Monday, April 6, 2009

மலையகத் தமிழரை அழிக்கும் முயற்சியில் குடும்பக் கட்டுப்பாடு

மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்து விடயங்களும் மாறிக்கொண்டிருக்கும் சமகால உலகில் மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் மட்டும், நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் மாறாமல் காணப்படுகின்றது. ஏனைய சமூகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து கல்வி, சுகாதாரவசதிகள், வீட்டுவசதி, பொருளாதாரம், சொத்துரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பல அம்சங்களில் இவர்கள் பின்தங்கியே வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றனர். இன்று உலகின் சனத்தொகையானது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கின்ற வேளையில், சனத்தொகை வளர்ச்சியில் கூட இவர்கள் பின்தங்கியே காணப்படுகின்றனர். ஒரு சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சி குறைவடைந்து செல்கின்றமைக்கு அச்சமூகத்தின் அதிகரித்து வரும் கல்விவளர்ச்சி ஒரு காரணமாய் அமைகின்றது. ஆனால், மலையகத்தின் சனத்தொகை வளர்ச்சி குறைவடைந்து செல்கின்றமைக்கு அவர்கள் கல்வி ரீதியாக வளர்ச்சியடையாமையே காரணமாகும். வருடாந்த புள்ளிவிபர அறிக்கை (Statistical Annual Report-2000), பெருந்தோட்டத்துறை சனத்தொகை வளர்ச்சியானது 5.6 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைவடைந்திருப்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்குப் பிரதானமாக மலையகத்தில் காணப்படும் கட்டாயப்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு (Family Planning) முறையே காரணமாகும்.

அதீத சனத்தொகை வளர்ச்சியானது ஒரு நாட்டிற்குப் பிரச்சினையாக அமையும்போது, அந்நாட்டில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அமுலுக்கு வருவதை நடைமுறையில் சில நாட்டுக்கொள்கைகள், சட்டங்கள் என்பன சித்திரிக்கின்றன. உதாரணமாக இந்தியாவில் "நாம் இருவர் நமக்கிருவர்' என்ற கொள்கை மக்கள் மத்தியில் பின்பற்றப்படுவதும், சீனாவில் ஒரு குழந்தை மாத்திரம் பெற்றுக்கொண்டால் அதற்கான சகல செலவினங்களையும் அரசு பொறுப்பேற்பதன் மூலம் அவர்களைக் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ள ஊக்குவிப்பதனையும் காணலாம். இங்கு குறிப்பிடக் கூடிய அம்சம் யாதென்றால், இக்கொள்கைகள், சட்டங்கள் என்பன ஒரு இனக்குழுவை மாத்திரம் மையப்படுத்தாமல், எந்தவொரு இனக்குழுவிற்கும் பாதகத்தை ஏற்படுத்தாமல் இருக்கின்றது. ஆனால், இலங்கையில் மலையக மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் விருப்பத்திற்கு அப்பால் குடும்பக் கட்டுப்பாட்டு முறையைத் திணிப்பது அவர்களுக்குக் காட்டும் பாரபட்சமாகாதா?
2008 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது 0.943மூ என ?The World Factbook குறிப்பிடுகின்றது. இவ்வளர்ச்சி வீதமானது ஏனைய ஆசிய நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்ததாகும். அத்தோடு, இலங்கையின் இன முரண்பாட்டினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதனாலும், பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமையினாலும் நாட்டின் சனத்தொகையின் அளவு குறைந்துள்ளதை பல்வேறு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்நிலையில் இலங்கையின் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அவசியமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அம்முறை மலையக சமூகத்திற்கு மட்டும் கட்டாயப்படுத்தப்படுவதை நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. இங்கு இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக இருக்கும் மக்களின் உயிர்கள் அழிக்கப்படுகின்றமையை அவதானிக்க வேண்டும்.

கூலிப்படைகளாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட இம்மக்களைத் தொடர்ந்தும் அந்நிலையிலேயே வைத்திருப்பதனை பெரும்பான்மை சமூகம் விரும்புகின்றது. இவர்கள், குறிப்பாக கல்வி ரீதியாக வளர்ச்சியடைவதனை விரும்பாத பெரும்பான்மை அரசியற் குழாம், ஒரு நிர்ப்பந்தத்தின் பேரிலேயே இவர்களுக்கான கல்வி வசதிகளை செய்து கொடுக்கின்றது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுவதைப் போல, மலையகத்தில் இரண்டாம் நிலைக்கல்வி (க.பொ.த. சாஃத) வரை கற்றவர்களே அதிகம். உயர்கல்வி பெறுபவர்களின் தொகை சமீபகாலமாக அதிகரித்த போதிலும், ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும்போது இத்தொகை மிகக் குறைவாகும். பெரும்பான்மையினர் இலங்கையின் பொருளாதாரத்திற்குத் தேவையான தொழிற்படையை மாத்திரமே மலையகத்திலிருந்து எதிர்பார்க்கின்றனர். தேயிலைத் தோட்டத்திலும் , தேயிலைத் தொழிற்சாலைகளிலும் தினக்கூலி (Daily Wage) பெறுபவர்களாக விளங்க வேண்டும் என்பது அவர்களின் அவா. சனத்தொகை ரீதியாக வளர்ச்சியடைந்துவிட்டால் அம்மக்களுக்கான சகல வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம் நேரிடும். அவ்வாறு வசதிகளைப் பெறும்போது ஒரு சமூக அசைவியக்கத்தின் (Social Mobility) மூலம் அவர்கள் வேறு தொழில்களை நோக்கி இடம்பெயர்ந்து விடுவர். எனவே தேயிலைத் தோட்டங்களில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்கான ஆளணி இல்லாமல் போய்விடும்.

இந்த அம்சத்தின் காரணமாகவே இன்று மலையகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அத்தியாவசியமானதொன்றாகத் திணிக்கப்படுகின்றது. இவர்களிடம், “உனக்கு வருமானம் இல்லை” எவ்வாறு இத்தனை குழந்தைகளை வளர்க்கப்போகின்றாய், அநியாயமாக நோயிலும், பட்டினியிலும் சாகப்போகின்றனர்” என்று தோட்ட வைத்தியர் ( Estate Medical Officer), தாதி குறிப்பாக தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் ( Estate Welfare Officer) போன்றோர் “உளவள ஆலோசனை” (Counseling) மூலம் இவ் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால சந்ததியினரை இல்லாமல் செய்கின்றனர். “கொடியின் காய் கொடிக்குப் பாரமில்லை” என்பதுபோல தன் குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இல்லாமல் செய்து, நிறைய குழந்தைகள் பெறுவது கேவலம் என்ற நிலைக்கு அவர்களை மாற்றி விடுகின்றனர். அதேவேளை, கிராமப்புற சிங்கள மக்களும், முஸ்லிம் இனத்தவரும் மூன்றிற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதனையும் அல்லது தங்களுக்கு வேண்டியளவு குழந்தைகளைப் பெறுவதையும் நடைமுறையில் காணலாம். அவர்களுக்கென எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், மலையக மக்களின் குழந்தைப் பேறானது பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது. இதற்காக இவர்கள் ஒரு “டசின்” (12) அல்லது இரண்டு “டசின்” (24) குழந்தைகள் பெறவேண்டும் என்பது கருத்தல்ல. அதே சமயம் நான்கைந்து குழந்தைகள் பெறுவது சமூகத்திற்கு தீங்குமல்ல. இம்மக்களால் இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறவும், வளர்க்கவும் சக்தியிருக்கும்போது, அதைத் தடுப்பது ஒரு இன பாரபட்சமான செயல் என்றே கூற வேண்டும்.
இன்று தோட்டப்புறங்களில் இளைஞர், யுவதிகளுக்காக நடைபெற்றுவரும் பாலியல் உறவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மலையக சனத்தொகையை கட்டுப்படுத்துவதனையே நோக்காகக் கொண்டுள்ளன. இது நேரடியாக கூறப்படாமல், “எயிட்ஸ்” (HIV) வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பான உடலுறவு முறையைப் பற்றியே என்று வெளியில் கூறினாலும், மறைமுகமாகக் குடும்பக் கட்டுப்பாட்டையே சுட்டி நிற்கின்றது. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் யாதென்றால்,”எயிட்ஸ்” நோயானது பெருந்தோட்டப்புறப் பகுதிகளில் பெருவாரியாக இனங்காணப்படாமையும், அந்நோய் பெரும்பாலும் நகரத்திலேயே பரவிக்கொண்டிருக்கும் வேளையில் நகர்ப்புறங்களிலேயே விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்தரங்குகள் நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது. மாறாக பெருந்தோட்டங்களில் இவை நடத்தப்படுவதற்கான நியாயப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மலையகத்தைப் பொறுத்தவரை தற்போது குடிநீர், போஷாக்கு உணவு, சுத்தமான சூழல், பாடசாலை இடைவிலகல் போன்ற எத்தனையோ சமூகப்பிரச்சினைகள் இருக்குமிடத்து, அவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாமல் தனியே பாலியல் உறவில் மாத்திரமே கவனம் செலுத்துவதற்கான தேவை என்ன?

மலையக கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டிற்கு பிரசவத் தாய்மாரின் போஷாக்கின்மை பிரதான காரணங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால், இதனைத் தவிர்ப்பதற்கு போஷாக்கு உணவுத்திட்டங்கள், மக்களுக்கான சம்பள உயர்வு, குழந்தைப் பிறப்பு இடைவெளிக்காலத்தை கூட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குதல் என்பவற்றை அரசு மேற்கொள்ளலாம். அதனைவிடுத்து தனியே நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாடு (LRT) முறையின் மூலமே அப்பிரச்சினையை நிவர்த்தி செய்யலாம் என்பது தவறான கருத்தாகும். இந்நிலைமை தொடருமாயின், எதிர்காலத்தில் இலங்கை வரலாற்றின் ஏடுகளைத் திருப்பிப் பார்க்குமிடத்து மலையகத் தமிழர் என்ற இனம் இல்லாமல் இருக்கும்.

எனவே மரத்தைப் பற்றி நிற்கும் கொடிபோல் அல்லாமல், ஒரு மரமாக தனித்து நிற்பதற்கு மலையக சமூகத்தின் சனத்தொகையானது வளர்ச்சியடைய வேண்டும். பேரினவாதத்தின் இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு மலையகத்தில் கல்வி கற்ற சமூகம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு, அம்மக்களை பலவீனமானவர்களாகக் காட்டும் வறுமையை ஒழிப்பதற்கும், அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையவும் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுதல் அவசியமாகும். இவர்கள் பலவீனமானவர்கள் அல்ல என்று பேரினவாதிகள் நினைப்பதற்கு இம்மக்கள் விரைவாக பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

-எல். கமலேஸ்வரி-
நன்றி- தினக்குரல்

No comments: