தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை. நித்தம் தொழிலாளர்களுக்கு இருக்கும் இந்தப் பிரச்சினை அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் பேசும்பொருளாக இருக்கிறது. அதன்பின்னர் அது பேசாப் பொருளாக மாறி விடுகிறது. 'சம்பளப் பிரச்சினை' தலைப்பில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்களும், வெளியே வராத உண்மைகளும் ஏராளமாக இருக்கின்றன.
தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனரா என்ற சந்தேகத்துடனான வலி தினந்தோறும் வந்து, மறைகிறது. மலையக அரசியல்வாதிகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்களா என்ற சந்தேகமும் தற்போது வலுத்து வருகிறது. இதற்கு திடமான காரணங்களும் இருக்கின்றன. மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை எந்தவொரு தரப்பும் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்காது இந்த சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.
பலம்பொருந்திய தொழிற்சங்கங்களாகவும் பலம்பொருந்திய அரசியல் தலைவர்களாகவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் தரப்புக்கள் எவையும், சம்பளப் பிரச்சினை விவகாரத்தில் மிகுந்த மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருகின்றன. இது, சந்தா செலுத்தி, வாக்களித்த பெருந்தோட்ட தொழிலாளர் தோழர்களையும் அவர்தம் குடும்பங்களையும் பெரும் வேதனையிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் காலத்தில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுப்பதாக உரக்கக் குரல் கொடுத்த தலைமைகள், இன்று அதனை மறந்து விட்டார்களா அல்லது மறந்ததைப் போல நடிக்கின்றார்களா என கேள்வி எழும்புகிறது.
அண்மையில் தனியார் துறை ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் நாடாளுமன்றில் இரண்டு சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம், 2500 ரூபா கொடுப்பனவு என்பன தொடர்பிலானவையே அவை. அடிப்படைச் சம்பளமாக 10,000 ரூபா நிர்ணயிக்கப்பட்டதுடன், தனியார் துறையினருக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்குவதும் சட்ட மூலமாக்கப்பட்டது. தொழிலாளர் ஒருவரின் ஆகக் குறைந்த நாள் சம்பளமாக 400 ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தனியார் துறை ஊழியர்களுக்கான 2,500 கொடுப்பனவு இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளதாகவும் கடந்த ஆண்டு முதல் 1500 ரூபாவும், இந்த ஆண்டு முதல் 1000 ரூபாவும் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு சம்பள கொடுப்பனவு வழங்காத தொழில்தருனருக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனவும் அபராதமாக 25,000 ரூபாவும், ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட முடியும் எனவும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்திருந்தார்.
இந்த சட்ட மூலத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் நாடாளுமன்றில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதிமொழி வழங்கியதுடன், பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரிெயல்லவும் இதனை வழிமொழியும் வகையில் நாடாளுமன்றில் 2,500 கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
எனினும், இந்த சம்பளக் கொடுப்பனவு இதுவரையில் எந்தவொரு தோட்டத் தொழிலாளிக்கும் வழங்கப்படவில்லை.இவ்வாறான நிலையில், பல முக்கிய தகவல்களையும், தரவுகளையும் ஒப்பீடுகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
2500 ரூபா சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படுவது தொழிலாளர்களுக்கு பாதக நிலைமையை ஏற்படுத்தும் என தொழிற்சங்கத்தில் இருக்கும் விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தற்போது வரவு கொடுப்பனவாக 140 ரூபா ரத்து செய்யப்பட்டு, 2,500 ரூபா வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது, கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் வழங்கும் வேலை நாட்களில் 75 வீதமான நாட்கள் வரவை பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 140 ரூபா வழங்கப்படுகிறது.
அதாவது சராசரியாக 25 நாட்கள் வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு சுமார் 3,500 ரூபா கிடைக்கும். எனினும், இந்த 2500 ரூபா கொடுப்பனவு வழங்கினால் வரவு கொடுப்பனவை நிறுத்த நேரிடும் என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளதாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வரவு கொடுப்பனவு நிறுத்தப்பட்டால் அது தொழிலாளர்களுக்கு பாரிய இழப்பாகவே அமையப் போகிறது. இந்த விவகாரம் குறித்து முக்கியமான மலையகப் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றன. இந்த மௌனம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.
இதேவேளை, 2015 மார்ச் மாதம் 31 திகதியுடன் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியனவே இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக 450 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 30 ரூபாவும், 75 வீதம் வரவிற்காக கொடுக்கப்படும், 140 ரூபா உள்ளடங்களாக 620 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கொழுந்திற்கும் சுமார் தலா 30 ரூபா அளவில் வழங்கப்படுகிறது.இந்தச் சம்பளம் 2013ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டுமென்ற போதிலும், ஒப்பந்தம் காலாவதியாகி ஓராண்டாகியும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.
பொருட்கள், சேவைகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. எனினும், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய வகிபங்காளர்களில் ஒருவராக திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மலையக அரசியல் தலைமைகளோ, மத்திய அரசாங்கமோ அல்லது வேறும் எந்தவொரு தரப்பும் உரிய முறையில் பேசாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
'தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடியாது' என முதலாளிமார் சம்மேளனம் உறுதியாக கூறிவிட்டதாக தெரியவருகிறது. முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்புக்களின் போதே முதலாளிமார் சம்மேளனம் இந்த கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக உள்ளிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்புக்களும், கூட்டு ஒப்பந்தத்தில் பங்குபற்றதாத அரசியல் தொழிற்சங்க சக்திகளும் பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரத்தை தேர்தல் வியூகமாகவும், சந்தாவை அதிகரித்துக்கொள்ளும் யுக்தியாகவுமே கையாண்டு வருகின்றது என்பது இன்னுமொரு கசப்பான உண்மையாகும். இதற்குப் பதில் தருவதில் மலையக பெரும் தலைவர்கள் சிக்கித் தவிப்பதாகவும் உணர முடிகிறது.
இருந்த போதிலும், 'கறிவேப்பிலையாக' தேவைக்கு மட்டும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. அதனால், சம்பள விவகாரம் குறித்து பல்வேறுபட்ட வெளிவராத, பேசப்படாத, புரியாத, புரியவைக்கப்படாத என பல தகவல்களையும் விவாதங்களையும், வெளியே கொண்டுவர குருவி தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக சம்பள அதிகரிப்பு விவகாரம் 2500 ரூபா கொடுப்பனவு குறித்து மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கள் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.. இனிமேலும் தேவைக்கு மட்டும் 'கறிவேப்பிலையாக' பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.