பெருந்தோட்டப் புறங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று(24) இடம்பெற்றது. மலையக பெருந்தோட்டப் புறங்களில் கடந்த காலங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடனுதவி மூலமாக நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகள், முழுமையாக பூர்த்திசெய்யப்படாத நிலையில் உள்ளன. அவ்வாறு நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படாத வீடுகளை முழுமைப்படுத்துவதற்கான கடனுதவிகளை வழங்குவது தொடர்பிலும் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிக கடன் வழங்கி வீடுகளை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதுவரை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 3900 வீடுகளுக்கு 'பசுமைபூமி' வேலைத்திட்டத்தின் கீழ், காணி உரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக, தேசிய ரீதியில் கடனடிப்படையில் 25 வீடுகளைக் கொண்ட 200 கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்டபுறங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்படவிருக்கின்ற ஒரு தொகுதி(25வீடுகள்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 250,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக 250,000 ரூபாய் இனாமாகவும் அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினூடாக நிர்மாண பணிகளுக்கான நில தயார்படுத்தல், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கை பெறல் போன்ற ஆரம்பக்கட்ட வேலைகளுக்கு 90000 ரூபாய் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குறித்த வீடமைப்பு தொகுதிகளுக்கு மின்சாரம், பாதை வசதிகள், குடிநீர் மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத அரச சேவையாளர்கள், தோட்ட சேவையாளர்கள், தனியார்த்துறை சேவையாளர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் தகைமைக்கேற்றவாறு கடனடிப்படையில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலும் அதற்கான உதவிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான ஒன்றிணைந்த வேலைத்திட்டத்துக்காக தேசிய வீடமைப்பு அமைச்சும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சர்ப்பித்து அனுமதி பெறுவது தொடர்பாகவும் பேசப்பட்டது. இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா, அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பாலசூரிய, அதிகார சபையின் பொதுமுகாமையாளர் எச்.எம்.தயானந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நன்றி- தமிழ் மிரர்
No comments:
Post a Comment