மக்களை ஓரணியில் திரட்டுவது தான் நோக்கம் - முத்தப்பன் செட்டியார்
பி.ரவிவர்மன்
இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரே இலட்சிய நோக்குடனேயே இலங்கை- இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று முன்னணியின் தலைவரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான முத்தப்பன் செட்டியார் தெரிவித்தார். இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி என்ற புதியதோர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதன் அவசியம் என்னவென்று ஞாயிறு தினக்குரலுக்கு முத்தப்பன் செட்டியார் வழங்கிய விசேட செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள போது.
இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் என்ன?
இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள்,தெலுங்கர்கள், கன்னடர்கள், மேமன் சமூகத்தினர், குஜராத்திகள் உள்ளடங்கிய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து புதியதோர் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி எமது மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும்.
இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் இந்திய வம்சாவளி மக்கள் அடிப்படை அரசியல் வசதிகளின்றி பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். அதனை விட பாதுகாப்பு “கெடுபிடி” கைது, காணாமல் போதல் போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பதே எமது பிரதான நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்கான முதல்படியாகவே எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி சுயேச்சைக் குழு-5 இல் கண்ணாடி சின்னத்தில் களமிறங்கியுள்ளது.
பேரினவாத கட்சிகளுடன் கடந்த காலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களால் எமது சமூகத்திற்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. எனவே எமது சமூகத்தின் தனித்துவத்தை எதிர்காலத்தில் பேணிப் பாதுகாப்பதற்காக இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியை பலப்படுத்த முன்வர வேண்டும்.
பல்வேறு அரசியல் கட்சிகள், பெரும்பாலான தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில் உங்கள் புதிய அரசியல் செயற்பாட்டின் நோக்கமென்ன?
ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எமது மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். எமக்கான அரசியல் தளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம் பாராளுமன்றத்தில் குரலெழுப்புவதும் அறிக்கைகள் விடுவதாலும் எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. யதார்த்த பூர்வமாக சிந்தித்து எமது சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்பவர்கள் அதனால் எமது மக்களுக்கு கிடைத்த நன்மைகள் எதுவென்பதை இதுவரை சொல்ல முடியாதவர்களாகவேயுள்ளனர்.
தேர்தல் காலத்திலேயே உங்கள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றார்களே அது தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்?
தேர்தல் காலத்தில் மாத்திரம் புதிதாக தோற்றுகின்றவர்கள் என்ற கருத்தை சிலர் தமது அரசியல் சுயலாபங்களுக்காக முன்வைக்கலாம். அது உண்மையில்லை. எமது முன்னணியில் புத்திஜீவிகள்,எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் சாதாரண தரத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உள்ளனர். எமது இலட்சியம், சிந்தனை, நோக்கம் என்பன இந்திய வம்சாவளியை ஓரணியில் திரட்டி பேரம் பேசும் அரசியல் சக்தியொன்றை உருவாக்குவதேயாகும்.
இலங்கை இந்தி வம்சாவளி மக்கள் முன்னணியின் எதிர்கால அரசியல் செயற்திட்டங்கள் எவ்வாறாக அமையப் போகின்றது?
இலங்கை இந்திய காங்கிரஸ் 1939 ஜூலை 25 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக வீ.ஆர்.எம்.ஏ.லெட்சுமணன் செட்டியார் மற்றும் இணைச் செயலாளர்களாக ஏ.அஸீஸ், எச்.எம் தேசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்திய தேசபிதா மகாத்மாகாந்தி, பிரதமர் நேரு ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே அன்று இந்தியவம்சாவளி மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்கள் நலன் கருதியும் அவர்களை ஓரணியில் திரட்டவும் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு காலப்போக்கில் தொழிற்சங்கங்களாக மாற்றமடைந்து பிளவுபட்டு காலப்போக்கில் பல பிரிவுகளாக சிதறுண்டது. இவ்வாறு பிளவுண்டு சிதறுபட்ட அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் தமது அரசியல் நலன்கருதியே செயற்பட்டனரே தவிர இந்திய வம்சாவளி மக்கள் நலன்கருதி ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் செயற்படவில்லை. இவ்வாறு வளர்ச்சி பெற்ற தலைவர்கள் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து தமது சுயலாப அரசியலையே முதன்மைப்படுத்தி இந்த நிலையிலே புதியதோர் அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்க இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை கட்சிகளின் தயவில் அரசியல் நடத்துபவர்கள் அவற்றின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவேயுள்ளனர்.இந்த நிலையை மாற்றியமைக்கவே நாம் புதியதோர் அரசியல் களத்தை தோற்றுவித்துள்ளோம்.
No comments:
Post a Comment