மலையகத்திற்கென்று தனியானதொரு பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும். இதனை தடுக்க நினைப்பவர்கள் சமூகத்தின் துரோகிகளாவர் என்று பேராசிரியர் சோ.சந்திரசேகரன் மலையகத்திற்கு தனியான பல்கலைக்கழகமொன்று அவசியம்தானா? என்பது தொடர்பாக கருத்துக்கேட்ட போது இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், மலையகத்திற்கு தனியானதொரு பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதன் அவசியத்தை நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றேன். இது தொடர்பாக அரசியல்வாதிகளையும் தெளிவுபடுத்தி இருக்கின்றேன். மலையகத்தைச் சேர்ந்த பல புத்திஜீவிகளும் இதனை வரவேற்றுப் பேசியுள்ளனர். அமரர் பெ.சந்திரசேகரனினால் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆலோசனைக்குழுவும் இது பற்றி தீவிரமாக ஆராய்ந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிலைமாறி பல்கலைக்கழக கல்லூரி தொடர்பிலும் இப்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் தெரிந்த விடயமாகும்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிழககு பல்கலைக்கழகம் போன்று மலையகத்திற்கு தனியான ஒரு பல்கலைக்கழகம் தேவை என்பதனை பெரும்பான்மை சிங்களவர், சிங்கள மக்கள் கூட எதிர்க்கவில்லை. எனினும் மலையகத்தைச் சேர்ந்த சில விஷமிகள் இதனை எதிர்த்து வருகின்றனர். இன ரீதியாக பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இத்தகையோரை மலையக சமூகத்தின் துரோகிகளாகவே கருதவேண்டி இருக்கின்றது. இவர்கள் தமது நிலையினை மாற்றிக் கொண்டு சமூக முன்னேற்றம் கருதி செயற்பட வேண்டும்.
மலையகத்துக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படுமானால் மலையக சமூகத்தின் இனத்துவ அடையாளம் பாதுகாக்கப்படுவதோடு மேலும் பல நன்மைகளும் உருவாகும் நிலை ஏற்படும். மலையக நாட்டார் பாடல்கள், மலையகக் கல்வி, மலையக கலாசாரம், மலையக சிந்தனை, மலையக பாரம்பரியம் என்ற ரீதியில் மலையகம் தொடர்பான பல்வேறு இனத்துவ அடையாளங்களையும் தனியானதொரு பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
காமன் கூத்து உள்ளிட்ட மேலும் பல தனித்துவமான விடயங்களை வேறு பல்கலைக்கழக செயற்பாடுகளின் ஊடாக நாம் எதிர்பார்க்க முடியாது. அதேவேளை மலையக பல்கலைக்கழகத்தின் மூலமாக இத்தகைய விடயங்களை நாம் உள்வாங்கிக் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பதனையும் குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது. மேலும் மலையகம் தொடர்பான கற்கை நெறிகளை நாம் மலையகத்திற்கென்று தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்படும் பட்சத்தில் ஏற்படுத்திக் கொள்ள முடியும். சமூக அபிவிருத்திக்கு இத்தகைய நிலைமைகள் பெரிதும் உந்து சக்தியாக அமையும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.
தனியான பல்கலைக்கழகம் அமைக்கும் நடவடிக்கைகள் தாமதமாகும் சந்தர்ப்பத்தில் தனியான பல்கலைக்கழக கல்லூரி ஒன்றினை மலையகத்துக்கென்று அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதில் தப்பில்லை. ஆனாலும் கல்லூரியைக் காட்டிலும் தனியான பல்கலைக்கழகமே காலத்தின் தேவையாகும் என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது.
தனியான பல்கலைக்கழகம் மலையகத்துக்கென்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் மலையக அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இவ்விடயத்தில் களையப்படுதல் வேண்டும்.
ஏனைய சமூகங்களைப் போன்று நாம் பல்வேறு வெற்றி இலக்குகளையும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு தனியான பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்கும் என்பது உறுதியாகும். வீணான சாட்டுக்களைக் கூறி தனியான பல்கலைக்கழகம் அமைக்கும் நிலைமை இழுத்தடிக்கப்படுமானால் எதிர்கால சந்ததியினர் நிச்சயம் பழி சொல்வர் என்பதனையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். சிந்தித்து செயல்படுவோம் என்றார்.
No comments:
Post a Comment