அரசியலும் தொழிற்சங்கமும் இணையும்போது ஒரு பலமான சக்தி உருவெடுக்க வேண்டும். ஆனால் மலையகத்தைப் பொறுத்தவரையில் இது சாத்தியப்படவில்லை. சுயநலவாத முன்னெடுப்புகள் காரணமாக தொழிலாளர்களின் நலன்கள் பாதிப்படைந்துள்ளன என்று சிரேஷ்ட கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ் தெரிவித்தார். சமகால தொழிற்சங்கங்களின் போக்குகள் குறித்து கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; மலையக மக்கள் இன்னும் பல்வேறு உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நிறைவு செய்யப்படாத நிலையில் தேவைகளும் இன்னும் அதிகமுள்ளன.
இவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான முனைப்புகளும் அழுத்தங்களும் உரியவாறு இடம்பெறுகின்றனவா? என்பதில் திருப்தி கொள்ள முடியவிலலை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான இடத்தினை பெறுகின்றது. பல தொழிற்சங்கங்களுக்கு முன்னுதாரணமாகவும் இது விளங்கியுள்ளது. சாதாரண தொழிலாளர்களும் இத் தொழிற்சங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்துள்ளனர். தொழிலாளர்களின் சக்தியை மையப்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களையும் இ.தொ.கா. முன்னெடுத்தது.
மலையக மக்கள் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மலையக தொழிற்சங்கங்கள் நிலைமாற்றம் பெற்றன.
இத் தொழிற்சங்கங்கள் அரசியல் ஸ்தாபனங்களாகவும் உருமாற்றம் பெற்றன. அரசியலும் தொழிற்சங்கங்களும் இணைகையில் ஒரு பலமான சக்தி உருவாக வேண்டும். ஆனால் மலையகத்தைப் பொறுத்தவரையிலும் இது சாத்தியப்படவில்லை. தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தொழிற்சங்கங்கள் நிலைமாறி செயற்படுவதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கையின் தொழில் வழக்குகளில் மலையக தொழிற்சங்கங்கள் ஒரு காலத்தில் சிம்மசொப்பனமாக விளங்கின. தொழிற்சங்கம் என்றால் ஒரு அச்ச நிலை மேலோங்கிக் காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலைமையை காண முடியவில்லை. தொழிலாளர்களின் சாதாரணமான பிரச்சினைகளைக் கூட தீர்த்து வைக்க முடியாத வெற்றியினை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத நிலையில் சமகால தொழிற்சங்கங்கள் காணப்படுவது வருந்தத்தக்க விடயமாக உள்ளது.
தொழிற்சங்கங்களை உருவாக்குவதன் நோக்கமே அரசியல் களத்திற்குச்செல்ல ஆயத்தப்படுத்துவதாக இப்போதுள்ளது. தொழிற்சங்கத்தை மையப்படுத்தி அரசியலுக்குச்செல்லும் முனைப்புடன் பலர் செயற்படுகின்றனர். இதில் வெற்றியும் கண்டுள்ளனர். எனினும் அரசியலுக்குச்சென்ற பின் தொழிலாளர்களுக்கு இவர்கள் எந்தளவு நன்மை செய்கின்றனர் என்பது கேள்விக்குறியேயாகும். தொழிற்சங்கங்களுக்கு அதிகளவில் சந்தாப்பணம் வந்து சேருகின்றது. அரசியலில் தோல்வியடைந்தாலும் வெற்றியடைந்தாலும் தமக்குரிய வருவாயினை தொழிற்சங்கவாதிகள் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் தொழிலாளர்களின் பிரச்சினைகளை இவர்கள் பெரிதாகக்கண்டு கொள்வதே கிடையாது.
இலங்கையை பொறுத்தவரையில் தொழிற்சங்கங்களுக்கு சந்தாப்பணம் பெரியளவில் கிடைக்கின்றது. 60 ரூபாவில் இருந்து 145 ரூபா வரையிலும் தொழிற்சங்கங்களுக்கு சந்தாப்பணம் கிடைக்கின்றது. இது இன்னும் அதிகமாகவும் இருக்கலாம். தொழிற்சங்கங்கள் இந்த வருவாயை மையப்படுத்தி தம்மை வளர்த்துக்கொள்வதில் அக்கறை காட்டுகின்றன. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்கின்றார்கள். எனினும் தேர்தலின் பின்னர் பல அரசியல்வாதிகளினதும் பொய் முகத்தைக்கண்டுகொள்ளக்கூடியதாக உள்ளது.
இலங்கையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. குறிப்பாக வைத்தியர் தொழிற்சங்கம், ஆசிரியர் தொழிற்சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கம், விவசாயிகளின் தொழிற்சங்கம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத் தொழிற்சங்கங்கள் தங்களது நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள தேசிய ரீதியில் செயற்படுகின்றன. ஆனால் மலையக தொழிற்சங்கங்கள் தேசிய ரீதியாக செயற்பட முடியாத நிலையில் உள்ளன. தொழிலாளர்களின் நலன்களுக்கு எதனைச் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமையே மலையக தொழிற்சங்கங்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என்றார்.
|
No comments:
Post a Comment