Friday, February 19, 2016

சம்பள சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்க வேண்டும்

இலங்கையில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான புதிய சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள கொடுப்பனவுச் சட்டம் பொதுச் சட்டமாகக் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதில் வீட்டுப் பணியாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கோரி அந்தத் தொழிலாளர்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த புதிய சட்டம் தொடர்பில் அரச வர்த்தமானியில் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதில் நியாயமற்ற விதத்தில் வீட்டுப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் தொழிலாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் சரியான முறையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு போதுமானதல்ல என்ற காரணத்தினாலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும், வீட்டுப் பணியாளர்களை ஏனைய தொழிலாளர்களை போன்று அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கென தனியான தொழிற்சங்கம் ஒன்று செயற்படுவதையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றது. தொழிலாளர்கள் தொடர்பிலான சர்வதேச சட்ட நியமங்களையும் அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்று வீட்டுப் பணியாளர்களின் தொழிற்சங்கம் கூறுகின்றது.

'உள்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டுவேலைத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றார்கள். அவர்களின் சம்பளம் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கென சட்ட ரீதியான குறைந்தபட்ச சம்பளச் சட்டம் இல்லாத காரணத்தினால் அவர்களின் குடும்பங்கள் இதனால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றன' என்றார் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மேனகா கந்தசாமி.

'அவர்களுக்கு நியாயம் கிடைக்கத்தக்க வகையில், வீட்டுவேலைத் தொழிலாளர்களையும் இந்தச் சட்டத்தில் உள்வாங்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்' என்றார் மேனகா கந்தசாமி.இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் மேனகா கந்தசாமி கூறினார்.

No comments: