ஊவா மாகாணத்தில் தமிழ் கல்விக்கென்று தனியானதொரு அலகு ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்க் கல்வித்துறையில் முன்னேற்றகரமான மாற்றங்களை எதிர்கொள்ள முடியுமென்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ஊவா மாகாண தமிழ்க் கல்வித்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில், கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டு, அதனடிப்படையில் செயல்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டேன். கடந்த ஒரு மாதகாலமாக எடுத்த முயற்சி, தற்போது பயனளித்துள்ளது. இக்கலந்துரையாடலில் கல்வித்துறைசார் சகலரும் பங்கு கொண்டிருப்பது கண்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
மாகாணத்தின் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே அமைய வேண்டுமென்று, எம்மால் விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு, தற்காலிகத் தீர்வுகளே கிடைக்கின்றதேயன்றி, நிரந்தரத் தீர்வுகள் கிடைப்பதில்லை. ஒரு சில கடிதங்கள் தமிழ் மொழியில் அனுப்பப்பட்டாலும், காலப் போக்கில் அது செயல்படுவதில்லை.
மாகாண தமிழ்க் கல்வியில் ஏற்படும் பின்னடைவே, ஊவா மாகாணம் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றதற்கு காரணம். தமிழ்க் கல்வித்துறையும் வளர்ச்சி பெற்றிருக்குமேயானால், நாட்டின் இரண்டாம் இடத்திற்கு, ஊவா மாகாணம் வந்திருக்கும் என்றார்.
அடுத்து, ஊவா மாகாண சபை உறுப்பினரும், ஊவா மாகாண தமிழ் கல்வித்துறைக்கு பொறுப்பாளருமான ஆ.கணேசமூர்த்தி தமதுரையில், பல்கலைக்கழகம் பிரவேசிக்கும் மாணவர் தொகையில் அதிகரிப்பு இடம்பெறவேண்டியது அதிமுக்கியமாகும். அந்நிலையினை ஏற்படுத்த அதிபர், ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புக்களுடன் செயல்படல் வேண்டும்.
தமிழ்மொழி மூலம் கற்றுக்கொள்ளக்கூடிய தொழில்நுட்பக் கல்லூரியொன்று அமைய வேண்டியதும் அவசியமாகும். பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, இடைவிலகலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அத்துடன், முன்பள்ளிகளின் தரம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment