலம் இவ் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால சந்ததியினரை இல்லாமல் செய்கின்றனர். “கொடியின் காய் கொடிக்குப் பாரமில்லை” என்பதுபோல தன் குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இல்லாமல் செய்து, நிறைய குழந்தைகள் பெறுவது கேவலம் என்ற நிலைக்கு அவர்களை மாற்றி விடுகின்றனர். அதேவேளை, கிராமப்புற சிங்கள மக்களும், முஸ்லிம் இனத்தவரும் மூன்றிற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதனையும் அல்லது தங்களுக்கு வேண்டியளவு குழந்தைகளைப் பெறுவதையும் நடைமுறையில் காணலாம். அவர்களுக்கென எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், மலையக மக்களின் குழந்தைப் பேறானது பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது. இதற்காக இவர்கள் ஒரு “டசின்” (12) அல்லது இரண்டு “டசின்” (24) குழந்தைகள் பெறவேண்டும் என்பது கருத்தல்ல. அதே சமயம் நான்கைந்து குழந்தைகள் பெறுவது சமூகத்திற்கு தீங்குமல்ல. இம்மக்களால் இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறவும், வளர்க்கவும் சக்தியிருக்கும்போது, அதைத் தடுப்பது ஒரு இன பாரபட்சமான செயல் என்றே கூற வேண்டும்.
இன்று தோட்டப்புறங்களில் இளைஞர், யுவதிகளுக்காக நடைபெற்றுவரும் பாலியல் உறவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மலையக சனத்தொகையை கட்டுப்படுத்துவதனையே நோக்காகக் கொண்டுள்ளன. இது நேரடியாக கூறப்படாமல், “எயிட்ஸ்” (HIV) வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பான உடலுறவு முறையைப் பற்றியே என்று வெளியில் கூறினாலும், மறைமுகமாகக் குடும்பக் கட்டுப்பாட்டையே சுட்டி நிற்கின்றது. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் யாதென்றால்,”எயிட்ஸ்” நோயானது பெருந்தோட்டப்புறப் பகுதிகளில் பெருவாரியாக இனங்காணப்படாமையும், அந்நோய் பெரும்பாலும் நகரத்திலேயே பரவிக்கொண்டிருக்கும் வேளையில் நகர்ப்புறங்களிலேயே விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்தரங்குகள் நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது. மாறாக பெருந்தோட்டங்களில் இவை நடத்தப்படுவதற்கான நியாயப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மலையகத்தைப் பொறுத்தவரை தற்போது குடிநீர், போஷாக்கு உணவு, சுத்தமான சூழல், பாடசாலை இடைவிலகல் போன்ற எத்தனையோ சமூகப்பிரச்சினைகள் இருக்குமிடத்து, அவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாமல் தனியே பாலியல் உறவில் மாத்திரமே கவனம் செலுத்துவதற்கான தேவை என்ன?

மலையக கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டிற்கு பிரசவத் தாய்மாரின் போஷாக்கின்மை பிரதான காரணங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால், இதனைத் தவிர்ப்பதற்கு போஷாக்கு உணவுத்திட்டங்கள், மக்களுக்கான சம்பள உயர்வு, குழந்தைப் பிறப்பு இடைவெளிக்காலத்தை கூட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குதல் என்பவற்றை அரசு மேற்கொள்ளலாம். அதனைவிடுத்து தனியே நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாடு (LRT) முறையின் மூலமே அப்பிரச்சினையை நிவர்த்தி செய்யலாம் என்பது தவறான கருத்தாகும். இந்நிலைமை தொடருமாயின், எதிர்காலத்தில் இலங்கை வரலாற்றின் ஏடுகளைத் திருப்பிப் பார்க்குமிடத்து மலையகத் தமிழர் என்ற இனம் இல்லாமல் இருக்கும்.

எனவே மரத்தைப் பற்றி நிற்கும் கொடிபோல் அல்லாமல், ஒரு மரமாக தனித்து நிற்பதற்கு மலையக சமூகத்தின் சனத்தொகையானது வளர்ச்சியடைய வேண்டும். பேரினவாதத்தின் இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு மலையகத்தில் கல்வி கற்ற சமூகம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு, அம்மக்களை பலவீனமானவர்களாகக் காட்டும் வறுமையை ஒழிப்பதற்கும், அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையவும் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுதல் அவசியமாகும். இவர்கள் பலவீனமானவர்கள் அல்ல என்று பேரினவாதிகள் நினைப்பதற்கு இம்மக்கள் விரைவாக பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

-எல். கமலேஸ்வரி-
நன்றி- தினக்குரல்

Sunday, March 29, 2009

மக்களை ஓரணியில் திரட்டுவது தான் நோக்கம் - முத்தப்பன் செட்டியார்

பி.ரவிவர்மன்

இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரே இலட்சிய நோக்குடனேயே இலங்கை- இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று முன்னணியின் தலைவரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான முத்தப்பன் செட்டியார் தெரிவித்தார். இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி என்ற புதியதோர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதன் அவசியம் என்னவென்று ஞாயிறு தினக்குரலுக்கு முத்தப்பன் செட்டியார் வழங்கிய விசேட செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள போது.

இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் என்ன?

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள்,தெலுங்கர்கள், கன்னடர்கள், மேமன் சமூகத்தினர், குஜராத்திகள் உள்ளடங்கிய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து புதியதோர் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி எமது மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும்.
இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் இந்திய வம்சாவளி மக்கள் அடிப்படை அரசியல் வசதிகளின்றி பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். அதனை விட பாதுகாப்பு “கெடுபிடி” கைது, காணாமல் போதல் போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பதே எமது பிரதான நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்கான முதல்படியாகவே எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி சுயேச்சைக் குழு-5 இல் கண்ணாடி சின்னத்தில் களமிறங்கியுள்ளது.

பேரினவாத கட்சிகளுடன் கடந்த காலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களால் எமது சமூகத்திற்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. எனவே எமது சமூகத்தின் தனித்துவத்தை எதிர்காலத்தில் பேணிப் பாதுகாப்பதற்காக இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியை பலப்படுத்த முன்வர வேண்டும்.

பல்வேறு அரசியல் கட்சிகள், பெரும்பாலான தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில் உங்கள் புதிய அரசியல் செயற்பாட்டின் நோக்கமென்ன?

ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எமது மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். எமக்கான அரசியல் தளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம் பாராளுமன்றத்தில் குரலெழுப்புவதும் அறிக்கைகள் விடுவதாலும் எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. யதார்த்த பூர்வமாக சிந்தித்து எமது சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்பவர்கள் அதனால் எமது மக்களுக்கு கிடைத்த நன்மைகள் எதுவென்பதை இதுவரை சொல்ல முடியாதவர்களாகவேயுள்ளனர்.

தேர்தல் காலத்திலேயே உங்கள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றார்களே அது தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்?

தேர்தல் காலத்தில் மாத்திரம் புதிதாக தோற்றுகின்றவர்கள் என்ற கருத்தை சிலர் தமது அரசியல் சுயலாபங்களுக்காக முன்வைக்கலாம். அது உண்மையில்லை. எமது முன்னணியில் புத்திஜீவிகள்,எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் சாதாரண தரத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உள்ளனர். எமது இலட்சியம், சிந்தனை, நோக்கம் என்பன இந்திய வம்சாவளியை ஓரணியில் திரட்டி பேரம் பேசும் அரசியல் சக்தியொன்றை உருவாக்குவதேயாகும்.

இலங்கை இந்தி வம்சாவளி மக்கள் முன்னணியின் எதிர்கால அரசியல் செயற்திட்டங்கள் எவ்வாறாக அமையப் போகின்றது?

இலங்கை இந்திய காங்கிரஸ் 1939 ஜூலை 25 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக வீ.ஆர்.எம்.ஏ.லெட்சுமணன் செட்டியார் மற்றும் இணைச் செயலாளர்களாக ஏ.அஸீஸ், எச்.எம் தேசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்திய தேசபிதா மகாத்மாகாந்தி, பிரதமர் நேரு ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே அன்று இந்தியவம்சாவளி மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்கள் நலன் கருதியும் அவர்களை ஓரணியில் திரட்டவும் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு காலப்போக்கில் தொழிற்சங்கங்களாக மாற்றமடைந்து பிளவுபட்டு காலப்போக்கில் பல பிரிவுகளாக சிதறுண்டது. இவ்வாறு பிளவுண்டு சிதறுபட்ட அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் தமது அரசியல் நலன்கருதியே செயற்பட்டனரே தவிர இந்திய வம்சாவளி மக்கள் நலன்கருதி ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் செயற்படவில்லை. இவ்வாறு வளர்ச்சி பெற்ற தலைவர்கள் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து தமது சுயலாப அரசியலையே முதன்மைப்படுத்தி இந்த நிலையிலே புதியதோர் அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்க இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை கட்சிகளின் தயவில் அரசியல் நடத்துபவர்கள் அவற்றின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவேயுள்ளனர்.இந்த நிலையை மாற்றியமைக்கவே நாம் புதியதோர் அரசியல் களத்தை தோற்றுவித்துள்ளோம்.

Saturday, March 28, 2009

டன்சினன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்

மத்திய மாகாணம் பூண்டுலோயா மத்திய பிரிவு தோட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த விடயம் குறித்து தோட்டத் தொழிற்துறை அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, சூழலியல் அமைப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேவேளை பூண்டுலோயா பகுதியிலேயே மேல் கொத்தமலைத் திட்டத்தின் நிலக்கீழ்ச் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மதுவுக்கு எதிராக மகளிர் அமைப்பு

மலையகத்தில் புதியதொரு அரசியல் மற்றும் தொழிற்சங்க கலாச்சாரமொன்றினை ஏற்படுத்தும் வகையில் மதுவுக்கு எதிரான மகளிர் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களிலும் தொழிற்கங்களுக்கு அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ளும் காலங்களிலும் சில அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களால் தாராளமாக வழங்கப்படும் மதுபானம் தோட்டத் தொழிலாளர்களின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. அத்துடன் மலையக பகுதிகளில் அதிகரித்து வருகின்ற மதுபாவனை இளைஞர்கள் உடல் ரீதியாக பாதிப்படைந்து வருகின்றனர். குடும்பத் தலைவர்களின் மது பாவனையால் அக் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
விவசாயத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து இடைநிறுத்தம்

பொகவந்தலாவை கெம்பியன் தோட்ட 57ம் பிரிவிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், அவர்களுடைய உறவினர்களும் தோட்டங்களில் வேலை செய்வதிலிருந்து தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தி வைத்துள்ளனர் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தமது மேலதிக வருமானத்துக்காக தோட்டங்களிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு தொடர்பாக மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட மகஜரொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

பதுளையில் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போது தெரிவித்த கிருஷ்ணசாமி அவர்கள் பதுளை மாவட்டத்தில் 65 தோட்டங்களும், 525 பிரிவுகளும் இருக்கின்ற போதிலும் 40 தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன. ஏனைய தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் கையொப்பம் பெறப்பட்ட மகஜர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கூட்டொப்பந்தத்தில் மாதத்திற்கு 25 நாள் வேலையும், வருடத்திற்கு 300 நாள் வேலையும் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கூட்டொப்பந்தம் செய்தவர்களே வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள் வேலை வழங்கப்படும்பொழுது தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை கேட்பது உகந்த தருணம் இல்லை என்கிறார்கள். வரட்சி நிவாரணம் விவசாயிகள், சிறுதோட்ட சொந்தக்காரர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்து வருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்றார்.

Friday, March 27, 2009

ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே சமூகம் முன்னேற்றமடையும்

ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே மலையக சமூகத்தை முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் எமது மக்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என பதுளை, ஆலி-எல பகுதி பெருந்தோட்டங்களின் தோட்டக்கமிட்டி முக்கியஸ்தர்கள் மத்தியில் பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அதன் பிரகாரம் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

ஊவா மாகாணசபை கே. விஸ்வநாதன் குறிப்பிடுகையில் தேயிலை தோட்டங்களில் 10 வீதமான பங்குகள் தொழிலாளர்களிடம், 30 வீதமான பங்குகள் தோட்டங்களை பொறுப்பேற்ற நிறுவனங்களிடமும், 40 வீதமான பங்குகள் அரசிடமும் இருந்து வருகிறது.

அரசினால் தோட்டங்களை நடத்த முடியாது நட்டத்தில் இயங்கியதால் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. தோட்ட நிறுவனங்கள் நடத்த முடியாத பட்சத்தில் அடுத்த பங்குதாரர்களான தொழிலாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
கம்பனிகள் பொறுப்பேற்றது முதல் தோட்டங்களின் வளங்கள் அனைத்துமே சுரண்டப்பட்டு விட்டன. அத்துடன் ஏக்கர் ஒன்றிற்கு 3500 தேயிலைச் செடிகள் இருக்க வேண்டிய இடத்தில் 1500- 2000 தேயிலைச் செடிகளே உள்ளன என்றார்
.